×

பைக்கில் கஞ்சா கடத்தி வந்த 5 பேர் கைது 6 கிலோ, ₹7 ஆயிரம் பணம், 2 பைக் பறிமுதல்

பாகூர், அக். 15: கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு கஞ்சா கடத்தப்படுவதாக போதை பொருள் தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது. இதுசம்பந்தமாக கிருமாம்பாக்கம் சப்-இன்பெக்டர் விஜயகுமார் தலைமையில் போலீசார் மற்றும் போதை பொருள் தடுப்பு போலீசாரும் முள்ளோடை பகுதியில் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கடலூரில் இருந்து புதுச்சேரி நோக்கி 2 பைக்குகளில் 5 பேர் அதிவேகமாக வந்தனர். அவர்கள், போலீசாரை கண்டதும் திரும்பிச் செல்ல முயன்றனர். இதனை கண்ட போலீசார் சந்தேகமடைந்து அவர்களை துரத்திச் சென்று மடக்கி பிடித்து விசாரித்தனர்.

அப்போது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் பைக்கை சோதனை செய்தபோது, அதில் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை கிருமாம்பாக்கம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கும்பகோணத்தை சேர்ந்த செல்வகுமார் (எ) செல்வின் (49), கடலூர் மாவட்டம் வண்ணாரப்பாளையம் உத்தரமூர்த்தி (26), செல்லங்குப்பம் பிரவீன் (20), தனுஷ் (18), புதுச்சேரி கோவிந்தசாலை பிரகாஷ் (27) என்பதும், கடலூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது. கிருமாம்பாக்கத்தில் அதிக பள்ளி, கல்லூரிகள் இருப்பதால் அதிக விலைக்கு கஞ்சாவை விற்பதற்காக கடத்தி வந்தது தெரியவந்தது.

மேலும் செல்வக்குமார் தேவைப்படும் போதெல்லாம் ஆந்திரா சென்று கஞ்சாவை வாங்கி வந்து விற்பனை செய்துள்ளார். ஏற்கனவே இவர் 2019ல் 60 கிலோ கஞ்சாவை வாங்கி வந்து விற்பனை செய்த நிலையில், இதுகுறித்து கும்பகோணம் போலீசார் வழக்கு பதிவும் செய்துள்ளனர். இதையடுத்து 5 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 200 கிராம் பாக்கெட் கொண்ட 6 கிலோ கஞ்சா பொட்டலங்கள், ரூ.7 ஆயிரம் பணம், 2 மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதுகுறித்து பாகூர் இன்ஸ்பெக்டர் கணேஷ் கூறுகையில், புதுச்சேரியில் கஞ்சா முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்று டிஜிபி உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் தீவிர சோதனை நடந்து வருகிறது. கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு கடத்தப்பட்ட 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளோம். கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர் தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த யாராக இருந்தாலும் அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

The post பைக்கில் கஞ்சா கடத்தி வந்த 5 பேர் கைது 6 கிலோ, ₹7 ஆயிரம் பணம், 2 பைக் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Bagur ,Narcotics Control Unit ,Cuddalore ,Puducherry ,Dinakaran ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி