- பஞ்சலிங்க அருவியில் திடீர் வெள்ளம்
- அம்மனலிங்கஸ்வரர் கோயில்
- உடுமலை
- பஞ்சலிங்க அருவி
- அமனலிங்கேஸ்வரர் கோயில். ...
உடுமலை: உடுமலை அருகே உள்ள பஞ்சலிங்க அருவியில் நேற்றிரவு திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மழை வெள்ளம் அமணலிங்கேஸ்வரர் கோயிலை சூழ்ந்தது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலை மீது பஞ்சலிங்க அருவி உள்ளது. ஆண்டு முழுவதும் இந்த அருவியில் தண்ணீர் கொட்டுவதால் மிக சிறந்த சுற்றுலாத்தலமாக திகழ்கிறது.
வார விடுமுறை,அரசு விடுமுறைகளில் திருமூர்த்தி மலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த அருவியில் குளித்து மகிழ்வது வழக்கம். மேலும் சபரிமலை சீசன் போன்ற சமயங்களில் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் பஞ்சலிங்க அருவியில் குளித்து மலையடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்வர்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பருவமழை காலங்களிலும், கனமழை பெய்யும் காலங்களிலும் இந்த அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதுண்டு. அருவியில் ஏற்படும் வெள்ளம் பாலாற்றில் திரண்டு அமணலிங்கேஸ்வரர் கோயிலை சூழ்ந்து விடும். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் கோயில் நிர்வாகத்தினரும், வனத்துறையினரும் கோயிலில் உள்ள பக்தர்களை பாதுகாப்பான பகுதிக்கு செல்லும்படி எச்சரிப்பர்.
நேற்று புரட்டாசி மாத மகாளய அமாவாசை என்பதால் நேற்று அதிகாலை முதல் மாலை வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் அமணலிங்கேஸ்வரர் கோயிலுக்கு சாமி கும்பிட வந்திருந்தனர். மேலும் இறந்து போன முன்னோர்களுக்கு திதி கொடுக்கவும் குடும்ப சகிதம் பலரும் வந்திருந்தனர். திருப்பூர்,பொள்ளாச்சி,உடுமலை,மடத்துக்குளம்,பழனி மட்டுமின்றி கேரள மாநில பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் நேற்று திருமூர்த்தி மலை வந்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு திடீரென மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்தது. மழையின் வேகம் அதிகரிக்கவே, கனமழையாக உருமாறியது. இதையடுத்து பஞ்ச லிங்க அருவியில் தண்ணீரின் வரத்து அதிகரித்து பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளம் அமணலிங்கேஸ்வரர் கோயிலை சூழ்ந்தது.
இதையடுத்து கோயிலில் உள்ள பக்தர்கள் உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டனர். கோயில் உண்டியல்கள் அனைத்து பிளாஸ்டிக் போர்வைகளால் பாதுகாப்பாக சுற்றி வைக்கப்பட்டது. வெள்ளப்பெருக்கு இரவில் ஏற்பட்டதால் அதிர்ஷ்டவசமாக பகலில் சாமி தரிசனம் மற்றும் குளிக்க வந்த ஏராளமான பக்தர்கள் உயிர் தப்பினர்
The post பஞ்சலிங்க அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு: அமணலிங்கேஸ்வரர் கோயிலை வெள்ளம் சூழ்ந்தது appeared first on Dinakaran.