×

கொரோனா காலத்தில் கடைகள் மூடப்பட்டதால் நகராட்சி, உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான கடைகளின் வாடகை பாக்கி ரூ.136 கோடி தள்ளுபடி: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை: கொரோனா ஊரடங்கு காலத்தில் 2020 ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலும், இரண்டாவது கொரோனா ஊரடங்கு காலமான 2021 மே, ஜூன் மாதங்களிலும் கடைகள் முழுமையாக மூடப்பட்டன. இந்த காலகட்டத்தில் வணிகம் நடைபெறாத காரணத்தால், கடைகளுக்கான வாடகை, குத்தகையை தள்ளுபடி செய்ய வேண்டுமென உத்தரவிடக் கோரி, நாமக்கல் நகராட்சிக்கு சொந்தமான கடையை வாடகைக்கு எடுத்து நடத்தி வந்த பொன்னுசாமி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கடைகளுக்கான வாடகை, குத்தகையை தள்ளுபடி செய்யும்படி 2021 டிசம்பரில் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை அமல்படுத்தாமல் நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே அவமதித்து விட்டதாக கூறி, தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர், வருவாய் துறை செயலாளர், நகராட்சி நிர்வாக துறை இயக்குனர் மற்றும் நாமக்கல் நகராட்சி ஆணையருக்கு எதிராக பொன்னுசாமி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வி.அருண் ஆஜராகி, கொரோனா ஊரடங்கு காலத்தில் கடைகள் மூடப்பட்டதால், மாநகராட்சி, நகராட்சி போன்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான கடைகளுக்கான ரூ.136 கோடியே 44 லட்சத்து 34 ஆயிரத்து 828 வாடகை மற்றும் குத்தகை தொகைகளை தள்ளுபடி செய்து 2023 ஜூன் மாதம் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வாடகை மற்றும் குத்தகை பாக்கி இல்லாதவர்களுக்கு மட்டும் இந்த சலுகை வழங்கப்படும் என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளது என்று கூறி அரசாணையை தாக்கல் செய்தார். ரசாணையை ஆய்வு செய்த நீதிபதி, நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

The post கொரோனா காலத்தில் கடைகள் மூடப்பட்டதால் நகராட்சி, உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான கடைகளின் வாடகை பாக்கி ரூ.136 கோடி தள்ளுபடி: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,ICourt ,Chennai ,Corona ,Corona curfew ,
× RELATED தமிழகத்தில் அனைத்து மத்திய...