×

கைதிகள் நடத்தும் பெட்ரோல் பங்க் ரூ.6 கோடி வருவாய்: சோலார் பேனலால் ரூ.15 லட்சம் மின்கட்டணம் மிச்சம்

தமிழ்நாட்டில் 9 மத்திய சிறைகள், 9 மாவட்டச் சிறைகள், 95 துணை சிறைகள், 3 பெண்கள் தனிச்சிறைகள், 12 சிறுவர் சீர்திருத்த பள்ளிகள் என மொத்தம் 138 சிறைகள் உள்ளன. இந்த சிறைச்சாலைகளில் சுமார் 22 ஆயிரம் பேரை அடைப்பதற்குரிய கட்டமைப்புகள் உள்ள நிலையில், 14 ஆயிரம் கைதிகள் வரை அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 70 சதவீதம் பேர் விசாரணை கைதிகளாகவும், 30 சதவீதம் பேர் தண்டனை கைதிகளாகவும் உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சிறைச்சாலைகள் என்பது தண்டனைக்குரிய இடங்களாக இல்லாமல் சீர்திருத்தும் பள்ளிகளாக மாற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. அதன்படி தமிழ்நாட்டின் சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை சீர்திருத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கைதிகள் விடுதலையான பிறகு அவர்களது எதிர்காலம் பாதிக்கப்படாமல், சக மனிதர்களை போல வாழ்வதற்காக அவர்களுக்கு பல்வேறு தொழில்கள் கற்றுக்கொடுக்கப்படுகிறது.

அதன்படி 9 மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்களில் நன்னடத்தை கைதிகள் ஷூ தயாரிப்பு, தையல், சோப்பு மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பது போன்ற சிறு, குறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் போலீசாருக்கு தரமான ஷூ, சீருடை விற்பனை செய்யப்படுவதோடு, கைதிகளின் பொருட்கள் சந்தைப்படுத்தப்படுகிறது. மேலும் மத்திய சிறையில் உள்ள காலி இடங்களை சீரமைத்து விவசாயத்திலும் நன்னடத்தை கைதிகள் ஈடுபடுகின்றனர். இதன் மூலம் கிடைக்கும் விளைபொருட்கள் சிறை உணவகங்களில் பயன்படுகிறது. விளைச்சல் அதிகரித்தால், விளைபொருட்கள் விற்பனையும் செய்யப்படுகிறது. இதுபோன்ற நடவடிக்கைகளால் சிறையில் இருந்தபடியே கைதிகள் வருவாய் ஈட்டுவதோடு, மனநிலையில் மாற்றம் ஏற்படுகிறது. இதன் மூலம் சிறைகளில் கைதிகளிடையே ஏற்படும் மோதல் போக்கும் தவிர்க்கப்படுவதாகவும் சிறைச்சாலைகள் சீர்திருத்த பள்ளிகளாக மாறி வருவதாகவும் சிறைத்துறை அதிகாரிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் நன்னடத்தை கைதிகளே இயக்கும் பெட்ரோல் பங்க்குகளை திறக்க கடந்த 2014ல் தமிழ்நாடு சிறைத்துறை முடிவு செய்தது. இதற்கான திட்டம் சிறைத்துறையால் தயாரிக்கப்பட்டு தமிழ்நாடு அரசின் உள்துறை அனுமதிக்கு அனுப்பப்பட்டது. ஆனால், பாதுகாப்புக் காரணங்களால் உள்துறையின் அனுமதி கிடைக்காமல் இருந்தது. இதையடுத்து கைதிகளின் நலன் கருதி சிறைத்துறை அதிகாரிகள், இத்திட்டத்துக்கு மீண்டும் புத்துயிர் கொடுத்து, தமிழ்நாடு உள்துறை அதிகாரிகளிடம் சாதக அம்சங்களை எடுத்துரைத்து அனுமதி பெற்றனர். இதையடுத்து, தமிழ்நாட்டில் உள்ள 9 மத்திய சிறைகளில் நன்னடத்தை கைதிகள் நடத்தும் பெட்ரோல் பங்க்குகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் முதற்கட்டமாக சென்னை புழல், வேலூர், பாளையங்கோட்டை, கோவை, புதுக்கோட்டை ஆகிய 5 இடங்களில் பெட்ரோல் பங்க் கடந்த 2019 முதல் தொடங்கி செயல்பட்டு வருகிறது. இந்த பெட்ரோல் பங்க்கில் வேலை செய்வதற்கு சிறையில் நன்னடத்தை கைதிகள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு பயிற்சி வழங்கி, தற்போது, சிறை பங்க்கில் வேலை செய்து வருகின்றனர். இந்த பெட்ரோல் பங்க்குகள் மூலம் ஆண்டுக்கு ரூ.6 கோடி வரை வருவாய் கிடைப்பதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்த சூழலில், கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை புழல் சிறையில் அம்பத்தூர் சாலையையொட்டி பெண் கைதிகள் நடத்துவதற்கான மேலும் ஒரு பெட்ரோல் பங்க் தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுதவிர தமிழகத்தில் புதிதாக 5 இடங்களில் சிறை நன்னடத்தை கைதிகள் நடத்தும் பெட்ரோல் பங்க்குகள் திறப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கைதிகள் நடத்தும் பெட்ரோல் பங்க்குகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சோலார் பேனல் அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இதனால் அவர்களின் பெட்ரோல் பங்க்குகளுக்கு ஆண்டுதோறும் ரூ.15 லட்சம் வரை மின் கட்டணம் மிச்சப்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோன்று நன்னடத்தை கைதிகள் வருவாய் ஈட்டி வரும் நிலையில், சமீபமாக எலக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் பெட்ரோல் பங்க்குகளில் எலக்ட்ரிக் சார்ஜிங் பாயிண்ட்டுகள் அமைக்க அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகளும் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.

* சிறைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டுடன் இணைந்து, தமிழ்நாட்டில் அரசு துறையில் உள்ள கூட்டுறவு மற்றும் சிறைத்துறை சார்பில் பெட்ரோல் பங்க்குகள் இயக்கப்படுகிறது. தற்போதுள்ள வாகனங்களின் எண்ணிக்கையில் 25 சதவீதம் வரை எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாட்டில் இருப்பதாக தெரியவருகிறது. தொடர்ந்து எலக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளதால், சிறை பெட்ரோல் பங்க்குகளில் எலக்ட்ரிக் சார்ஜிங் பாயிண்ட் செயல்பாட்டுக்கு கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. அதன்படி சிறைத்துறை சார்பில் இயங்கும் பெட்ரோல் பங்க்கில் தமிழக அரசின் உதவியோடு எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் பாயிண்ட் அமைக்கப்படுகிறது. இதற்கு தேவையான கிலோ வாட் மின்சாரம் குறித்து மின்வாரிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதை தொடர்ந்து மின் இணைப்புக்கான பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகள் முடிந்து விரைவில் எலக்ட்ரிக் சார்ஜிங் பாயிண்ட் பயன்பாட்டிற்கு வர உள்ளது. இதற்கான கட்டண விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்’ என்றனர்.

* வேலூரில் மீண்டும் சிறை உணவகம்

மத்திய சிறைகளில் நன்னடத்தை கைதிகள் மூலம் உணவகம் நடத்தப்பட்டு வந்தது. இதில் தினமும் ஏராளமான பொதுமக்கள் உணவருந்தினர். இதன் மூலம் வருவாய் கிடைத்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக சிறை உணவகங்கள் 2 ஆண்டுகளாக மூடப்பட்டது. ஊரடங்கு முடிவடைந்ததும் சிறைகளில் மீண்டும் உணவகங்கள் செயல்பாட்டுக்கு வந்தது. ஆனால், வேலூர் மத்திய சிறை எதிரே கைதிகள் நடத்திய உணவகம் செயல்பாட்டுக்கு வராமல் பாழடைந்தது. தற்போது உணவகம் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. விரைவில் உணவகம் பயன்பாட்டுக்கு வரும் என வேலூர் சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post கைதிகள் நடத்தும் பெட்ரோல் பங்க் ரூ.6 கோடி வருவாய்: சோலார் பேனலால் ரூ.15 லட்சம் மின்கட்டணம் மிச்சம் appeared first on Dinakaran.

Tags : -run petrol station ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...