×

புதிய அமைச்சர் யார்? கிடப்பில் போடும் ரங்கசாமி புதுவை அரசியலில் திடீர் திருப்பம்

 

புதுச்சேரி, அக். 14: புதிய அமைச்சர் யார் என்பதில் அவசரம் காட்டாமல் தற்போதைக்கு தள்ளிப்போடும் முடிவில் ரங்கசாமி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் புதுவை அரசியலில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. புதுவையில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. என்.ஆர்.காங்கிரசுக்கு முதல்வர் ரங்கசாமி உள்பட 4 அமைச்சர்களும், பாஜகவுக்கு 2 அமைச்சர்களும் உள்ளனர். இதில் காரைக்கால் நெடுங்காடு தொகுதியைச் சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏ சந்திர பிரியங்கா போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார்.

இவர் தனது அமைச்சர் பதவியை கடந்த 9ம் தேதி திடீரென ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை துணை நிலை ஆளுநர் மாளிகைக்கும், முதல்வர் அலுவலகத்துக்கும் தனித்தனியாக அனுப்பியிருந்தார். ஆளுநர் தமிழிசை கடிதத்தை ஏற்று மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அடுத்த அமைச்சர் யார் என்ற கேள்வி எழத் தொடங்கியது. காரைக்கால் தொகுதியைச் சேர்ந்த மூன்று முறை எம்எல்ஏவான திருமுருகன், துணை சபாநாயகர் ராஜவேலு, ராஜவேலு அண்ணன் மகன் லட்சுமிகாந்தன் பெயரும் பரிசீலிக்கப்படுவதாக பேசப்பட்டது.

இந்நிலையில் கடந்த 8ம் தேதி இரவு முதல்வர் ரங்கசாமி, துணை நிலை ஆளுநர் தமிழிசையை ஆளுநர் மாளிகையில் சந்தித்தார். அப்போதே தனது அமைச்சரவையை மாற்றுவதற்கு கடிதம் எழுதி கொடுத்துள்ளார். புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் புதிய அமைச்சரை நியமிக்க மத்திய உள்துறையிடம் அனுமதி பெற வேண்டும். இதற்காக துணை நிலை ஆளுநர் தமிழிசை, மத்திய உள்துறைக்கு இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார், என தகவல்கள் வெளியானது. இதனையறிந்த சந்திர பிரியங்கா, கடந்த 10ம் தேதி அமைச்சர் பதவியில் இருந்து விலகி தொகுதி மக்களுக்கு எழுதிய கடிதத்தில் சொந்தப் பிரச்னைகளை ஆணாதிக்க கும்பல் கையில் எடுத்து காய் நகர்த்துகிறது.

தொடர்ந்து குறி வைக்கப்பட்டேன். தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து பெண்கள் அரசியலுக்கு வந்தால் பல இன்னல்களை சந்திக்க நேரிடும் என பொதுவாக கூறுவார்கள். ஆனால், கடின உழைப்பும், மன தைரியமும் இருந்தால் இதைப்பற்றி கவலைப்படாமல் களத்தில் நீடிக்கலாம் என முயன்றேன். முடியவில்லை. இறுதியில் எந்த பயனும் இல்லை என்று எழுதியுள்ளார். தலித் பெண் அமைச்சரை அசிங்கப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் அவரை நீக்க ரங்கசாமி கடிதம் கொடுத்துள்ளார்.

பெண் அமைச்சர் கூறிய புகார் குறித்து முதல்வர் ரங்கசாமி மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என நாராயணசாமி கூறினார். இதுபோன்று திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளும், தலித் பெண் அமைச்சரை நீக்கியது தவறு என கண்டனம் தெரிவித்துள்ளன. தலித் பெண் அமைச்சர் ராஜினாமா பிரச்னையை எதிர்க்கட்சிகள் பெரிய அளவில் பிரச்னை கொண்டு செல்வதால் ரங்கசாமி முடிவில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் வன்னியர், தலித் சமூக வாக்கு வங்கி அதிகமாக உள்ளது. யாருக்கு அமைச்சர் பதவி கொடுத்தாலும் பிரச்னை ஏற்படும். இன்னும் 6 மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரப்போகிறது.

இதற்கிடையில் யாருக்காவது அமைச்சர் பதவி வழங்கினால் மற்றொரு அணியினர் போர்க்கொடி தூக்குவார்கள். இதனால் கூட்டணி ஆட்சியில் சலசலப்பு ஏற்படும். இதன் எதிரொலி, நாடாளுமன்ற தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும். தற்போது புதிய அமைச்சர் யார் என்பது குறித்து அவசரம் காட்டாமல் தள்ளிப்போட்டுள்ளார். அதுவரை எந்த நடவடிக்கையிலும் ரங்கசாமி இறங்க மாட்டார். எதுவாக இருந்தாலும் நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் ரங்கசாமி முடிவு எடுப்பார் என அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

The post புதிய அமைச்சர் யார்? கிடப்பில் போடும் ரங்கசாமி புதுவை அரசியலில் திடீர் திருப்பம் appeared first on Dinakaran.

Tags : Rangasami ,Puducherry ,Dinakaraan ,
× RELATED புதுச்சேரியில் பள்ளிகளுக்கு ஜூன் 12ம் தேதி வரை கோடை விடுமுறை நீட்டிப்பு