×

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ அப்துல்கலாமின் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளான இன்று (1510.2023) செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் சென்னை, கிண்டி, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்களின் திருவுருவச் சிலையை திறந்து வைத்தார்.

தமிழகத்தின் புகழ்சால் பெருந்தகையாளர்கள், தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டு தமிழ்நாட்டிற்குப் பெருமைத் தேடித்தந்த அறிஞர் பெருமக்கள், சமூகநீதி, விடுதலை உணர்வுகளை ஊட்டிவளர்த்த கவிஞர்கள், இசை மேதைகள், தமிழ்நாட்டின் தியாக வரலாற்றுக்கு உன்னத சாட்சியங்களாக விளங்கும் தியாகிகள். மேதைகள் மற்றும் அறிஞர்களின் நினைவுகளைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையிலும், தமிழ் சமுதாயத்திற்கு அவர்களின் பங்களிப்பை பெருமைப்படுத்தும் வகையிலும், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் நினைவகங்கள், திருவுருவச் சிலைகள், அரங்கங்கள், நினைவுத் தூண்கள். நினைவுச் சின்னங்கள் ஆகியவை அமைக்கப்பட்டு. சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு. பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், 2021-22ஆம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத் துறை மானியக் கோரிக்கையில், இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானியாகவும், இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு பெரும் வழிகாட்டியாகவும் திகழ்ந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்களுக்கு சென்னை, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் திருவுருவச் சிலை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

1931-ஆம் ஆண்டு. அக்டோபர் மாதம் 15-ஆம் நாள். இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரத்தில் ஜைனுலாப்தீன் மற்றும் ஆஷியம்மா ஆகியோருக்கு மகனாக டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்கள் பிறந்தார். டாக்டர் அப்துல் கலாம் அவர்கள், இராமேஸ்வரத்தில் பள்ளிப் படிப்பை முடித்து, திருச்சிராப்பள்ளியிலுள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் இயற்பியல் பட்டப்படிப்பு பயின்றார். 1955 ஆம் ஆண்டு தன்னுடைய விண்வெளி பொறியியல் படிப்பை சென்னையிலுள்ள எம்.ஐ.டி-யில் தொடங்கிய டாக்டர் அப்துல் கலாம் அவர்கள், பின்னர் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

ஒன்றிய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் வானூர்தி அபிவிருத்தி பிரிவில் விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கிய டாக்டர் அப்துல் கலாம் அவர்கள், பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்து, துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (SLV) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார். மேலும், SLV -II ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார்.

அவரது இத்தகைய வியக்கதக்க செயலைப் பாராட்டி ஒன்றிய அரசு இவருக்கு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் பெருமைமிகு விருதான “பத்ம பூஷன்” விருது வழங்கி கௌரவித்தது. 1963 ஆம் ஆண்டு முதல் 1983ஆம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர், 1998 ஆம் ஆண்டு பொக்ரான் அணு ஆயுத சோதனையில் முக்கிய பங்காற்றியுள்ளார். “இந்தியாவின் ஏவுகணை நாயகன்” என்றும் “அணுசக்தி நாயகன்” என்றும் அவர் போற்றப்பட்டார். இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக ஜூலை 25 ஆம் நாள் 2002ல் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்கள் பதவியேற்றார். 2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த இவர் “மக்களின் ஜனாதிபதி” என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார்.

மாணவர்களிடம் மிகுந்த அன்பு கொண்ட டாக்டர் அப்துல் கலாம் அவர்கள், “கனவு காணுங்கள், அந்தக் கனவு உறக்கத்தில் வரும் கனவாக இருக்கக் கூடாது. உறக்கத்தை விரட்டும் கனவாக இருக்க வேண்டும்” என்று மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டினார். டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் அக்னி சிறகுகள். இந்தியா 2020 போன்ற பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். மேலும், 1990-ஆம் ஆண்டு பத்ம விபூஷன் விருது. 1997-ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது போன்ற பல்வேறு விருதுகளை பெற்ற பெருமைக்குரியவர் ஆவார்

இத்தகைய பல்வேறு சிறப்புகளை கொண்ட டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்களுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில், சென்னை, கிண்டி, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்களின் திருவுருவச் சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன். இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.வி. பிரபாகர் ராஜா, துணை மேயர் மு. மகேஷ்குமார், பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் மரு.இரா. செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் த.மோகன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்

The post அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ அப்துல்கலாமின் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Former President of the Republic Dr. A. B. ,J Abdulkalam ,Chief Minister ,Muhammed. c. Stalin ,Tamil Nadu ,Bu. c. Stalin ,former ,President of the Republic, ,Dr. A. B. J. ,Abdul Kalam ,Dinakaraan ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...