×

செங்குன்றம் பகுதி சாலைகளில் மாடுகளால் விபத்து அபாயம்: விளக்குகள் எரியாததால் வழிப்பறி

புழல்: செங்குன்றம்-நாரவாரிக்குப்பம் பேரூராட்சியில், செங்குன்றம்-சோத்துப்பாக்கம் சாலை, தீர்த்தகரையாம்பட்டு, பாலவாயல், கும்மனூர் ஆகிய பகுதி சாலைகளில் மாடுகள் சுற்றி திரிகின்றன. இரவு நேரங்களில் அவை சாலையில் படுத்து ஓய்வெடுத்து வருகின்றன. இரவு நேரங்களில் செங்குன்றம் மாநில நெடுஞ்சாலையில் மின்விளக்குகள் எரியாததால் சாலையோரங்களில் ஓய்வெடுக்கும் மாடுகளை திடீரென பார்க்கும் வாகன ஓட்டிகள் ஹாரன் ஒலி எழுப்புகின்றனர்.

இதை கேட்டதும் மாடுகள் மிரண்டு, அந்த சாலையிலே தறிகெட்டு ஓடும்போது அவ்வழியே செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மாடுகளின் மீது மோதுவதுடன், நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைகின்றனர். செங்குன்றம்-சோத்துப்பாக்கம் மாநில நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் மின்விளக்கு எரியாததால் வழிப்பறி கொள்ளை சம்பவங்களும் நடைபெறுகின்றன.

இதுகுறித்து மாநில நெடுஞ்சாலை துறை மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, செங்குன்றம் பகுதியில் சாலைகளில் மாடுகள் சுற்றுவதை தடுக்கவும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கவும் அத்துடன் இரவு நேரங்களில் மின்விளக்குகள் எரிவதற்கு மாவட்ட கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

The post செங்குன்றம் பகுதி சாலைகளில் மாடுகளால் விபத்து அபாயம்: விளக்குகள் எரியாததால் வழிப்பறி appeared first on Dinakaran.

Tags : Didergarimpattu ,Palavail ,Kummanur ,Dinakaraan ,
× RELATED அரசு நிலத்தில் மண் அள்ளிய லாரி, 2 பொக்லைன் பறிமுதல்