×

தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விலை பன்மடங்கு அதிகரிப்பு : ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.800க்கு விற்பனை!!

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விலை பல மடங்கு உயர்வை கண்டுள்ளது. தென் தமிழகத்தின் மிகப்பெரிய மலர் சந்தையான தோவாளை பாரத ரத்னா டாக்டர் எம்ஜிஆர் மலர் வணிகச் சந்தையில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் பூக்கள் இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான நவராத்திரி திருவிழா நாளை துவங்கி 9 நாட்கள் நடைபெறுகிறது. நவராத்திரி திருவிழாவில் முக்கிய பங்கு வகிக்கும் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து மலர் சந்தைக்கு 75 டன் பூக்கள் வந்துள்ளது. அதைப் போல் பூக்களை வாங்குவதற்காக பிற பகுதிகளில் இருந்து மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரிகள் தோவாளை சந்தைக்கு படையெடுத்துள்ளனர்.

இதன் எதிரொலியாக தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விலை அதிகரித்துள்ளது. நேற்று கிலோ ரூ.40க்கு விற்கப்பட்ட வாடாமல்லி இன்று ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது.கேந்தி 35 ரூபாயில் இருந்து 60 ரூபாய்க்கும் செவ்வந்தி 60 ரூபாயில் இருந்து ரூ.130க்கும் விற்கப்படுகிறது.துளசி ரூ.20ல் இருந்து ரூ.50க்கும் பன்னீர் ரோஜா ரூ.50ல் இருந்து ரூ.100க்கும் அரளி ரூ.60ல் இருந்து ரூ.120க்கும் சம்பங்கி ரூ.60ல் இருந்து ரூ.130க்கும் பிச்சிப்பூ ரூ.300ல் இருந்து ரூ.750கும மல்லிகை பூ 300 ரூபாயில் இருந்து 800 ரூபாய் வரை விலை உயர்வை கண்டுள்ளது. தாமரை ஒன்று இரு ரூபாயில் இருந்து பத்து மடங்கு விலை உயர்ந்து ரூ.10க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

The post தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விலை பன்மடங்கு அதிகரிப்பு : ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.800க்கு விற்பனை!! appeared first on Dinakaran.

Tags : Thowali ,Kanyakumari ,Kanyakumari district ,Thovalai ,South Tamil Nadu ,
× RELATED கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர்...