×

மருத்துவத்துறை முன்னோடி டாக்டர் ராமமூர்த்தியை போன்ற மனிதாபிமான மருத்துவ சமுதாயம் உருவாக உறுதியேற்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துரை

சென்னை: மருத்துவத்துறையின் முன்னோடியாகவும், மனிதநேயப் பண்பாளராகவும் திகழ்ந்த டாக்டர் ராமமூர்த்தியின் நூற்றாண்டில், அவரைப் போன்ற மனிதாபிமான மருத்துவ சமுதாயம் உருவாக உறுதியேற்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலிக் காட்சி வாயிலாக நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் பி.ராமமூர்த்தியின் நூற்றாண்டு விழாவையொட்டி வெளியிட்டுள்ள வாழ்த்துரை: நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் பி.ராமமூர்த்தியின் நூற்றாண்டு விழா கொண்டாடுவதையும், அதற்காக மிகச் சிறப்பான நினைவுத்தொகுப்பு வெளியிடப்படுவது மகிழ்ச்சிக்குரியது.

தலைவர் கலைஞரின் இலக்கிய ஆளுமை, எழுத்துநடை, ஆட்சி நிர்வாகத் திறன் மீது டாக்டர் ராமமூர்த்தி மதிப்பு கொண்டிருந்தார். கலைஞர் மீது மட்டுமல்ல, என் மீதும் மருத்துவர் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். நெருக்கடி நிலைக் காலத்தில், மிசா சட்டத்தின்கீழ் நான் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தேன். என்னைப் பார்ப்பதற்காக அனுமதி பெற்று வந்தவர் தான் மருத்துவர் ராமமூர்த்தி. எனது உடல்நிலையை கவனித்துக் கொண்டார்.

மருத்துவ உலகத்தை கடந்து, அவருக்கு சமூக ஆர்வமும், நாட்டு மக்கள் மீதான அக்கறையும் அதிகமாக இருந்தது. இருசக்கர வாகனங்களில் அதிவேக பயணத்தின் காரணமாக பெரும் விபத்தையும், உயிரிழப்பையும் சந்தித்து வருவதை அறிந்து, தலைக்கவசத்தை கட்டாயமாக்க வேண்டும் என்று முதல்வர் கலைஞரின் வீட்டிற்கே வந்து வாதாடினார். எதையும் கட்டாயமாக்கினால் கெட்டப் பெயர் வந்துவிடும், உள்நோக்கம் கற்பிப்பார்கள் என்று முதல்வர் கலைஞர் அதன் இன்னொரு பக்கத்தை எடுத்துச் சொன்னார். மனித உயிரை காப்பதைவிட விமர்சனங்கள் பெரிதல்ல என்று வலியுறுத்தியவர் டாக்டர் ராமமூர்த்தி.

அந்த இடத்தில் மருத்துவர் என்பதை கடந்து மனிதாபிமான காவலராக அவர் காட்சியளித்தார். புகழ்பெற்ற சென்னை மருத்துவக் கல்லூரியின் முதல்வராகவும் பொறுப்பு வகித்துள்ளார். இந்திய குடியரசு தலைவர்களாக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன், வி.வி.கிரி ஆகியோராலும், இந்தியப் பிரதமர்களான ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி ஆகியோராலும் மதிக்கப்பட்ட ஆளுமையாக இருந்துள்ளார். மருத்துவத்துறை முன்னோடியாகவும், மனிதநேயப் பண்பாளராகவும் திகழ்ந்த டாக்டர் ராமமூர்த்தியின் நூற்றாண்டில் அவரது வாழ்வும் பணியும் சிறப்பான முறையில் நினைவுகூரப்பட எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரைப் போன்ற மனிதாபிமான மருத்துவ சமுதாயம் உருவாக உறுதியேற்போம்.

The post மருத்துவத்துறை முன்னோடி டாக்டர் ராமமூர்த்தியை போன்ற மனிதாபிமான மருத்துவ சமுதாயம் உருவாக உறுதியேற்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துரை appeared first on Dinakaran.

Tags : Dr. ,Ramamurthy ,Chief Minister ,M. K. Stalin ,Chennai ,
× RELATED பயிர்கள் நன்றாக வளர்ந்து அதிக மகசூல்...