×

தூத்துக்குடி ஆசிரியர் தின விழாவில் சிறந்த பள்ளிகளுக்கு விருதுகள் கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்

தூத்துக்குடி, அக்.15: தூத்துக்குடியில் நடந்த ஆசிரியர் தின விழாவில் மாவட்ட அளவில் சிறந்த ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகளுக்கு கலெக்டர் செந்தில்ராஜ் விருதுகள் வழங்கி பாராட்டினார்.
தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி தலைமையில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலையில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற கலெக்டர் செந்தில்ராஜ், சிறந்த ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகளுக்கு விருதுகள் வழங்கிப் பேசியதாவது: கொரோனா காலக்கட்டத்திலும் ஆசிரியர்களின் பணி சிறப்பானதாகும். நான் எனது தாயாருடன் பள்ளிக்கு சிறு வயதில் சென்றபோது அங்குள்ள ஆசிரியர்கள், கல்வி அலுவலர்களை பார்த்து, அரசுப் பணிக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதிலும், முதன்மை கல்வி அலுவலராக வேண்டும் என்பதே எனது முதல் விருப்பமாக இருந்தது. நான் பள்ளியில் முதல் மாணவனாக வந்தபோது ஆசிரியர் என்னை மருத்துவராக வேண்டும் என்று ஊக்கமளித்தார். அதன்படியே நான் மருத்துவரானேன். பின்னர் யுபிஎஸ்சி தேர்வு எழுதி ஐஏஎஸ் அதிகாரியானேன்.

சின்ன சின்ன விஷயங்கள் மாணவ-மாணவிகளிடையே தாக்கத்தை ஏற்படுத்தும். பள்ளி கட்டமைப்பு வசதிகள் குறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லும் பணியை தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் செய்ய வேண்டும். அவ்வாறு மாவட்ட நிர்வாகத்திற்கு கொண்டுசெல்லும்போது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு பல்வேறு துறைகளின் மூலம் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆகையால் ஆசிரியர்களாகிய நீங்கள் எப்போதும் சிறப்பாக செயல்பட்டு தூத்துக்குடி மாவட்டத்தை பள்ளிக்கல்வித்துறையில் முதன்மை மாவட்டமாக கொண்டுவர அயராது பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து அவர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி, மாவட்ட கல்வி அலுவலர் குருநாதன், கோவில்பட்டி மாவட்ட கல்வி அலுவலர் ஜெயபிரகாஷ்ராஜன் ஆகியோருக்கு நல்ஆளுமை விருது வழங்கினார். தொடர்ந்து, மாநில நல்லாசிரியர் விருதுபெற்ற 11 ஆசிரியர்களை பாராட்டி நினைவு பரிசுகளையும், 12 சிறந்த பள்ளிகளுக்கான விருதுகளையும், கடந்த கல்வியாண்டில் நடந்த 10, 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளின், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ், மற்றும் பள்ளி ஆசிரியர்கள் அவர்கள் கற்றுத்தரும் பாடத்தில் சென்டம் பெறவைத்த 36 ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார். விழாவில் சுப்பையா வித்யாலயம் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை சாந்தினி கௌசல், பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர்கள் கஜேந்திரபாபு, சேகர், கார்த்திக்கேயன், சிவப்பிரசாத், பொன்சந்தன லதா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

The post தூத்துக்குடி ஆசிரியர் தின விழாவில் சிறந்த பள்ளிகளுக்கு விருதுகள் கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Collector ,Senthilraj ,Tuticorin Teacher's Day ,Tuticorin ,Teacher's Day ,Dinakaran ,
× RELATED மதுரை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள்...