×

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் சிலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் திருவுருவச் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்று திறந்து வைத்தார். தமிழ்நாட்டின் 2021-22ம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத் துறை மானியக் கோரிக்கையில், இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானியாகவும், இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு பெரும் வழிகாட்டியாகவும் திகழ்ந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமுக்கு சென்னை, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் திருவுருவச் சிலை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

1931ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15ம் நாள், ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் ஜைனுலாப்தீன் மற்றும் ஆஷியம்மா ஆகியோருக்கு மகனாக ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் பிறந்தார். 1955ம் ஆண்டு தன்னுடைய விண்வெளி பொறியியல் படிப்பை சென்னை எம்.ஐ.டி-யில் தொடங்கிய அப்துல் கலாம், பின்னர் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார். ஒன்றிய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் வானூர்தி அபிவிருத்தி பிரிவில் விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையை தொடங்கிய அப்துல் கலாம், பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (இஸ்ரோ) தனது ஆராய்ச்சிப்பணிகளை தொடர்ந்து, துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (எஸ்எல்வி) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார்.

மேலும், எஸ்எல்வி-3 ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-1 என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார். அவரது வியக்கதக்க செயலைப் பாராட்டி ஒன்றிய அரசு இவருக்கு 1981ம் ஆண்டு “பத்ம பூஷன்” விருது வழங்கி கவுரவித்தது. 1963ம் ஆண்டு முதல் 1983ம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர், 1998ம் ஆண்டு பொக்ரான் அணு ஆயுத சோதனையில் முக்கிய பங்காற்றியுள்ளார். ‘இந்தியாவின் ஏவுகணை நாயகன்’ என்றும் ‘அணுசக்தி நாயகன்’ என்றும் அவர் போற்றப்பட்டார்.

இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக ஜூலை 25ம் நாள் 2002ல் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் பதவியேற்றார். 2007ம் ஆண்டு வரை குடியரசு தலைவராக இருந்த இவர் ‘மக்களின் ஜனாதிபதி’ என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். மாணவர்களிடம் மிகுந்த அன்பு கொண்ட டாக்டர் அப்துல் கலாம், “கனவு காணுங்கள், அந்தக் கனவு உறக்கத்தில் வரும் கனவாக இருக்கக் கூடாது. உறக்கத்தை விரட்டும் கனவாக இருக்க வேண்டும்” என்று மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டினார். அப்துல் கலாம் அக்னி சிறகுகள், இந்தியா 2020 போன்ற பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.

இத்தகைய பல்வேறு சிறப்புகளை கொண்ட ஏ.பி.ஜெ.அப்துல் கலாமுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில், சென்னை, கிண்டி, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் முழு உருவ திருவுருவச் சிலையை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். அப்துல் கலாமின் பிறந்த நாளில் இந்த சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். அப்துல் கலாமின் முழு உருவச்சிலை ரூ.22 லட்சம் மதிப்பில் 7 அடி உயரத்தில் வெண்கலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில், அமைச்சர்கள் க.பொன்முடி, எ.வ.வேலு, மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, விருகம்பாக்கம் எம்எல்ஏ ஏ.எம்.வி.பிரபாகர ராஜா, சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், பொதுப்பணித் துறை முதன்மை செயலாளர் பி.சந்திரமோகன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் த.மோகன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

*படித்த இளைஞர் பட்டாளம் கலாமின் நம்பிக்கையை காப்பாற்றும்
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: பெருமைமிகு அரசுப் பள்ளியில் பயின்று தனது அறிவுத்திறத்தால் நாட்டின் முதல் குடிமகனான அறிவியலாளர் அப்துல் கலாமின் பிறந்தநாளில், அவர் பயின்று-பயிற்றுவித்த அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அவரது திருவுருவச் சிலையை திறந்து வைத்தேன். படித்து முன்னேறும் இந்த இளைஞர் பட்டாளத்தின் தன்னம்பிக்கை, அப்துல் கலாமின் நம்பிக்கையை நிச்சயம் காப்பாற்றும்! அறிவியல் பார்வையோடு உலக அரங்கில் இந்தியா சிறந்து விளங்கும்! இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

The post சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் சிலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Former President ,Abdul Kalam ,Anna University ,Chennai ,Chief Minister ,M.K.Stalin ,A.P.J. ,Chennai Anna University ,
× RELATED சூப்பர்சோனிக் டார்பிடோ ஏவுகணை சோதனை வெற்றி