×

11 லட்சம் வடக்கு பகுதி மக்கள் வெளியேறுவதற்கான கெடு முடிந்தது; காசாவை கைப்பற்ற இஸ்ரேல் மும்முனை தாக்குதல்: போர் தீவிரமாவதால் இஸ்லாமிய நாடுகள் அவசர ஆலோசனை

ஜெருசலேம்: வடக்கு காசாவில் இருந்து 11 லட்சம் மக்கள் வெளியேறுவதற்கான கெடு நேற்றுடன் முடிந்த நிலையில், காசா மீது மும்முனை தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி உள்ளது. ‘ஹமாஸ்’-இன் கண்ணிவெடியை தகர்க்கும் ‘டெடி பீர்’ புல்டோசர்கள் களம் இறங்கியுள்ளன. உச்சகட்ட போர் தீவிரமாவதால், இஸ்லாமிய நாடுகளின் அவசர ஆலோசனை கூட்டம் வரும் 18ம் தேதி நடக்கிறது.

கடந்த 7ம் தேதி பாலஸ்தீன ‘ஹமாஸ்’ தீவிரவாத அமைப்பினர் இஸ்ரேல் மீது நடத்திய பயங்கரவாத தாக்குதலால் 250 பேர் கொல்லப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக ஹமாஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள காசா மீது இஸ்ரேல் கடுமையான வான்வெளி தாக்குதலை நடத்தியது. கடந்த ஒரு வாரமாக நடக்கும் இந்த போரில், இதுவரை இஸ்ரேல் தரப்பில் 1,300 பேரும், ஹமாஸ் மற்றும் பாலஸ்தீனியர் தரப்பில் 2,230 பேரும் கொல்லப்பட்டனர். பாலஸ்தீனத்தின் வடக்கு காசா பகுதியில் ஹமாஸ் தீவிரவாதிகளின் முகாம்கள் உள்ளன. அவற்றை முழுமையாக அழிக்க இஸ்ரேல் ராணுவம் தரைவழி தாக்குதல் நடத்த முடிவு செய்துள்ளது. இதற்காக வடக்கு காசா பகுதியில் வசிக்கும் 11 லட்சம் மக்கள் 24 மணி நேரத்தில் தெற்கு காசா பகுதிக்கு செல்லுமாறு இஸ்ரேல் ராணுவம் கெடு விதித்தது.

இந்த கெடு நேற்று காலை 6 மணியுடன் நிறைவடைந்தது. எனினும் மனிதாபிமான அடிப்படையில் நேற்று மாலை 4 மணி வரை (இந்திய நேரப்படி மாலை 6.30 மணி) வடக்கு காசா பகுதி மக்கள் பாதுகாப்பாக வெளியேற காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டது. இதன்படி சுமார் 4 லட்சம் மக்கள் வடக்கு காசாவில் இருந்து வெளியேறி தெற்கு காசாவில் தஞ்சமடைந்து உள்ளனர். கார்கள், கழுதை வண்டிகள் மற்றும் பாதசாரிகளாக அவர்கள் தெற்கு காசாவை சென்றடைந்தனர். பொதுமக்கள் இடம் பெயர்ந்தபோது இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதல்களில் 70 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.காலக்கெடு நிறைவடைந்த நிலையில், காசா முனை பகுதிக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று சென்றார். அங்கு முகாமிட்டுள்ள இஸ்ரேலிய வீரர்களிடம் அவர் பேசும்போது, ‘அடுத்த கட்டத்துக்கு நாம் தயாராகிவிட்டோம்’ என்று தெரிவித்தார். மூத்த தளபதிகளுடன் கலந்துரை யாடினார். தொடர்ந்து பாலஸ்தீனத்தின் வடக்கு காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நேற்று இரவு தரைவழி தாக்குதலை தொடங்கியது. சுமார் ஒரு லட்சம் இஸ்ரேல் வீரர்கள், 300 பீரங்கிகள் வடக்கு காசா பகுதியில் படிப்படியாக முன்னேறி வருகின்றனர். வீடுவீடாக சென்று தீவிரவாதிகளை சல்லடை போட்டு தேடி வருகின்றனர்.

வடக்கு காசா எல்லைப் பகுதிகள் முழுவதும் ஹமாஸ் தீவிரவாதிகள் கண்ணிவெடிகளை புதைத்து வைத்துள்ளனர். இவற்றை எதிர்கொள்ள இஸ்ரேல் ராணுவம், ‘டெடி பீர்’ என்றழைக்கப்படும் அதிநவீன புல்டோசர்களை முன்வரிசையில் நிறுத்தி உள்ளது. எதிரிகளை சுட்டு வீழ்த்த தானியங்கி துப்பாக்கிகள், சிறிய ரக குண்டுகளை வீசும் பீரங்கி அமைப்புகள், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசும் கருவிகள் உள்ளிட்டவை புல்டோசரில் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த ஆயுதங்கள் மூலம் எதிரிகள் மீது தாக்குதல் நடத்தி கொண்டே புல்டோசர்கள் முன்னேறி செல்லும். அனைத்து கட்டிடங்களையும் இடித்து தரைமட்டமாக்கும்.

‘டெடி பீர்’ புல்டோசர்கள் முன்னே செல்ல இஸ்ரேல் ராணுவ வீரர்கள் வடக்கு காசா பகுதியின் பல்வேறு பகுதிகளில் நுழைந்து ஹமாஸ் தீவிரவாதிகளின் முகாம்கள், கட்டிடங்களை தரைமட்டமாக்கி வருகின்றனர். இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ஜோனதான் கூறுகையில், ‘பாலஸ்தீனத்தில் ஹமாஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய 1,000 இடங்கள் மீது தாக்குதல்களை நடத்தி உள்ளோம். காசா பகுதியின் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில்தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது’ என்றார். வடக்கு பகுதி மக்கள் தெற்கில் தஞ்சமடைந்து வரும் நிலையில், வடக்கு காசா பகுதியில் பதுங்கியிருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகளை தரை, வான், கடல் வழியாக ஒருங்கிணைத்து தாக்க இஸ்ரேல் ராணுவம் தயாராகி உள்ளது.

எந்த நேரத்திலும் தாக்குதலை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், மத்திய கிழக்கு நாடுகளில் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இஸ்லாமிய நாடுகள் குரல் எழுப்பி வரும் நிலையில், ஈரான் வெளிப்படையாகவே ஹமாஸ் அமைப்பினரை ஆதரித்து வருகிறது. இஸ்ரேல் தனது தாக்குதலை நிறுத்தாவிட்டால், போர் மூளும் என்றும் எச்சரித்துள்ளது. ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன், கத்தார் நாட்டின் தோஹாவில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை சந்தித்தார். இந்த நிலையில் இஸ்ரேல் – காசா போர் குறித்து விவாதிப்பதற்காக, இஸ்லாமிய நாடுகளின் உயர்மட்ட குழுவான இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (ஓஐசி) அவசர அசாதாரண ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

இந்த அமைப்பின் தற்போதைய தலைமையை ஏற்றுள்ள சவுதி அரேபியா தலைமையில் அவசர அசாதாரண கூட்டம் வரும் 18ம் தேதி ஜெட்டாவில் நடைபெறுகிறது. காசா மக்களுக்கு ஏற்பட்டுள்ளது அச்சுறுத்தல், மனிதாபிமான உதவிகள், போர் சூழல் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. நான்கு கண்டங்களில் பரவியுள்ள 57 இஸ்லாமிய நாடுகளின் உறுப்பினர்கள், இக்கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர். வளைகுடா அண்டை நாடுகளான பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மொராக்கோ ஆகியவை இஸ்ரேலுடன் உறவை பேணி வருகின்றன. அந்த உறவில் சவூதி அரேபியாவையும் சேர, அந்நாட்டிற்கு அமெரிக்க அழுத்தம் கொடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

போர் சூழல் துளிகள்
*அமெரிக்க அதிபர் ஜோ பிடன், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாலஸ்தீன தலைவர் மஹ்மூத் அப்பாஸ் ஆகியோருடன் நேற்று தனித்தனி யாக போனில் தொடர்பு கொண்டு பேசினார். ஹமாஸை வீழ்த்துவதற்காக இஸ்ரேலுக்கு ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக் கொண்டார்.
* அமெரிக்காவின் விமானம் தாங்கிய மற்றொரு கப்பல், இஸ்ரேல் கடல் எல்லையை அடைந்துள்ளது.
* கடந்த 24 மணி நேரத்தில் காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 400க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும், 1,500 பேர் காயமடைந்துள்ளதாகவும் பாலஸ்தீன செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
* காசா மருத்துவமனைகளின் பிணவறைகள் ேபாரில் இறந்தவர்களான் உடல்களால் நிரம்பியுள்ளன. இறந்தவர்களின் உடல்கள் அழுகாமல் இருப்பதற்காக, ஐஸ்கிரீம் லாரிகளில் உடல்கள் வைக்கப்பட்டுள்ளன.
* ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் முகமது பின் சயீத் அல்நஹ்யானை, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் சந்தித்து பேசினார். அவர்கள் இஸ்ரேல் – காசா பகுதியில் ஏற்பட்டுள்ள போர் சூழல் குறித்தும், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான உதவிகள் குறித்தும் ஆலோசனை நடத்தினர்.
* இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் போரைப் பற்றி விவாதிப்பதற்காக, அடுத்த வாரம் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. காணொலி காட்சி மூலம் நாளை மறுநாள் நடக்கும் இந்த கூட்டத்தில் தற்போதைய போர் சூழல் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
* இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் செய்தித் தொடர்பாளர் ஜொனாதன் கான்ரிகஸ் கூறுகையில், ‘பொதுமக்கள் வடக்கு காசா பகுதியில் இருந்து வெளியேறியவுடன், இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கை தொடங்கும். வடக்கு காசாவில் வசிக்கும் மக்களுக்கு தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டன. ஹமாஸ் விரிக்கும் வலையில் சிக்கி விடாதீர்கள் என்று எச்சரித்துள்ளோம்’ என்றார்.
* லெபனானை தளமாக கொண்டு செயல்படும் ஹிஸ்புல்லா என்று தீவிரவாத அமைப்பின் மீது, இஸ்ரேலிய விமானப்படை தாக்குதல் நடத்தியது. விமானங்கள், பீரங்கிகள் மற்றும் டாங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இஸ்ரேலின் ராக்கெட் தாக்குதலுக்கு ஹிஸ் புல்லா அமைப்பு பதிலடி தாக்குதல் நடத்தியது.

தோல்வியை ஒப்பு கொண்ட உளவு தலைவர்
இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வரும் போரால் சுமார் 3000 பேர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் உளவுத்துறை கோட்டை விட்டதால் தான், இந்த போர் மூண்டதாக தகவல்கள் கூறுகின்றன. இதுகுறித்து இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹனெக்பி கூறுகையில், ‘உளவுத்துறை தகவல்களை சேகரிப்பதில் தவறு செய்துள்ளேன். இவ்வளவு பெரிய தாக்குதலைப் பற்றி தெரியாமல் இருந்தது, உளவுத்துறையில் தோல்வியாக கருதுகிறேன். நாங்கள் செய்த தவறினால், நாடும் உலகமும் வியப்படைந்துள்ளன. இஸ்ரேலுடனான போரிலிருந்து ஹமாஸ் சில பாடங்களைக் கற்றுக்கொண்டிருக்கும் என்று நம்புகிறோம்’ என்றார்.

பாகிஸ்தானை கிண்டலடித்த இஸ்ரேல் தூதர்
இந்தியா – பாகிஸ்தான் இடையே அகமதாபாத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியின் போது, ​​இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்திய ரசிகர்கள் போஸ்டர்களை அசைத்தனர். இந்த போஸ்டரை டேக் செய்து இஸ்ரேல் அரசு பதிவிட்டுள்ளது. அதில், மூவர்ணக் கொடி மற்றும் இதயத்தின் எமோஜியை வைத்து இந்தியாவுக்கு நன்றி தெரிவித்து இஸ்ரேல் பதிவை வெளியிட்டது. இஸ்ரேலின் இந்த பதவி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அணி அபார வெற்றி பெற்றது குறித்து, இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நவோர் கில்லன் வெளியிட்ட பதிவில், ‘இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உலகக் கோப்பை போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. பாகிஸ்தானால் தனது வெற்றியை ஹமாஸ் தீவிரவாதிகளிடம் அர்ப்பணிக்க முடியவில்லை’ என்று பதிவிட்டுள்ளார். முன்னதாக பாகிஸ்தான் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் வெளியிட்ட பதிவில், சமீபத்தில் நடந்த இலங்கைக்கு எதிரான போட்டியில் சதம் அடித்திருந்தார். தனது சதத்தை காசா மக்களுக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹமாஸின் ‘அல் நுக்பா’ படை
காசா மீதான தனது தீவிரவாமான தாக்குதலை இஸ்ரேல் படைகள் தொடங்கியதால், ஹமாஸ் – இஸ்ரேல் இடையிலான போர் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது தெரியவில்லை. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்றிரவு வெளியிட்ட அறிவிப்பின்படி பார்த்தால், இந்த போர் நீண்ட காலம் நீடிக்கும் என்பது தெளிவாகிறது. இது ஆரம்பம்தான் என்று பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார். ஹமாஸை முற்றிலுமாக அழிப்போம் என்றும், அது எவ்வளவு காலம் பிடிக்கும் என்றும் கூறவில்லை. ஹமாஸின் மிகவும் ஆபத்தான தீவிரவாத படையான ‘அல் நுக்பா’ என்ற படை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து இஸ்ரேலிய ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் ரிச்சர்ட் ஹெக்ட் கூறுகையில், ‘ஹமாஸின் ‘அல் நுக்பா’ படையை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறோம். கடந்த 7ம் தேதி இஸ்ரேல் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு அல்-நுக்பா படைதான் காரணம்’ என்றார். மூத்த ஹமாஸ் தீவிரவாத தலைவர்களால் ‘அல் நுக்பா’ படை கட்டமைக்கப்பட்டுள்ளது. பயிற்சி பெற்ற மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் மட்டுமே இந்த படையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தப் படையில் சேர்க்கப்பட்டுள்ள தீவிரவாதிகள், பதுங்கு குழியிருந்து தாக்குதல் நடத்துவதிலும், சுரங்கப் பாதைகள் வழியாக ஊடுருவி இஸ்ரேலை தாக்குவதிலும் வல்லுநர்களாக உள்ளனர். ‘அல் நுக்பா’ படை தீவிரவாதிகள், டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், ராக்கெட்டுகள், ஸ்னைப்பர் ரைபிள்கள் மூலம் தாக்குதல் நடத்துவதில் திறமையானவர்கள். பணயக்கைதிகளை பிடிக்க அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. குறிப்பாக இஸ்ரேலுக்கு எதிரான போருக்கு, ‘அல் நுக்பா‘ படைகளுக்கு தனி பயிற்சி அளிக்கப்படுகிறது. ரகசிய ராணுவமாக செயல்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஈரான் மற்றும் அரபு ராணுவ அமைப்புகளின் உதவியுடன் பயிற்சி அளிக்கப்படுகிறது. சுமார் 40,000 பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் எப்போதும் தயாராக இருக்கிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிரியா விமான நிலையம் மீது தாக்குதல்
இஸ்ரேல் – காசா போருக்கு மத்தியில் சிரியாவின் அலெப்போ விமான நிலையத்தின் மீது இஸ்ரேல் விமானப்படை குண்டுவீச தொடங்கி உள்ளது. வடக்கு நகரான அலெப்போவின் சர்வதேச விமான நிலையத்தின் மீது இஸ்ரேலிய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், இதன் காரணமாக அங்கு சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் சிரிய அரசாங்க சார்பு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சிரியா நாளிதழ் ெவளியிட்ட தகவலின்படி, அலெப்போ விமான நிலைய ஓடுபாதையில் இஸ்ரேலிய ராணுவம் தாக்குதல் நடத்தி உள்ளது. அதனால் ஓடுபாதை பாதித்துள்ளது. சிரியாவின் கோலன் குன்றுகள் மீதும் இரண்டு ராக்கெட்டுகள் வீசப்பட்டன என்று தெரிவித்துள்ளது.

வருத்தம் தெரிவித்த இஸ்ரேல்
தெற்கு லெபனானில் நடைபெறும் தாக்குதல் குறித்து செய்தி சேகரிப்பதற்காக பத்திரிகையாளர்கள் சிலர் ‘பிரஸ்’ ஜாக்கெட்டுகள் அணிந்து நேற்று முன்தினம் சென்றிருந்தனர். இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ராய்ட்டர்ஸ் நிறுவன வீடியோகிராபர் இசாம் அப்தல்லா உயிரிழந்தார். இவர் லெபனானைச் சேர்ந்தவர். மற்ற 6 நிருபர்கள் காயம் அடைந்தனர். செய்தியாளர்களின் சோக சம்பவத்துக்கு வருந்துகிறோம் என இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல்ரிச்சர் ஹெக்ட் தெரிவித்தார். இந்த தாக்குதல் இஸ்ரேல் ராணுவத்தின் திட்டமிட்ட தாக்குதல் எனவும், இது குறித்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலிடம் முறையான புகார் அளிக்கவுள்ளதாகவும் லெபனான் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

ஹமாஸின் சுரங்கப்பாதை வியூகம்
இஸ்ரேலின் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக, காசாவின் ஒவ்வொரு மூலை முடுக்குகளிலும் ரகசிய சுரங்கப் பாதைகள் கட்டப்பட்டுள்ளது. கடந்த 2007ம் ஆண்டில் இருந்த இந்த சுரங்கப்பாதைகள் அமைக்கும் பணிகளை ஹமாஸ் மேற்கொண்டது. காசாவின் வீடுகளுக்கு கீழே 30 மீட்டர் ஆழத்தில் சுரங்கங்கள் உள்ளன. வீடுகளின் அடித்தளத்தில் இருந்து சுரங்கப்பாதைக்கு நேரடி பாதை உள்ளது. காசாவின் சுரங்கப்பாதைகளால் இஸ்ரேலுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்பது தெரிய வந்ததால், கடந்த 2014ல் 30 சுரங்கங்களை இஸ்ரேல் அழித்தது.

கடந்த 2021ம் ஆண்டில் இதேபோல் காசாவின் சுரங்கங்களை இஸ்ரேல் அழித்தது. அப்போது சுமார் 100 கிமீ நீளமுள்ள சுரங்கப்பாதைகள் அழிக்கப்பட்டன. இதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுகையில், ‘ஹமாஸ் அமைத்துள்ள சுரங்கப்பாதைகளில் 5% சுரங்கப்பாதைகளை மட்டுமே எங்களால் அழிக்க முடிந்தது. தற்போது காசாவில் எத்தனை சுரங்கப்பாதைகள் உள்ளன என்பதை மதிப்பிடுவது கடினம். ‘அல் நுக்பா’ படை சுரங்கப்பாதை தாக்குதல்களில் நிபுணத்துவம் வாய்ந்தது. ஹமாஸை எதிர்த்துப் போராடுவதற்கான தரைப்படை தாக்குதலானது சவாலானது. காரணம் ஒவ்வொரு சுரங்கப்பாதையையும், எங்கு செல்கிறது என்பதை கண்டறிவது கடினம்.

ஹமாஸ் அமைத்துள்ள சுரங்கப்பாதைகளின் வழியாக, அண்டை நாடுகளுக்கும் தப்பிச் செல்ல முடியும். ஒரு நகரத்தில் இருந்து மற்றொரு நகரத்திற்கு செல்ல முடியும். இவை தீவிரவாதிகள் தப்பித்து செல்ல பெரும் உதவியாக உள்ளது. ஆயுதங்கள் மற்றும் டேங்க் எதிர்ப்பு ஏவுகணைகளும் சுரங்கப்பாதையில் வைத்துள்ளனர். அவர்களின் சுரங்கப்பாதையை அழிக்கும் திறன் இஸ்ரேலுக்கு உள்ளது. இஸ்ரேலின் ‘யஹலோம் யூனிட்’ படையானது, சுரங்கப்பாதையை லேசர் மூலம் கண்காணித்து தீவிரவாதிகளை அழிக்கும் திறன் பெற்றது’ என்றனர்.

The post 11 லட்சம் வடக்கு பகுதி மக்கள் வெளியேறுவதற்கான கெடு முடிந்தது; காசாவை கைப்பற்ற இஸ்ரேல் மும்முனை தாக்குதல்: போர் தீவிரமாவதால் இஸ்லாமிய நாடுகள் அவசர ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Israel ,triple-pronged attack ,Gaza ,Jerusalem ,northern Gaza ,-attack ,
× RELATED தெற்கு காசாவின் ரஃபா நகரம் மீது...