×

நாடாளுமன்ற தேர்தல் குறித்து 52 காங்கிரஸ் நிர்வாகிகளுடன் சோனியா, பிரியங்கா ஆலோசனை: முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் குறித்து, காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் 52 பேருடன் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் தீவிர ஆலோசனை நடத்தினர். இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. திமுக சார்பில் நடைபெறும் மகளிர் உரிமை மாநாட்டில் பங்கேற்பதற்காக சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் நேற்றிரவு விமானம் மூலம் சென்னை வந்தனர். அவர்களை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், துணை பொதுச் செயலாளர் கனிமொழி, டி.ஆர்.பாலு எம்பி, மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் பலர் திரண்டு நின்று அவர்களை வரவேற்றனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆயிரக்கணக்கானோர் சாலைகளில் இருபுறமும் திரண்டு நின்று ேகாஷங்களை எழுப்பி உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனால் கிண்டி பகுதி திருவிழா போன்று காட்சியளித்தது. இதையடுத்து, கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அவர்கள் தங்கினர். இந்நிலையில், இன்று மாலை நடைபெறும் மகளிர் உரிமை மாநாட்டில் கலந்து கொள்கின்றனர். அதற்கு முன்னதாக, இன்று பகல் 12 மணி அளவில் அவர்கள் தங்கியிருக்கும் நட்சத்திர ஓட்டலில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள், அகில இந்திய செயலாளர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உட்பட உள்ளிட்ட 52 பேருடன் சோனியாகாந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

குறிப்பாக, நாடாளுமன்ற தேர்தல் குறித்து விரிவாக கருத்துகளை கேட்டறிந்தனர். தமிழக அரசியல் நிலவரம் மற்றும் காங்கிரஸ் வளர்ச்சிப் பணிகள் குறித்தும், கட்சியை அமைப்பு ரீதியாக வலுப்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தினர். மேலும் இந்தியா கூட்டணியை வலுப்படுத்துவது தொடர்பாகவும், கூட்டணி கட்சியினருடன் இணக்கமாக செல்வது குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது. மேலும், பாஜ அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை மக்கள் மத்தியில் பெரிய அளவில் கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும் விவாதித்தனர்.

மேலும் கட்சி பணிகளில் சுணக்கம் காட்டும் நிர்வாகிகள் மீது அதிரடி காட்டுவது, பூத் கமிட்டி அமைப்பதை விரைவுபடுத்துவது, தேர்தல் பணிகளில் வேகம் காட்டுவது குறித்தும் கேட்டறிந்துள்ளனர். மேலும், மாவட்ட வாரியாக ஆய்வு நடத்தவும் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, ஒவ்வொரு மாவட்ட தலைவரின் செயல்பாடுகளை கண்காணித்து சிறப்பாக செயல்படும் மாவட்ட தலைவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும் முடிவு செய்துள்ளதாக காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

The post நாடாளுமன்ற தேர்தல் குறித்து 52 காங்கிரஸ் நிர்வாகிகளுடன் சோனியா, பிரியங்கா ஆலோசனை: முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் appeared first on Dinakaran.

Tags : Sonia ,Priyanka ,Congress ,Chennai ,Sonia Gandhi ,Priyanka Gandhi ,Dinakaran ,
× RELATED தேர்தல் முடிவு இந்தியா கூட்டணிக்கு சாதகமாக வரும்: சோனியா காந்தி பேட்டி