×

நாடாளுமன்ற தேர்தல் ஜூரம், சந்திர பிரியங்கா குற்றச்சாட்டை கையில் எடுக்கும் எதிர்க்கட்சிகள் புதிய அமைச்சர் தேர்வை தள்ளிப்போடும் ரங்கசாமி: புதுவை அரசியலை அதிர வைக்கும் இரு சமூக வாக்குகள்

புதுச்சேரி: நாடாளுமன்ற தேர்தல் ஜூரம், சந்திர பிரிங்காய குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் கையில் எடுப்பதால் புதிய அமைச்சர் தேர்வை தள்ளிப்போடும் முடிவில் ரங்கசாமி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் புதுவை அரசியலில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. புதுவையில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜ கூட்டணி ஆட்சி நடக்கிறது. என்.ஆர்.காங்கிரசுக்கு முதல்வர் ரங்கசாமி உள்பட 4 அமைச்சர்களும், பாஜகவுக்கு 2 அமைச்சர்களும் உள்ளனர். இதில் காரைக்கால் நெடுங்காடு தொகுதியைச் சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏ சந்திர பிரியங்கா போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார். இந்நிலையில் கடந்த 8ம் தேதி இரவு முதல்வர் ரங்கசாமி, துணை நிலை ஆளுநர் தமிழிசையை ஆளுநர் மாளிகையில் சந்தித்தார். அப்போதே தனது அமைச்சரவையை மாற்றுவதற்கு கடிதம் எழுதி கொடுத்துள்ளார். புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் புதிய அமைச்சரை நியமிக்க மத்திய உள்துறையிடம் அனுமதி பெற வேண்டும். இதற்காக துணை நிலை ஆளுநர் தமிழிசை, ஒன்றிய உள்துறைக்கு இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார் என தகவல்கள் வெளியானது.

இதனையறிந்த சந்திர பிரியங்கா, கடந்த 9ம் தேதி தனது ராஜினாமா கடிதத்தை துணை நிலை ஆளுநர் மாளிகைக்கும், முதல்வர் அலுவலகத்துக்கும் தனித்தனியாக அனுப்பியிருந்தார். தொடர்ந்து 10ம் தேதி தொகுதி மக்களுக்கு சந்திர பிரியங்கா எழுதிய கடிதத்தில், ‘சொந்தப் பிரச்னைகளை ஆணாதிக்க கும்பல் கையில் எடுத்து காய் நகர்த்துதுகிறது. தொடர்ந்து குறி வைக்கப்பட்டேன். தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து பெண்கள் அரசியலுக்கு வந்தால் பல இன்னல்களை சந்திக்க நேரிடும் என பொதுவாக கூறுவார்கள். ஆனால், கடின உழைப்பும், மன தைரியமும் இருந்தால் இதைப்பற்றி கவலைப்படாமல் களத்தில் நீடிக்கலாம் என முயன்றேன். முடியவில்லை. இறுதியில் எந்த பயனும் இல்லை’ என்று எழுதியுள்ளார்.

இதுகுறித்து பேசிய முன்னாள் முதல்வர் நாராயணசாமி, ‘தலித் பெண் அமைச்சரை அசிங்கப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் அவரை நீக்க ரங்கசாமி கடிதம் கொடுத்துள்ளார். பெண் அமைச்சர் கூறிய புகார் குறித்து முதல்வர் ரங்கசாமி மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்’ என்று ஆவேசமாக தெரிவித்திருந்தார். இதுபோன்று திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளும், பெண் அமைச்சரை நீக்கியது தவறு என கண்டனம் தெரிவித்துள்ளன. இதை எதிர்க்கட்சிகள் பெரிய அளவில் கொண்டு செல்வதால் முதல்வர் ரங்கசாமி புதிய அமைச்சரை தேர்வு செய்யும் முடிவில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் வன்னியர், தலித் சமூக வாக்கு வங்கி அதிகமாக உள்ளது. யாருக்கு அமைச்சர் பதவி கொடுத்தாலும் பிரச்னை ஏற்படும். இன்னும் 6 மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரப்போகிறது. யாருக்காவது அமைச்சர் பதவி வழங்கினால் மற்றொரு அணியினர் போர்க்கொடி தூக்குவார்கள். இதனால் கூட்டணி ஆட்சியில் சலசலப்பு ஏற்படும். இதன் எதிரொலி, நாடாளுமன்ற தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும். தற்போது புதிய அமைச்சர் தேர்வை தள்ளிப்போட்டுள்ளார். அதுவரை எந்த நடவடிக்கையிலும் ரங்கசாமி இறங்க மாட்டார். என அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

* ரங்கசாமி அரசியல் தந்திரம்

என்.ஆர்.காங்கிரஸ், பாஜ கூட்டணி ஆட்சி பதவியேற்று இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டது. ரங்கசாமி உள்பட 6 பேர் அமைச்சராக பதவியேற்றதால் இரண்டு கட்சிகளை சேர்ந்த எம்எல்ஏக்கள் வாரிய பதவி கேட்டு ரங்கசாமியையும், பாஜ தலைமையையும் சந்தித்து வலியுறுத்தி வந்தனர். முதல்வர் என்ற அடிப்படையில் வாரிய தலைவர் பதவிகளுக்கு எம்எல்ஏக்கள் பெயர்களை ரங்கசாமி முடிவு செய்து கவர்னருக்கு பரிந்துரை கடிதம் எழுதுவார். அதனைதொடர்ந்து கவர்னர், ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைத்து நியமனம் செய்யப்படுவது வழக்கமாகும்.

வாரிய தலைவர் என்றால் சைரன் வைத்து கார் என்பதாலும், வருமானம் வருவதற்கு வழி உள்ளதாலும் அதன் மீது எம்எல்ஏக்களுக்கு ஆசை இருந்து வருகிறது. சந்திர பிரியங்கா அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததால், என்.ஆர்.காங்கிரசை சேர்ந்த எம்எல்ஏக்கள், அமைச்சர் பதவி கேட்டு ரங்கசாமியை சுற்றி வருகிறார்கள். தற்போதைக்கு அமைச்சர் பதவியேற்பு தள்ளிப்போடுவதால் அனைவரும் அமைச்சர் கேட்டு சுற்றி வருவார்கள். இதனால் வாரிய தலைவர் பதவிக்கு கேட்டு யாரும் வரமாட்டார்கள். நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அனைத்தையும் பார்த்து கொள்ளலாம் என ராஜதந்திர முடிவில் ரங்கசாமி உள்ளார் என அவரது நெருங்கிய வட்டாரங்கள் கூறிகின்றன.

* ராகு, கேது கோயிலில் பரிகார பூஜை

முதல்வர் ரங்கசாமி, ஆன்மீகத்தில் அதிகம் நாட்டம் உள்ளவர். மனசு சரியில்லை என்றால் சேலம் சூரமங்கலத்தில் பிரசித்திபெற்ற அப்பா பைத்தியம் சுவாமி கோவிலுக்கு செல்வார். தேர்தல் நேரத்திலும், முக்கிய முடிவுகள் எடுக்கும்போதும் ரங்கசாமி, அங்கு சென்று சுவாமி தரிசனம் செய்வார். இவரது வீட்டின் அருகிலும் அப்பா பைத்தியம் சுவாமி கோயிலை நிறுவி தினமும் சென்று வழிபாடு செய்வது வழக்கமாக கொண்டு உள்ளார். கடந்த 8ம் தேதி ராகு-கேது பெயர்ச்சி நடந்தது. மறுநாள் 9ம் தேதி அமைச்சர் பதவியை சந்திர பிரியங்கா ராஜினாமா செய்தார். தொகுதி மக்களுக்கு எழுதிய கடிதத்தில் தலித், பாலின தொந்தரவு காரணங்களை கூறி அறிக்கை வெளியிட்டார். இதனால் ரங்கசாமி அதிர்ச்சி அடைந்தார். அப்போது முதல்வரை சந்திக்க சென்ற நிருபர்களிடம் கோபமாக உங்களை யார் அழைத்தது, நாங்கள் அழைக்கும்போது வரலாம் எனக்கூறி சந்திக்க மறுத்துவிட்டார். சந்திர பிரியங்கா பரபரப்பு அறிக்கையால் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.

ராகு-கேது பெயர்ச்சியை தொடர்ந்து அவரது அமைச்சரவையில் பிரச்னை ஏற்பட்டுள்ளதால் திடீரென முதல்வர் ரங்கசாமி, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்துக்கு நேற்று காலை புறப்பட்டு சென்று ராகு பகவானை வழிப்பட்டார். அவர், மேஷ ராசி, அசுபதி நட்சத்திரம் என்பதால் பரிகார பூஜையும் செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதனை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டம் கீழபெரும்பள்ளம் சென்று கேது பகவானை தரிசனம் செய்ததாக தகவல்கள் வெளியாயின. முன்னதாக திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள திருப்பாம்புரம்  சேஷபுரீஸ்வரர் (இராகு-கேது ஸ்தலம்) திருக்கோயிலில் முதல்வர் ரங்கசாமி சாமி தரிசனம் செய்து பரிகார பூஜை செய்தார்.

* மாற்றி பேசி சிக்கிய தமிழிசை

சந்திரபிரியங்கா அமைச்சராக இருந்தபோது, தனது அலுவல் சார்ந்த செய்திகளை (Transport Minister) என்ற வாட்ஸ் அப் குழு மூலம் பகிரப்பட்டு வந்தது. அதில் சந்திரபிரியங்காவின் அட்மின் பரபரப்பான பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: ஒரு வாரத்துக்கு முன்பு கோயம்புத்தூரில் நடைபெற்ற G20 / Y 20 மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய நீங்கள், தான் வசிக்கும் துறைகளில் மிகச்சிறப்பாக செயலாற்றுகிறார் என சந்திரபிரியங்காவை மனதார பாராட்டினீர்கள். அமைச்சர் 6 மாதமாக சரியாக செயல்படவில்லை என முதல்வர் சொன்னதாக பேசி உள்ளீர்கள். ஒரு அரசியல்வாதியை போல் பேட்டியளித்துள்ளீர்கள். உங்களுக்கு இவ்வளவு ஞாபகம் மறதி என்பதே எங்களுக்கு இப்போதுதான் தெரிய வருகிறது. இது மிகவும் எங்களுக்கு மன வேதனை அளிக்கிறது.

புதுச்சேரியில் எந்த கோப்புகளை அனுப்பினாலும் திருப்பி அனுப்புகின்றனர், காலதாமதம் ஆகிறது, என்னால் சரியாக செயல்பட முடியவில்லை என முதல்வரே செய்தியாளர்கள் முன்பு ஒப்புக்கொண்ட நிலையில், போக்குவரத்து அமைச்சரை மட்டும் பணி நீக்கம் செய்தது ஏன்? என அனைவரின் மனதிலும் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு பெண் என்பதாலா? இல்லை ஒரு தலித் பெண் என்பதாலா? இல்லை வசதி படைத்தவர் இல்லை… அவருக்காக கேட்க யாரும் நாதியில்லை… என நினைத்தா…’ என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

 

The post நாடாளுமன்ற தேர்தல் ஜூரம், சந்திர பிரியங்கா குற்றச்சாட்டை கையில் எடுக்கும் எதிர்க்கட்சிகள் புதிய அமைச்சர் தேர்வை தள்ளிப்போடும் ரங்கசாமி: புதுவை அரசியலை அதிர வைக்கும் இரு சமூக வாக்குகள் appeared first on Dinakaran.

Tags : Chandra Priyanka ,Rangasamy ,Pudu ,Puducherry ,Dinakaran ,
× RELATED ஹெல்மெட் போடாமல் பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி