×

நியூசிலாந்து ஹாட்ரிக் வெற்றி வில்லியம்சன், மிட்செல் அபார ஆட்டம்: வங்கதேசத்தை வீழ்த்தி அசத்தல்

சென்னை: ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரில், வங்கதேசத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய நியூசிலாந்து ஹாட்ரிக் வெற்றியுடன் புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியது. சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீசியது. லிட்டன் தாஸ், டன்ஸிட் ஹசன் இணைந்து வங்கதேச இன்னிங்சை தொடங்கினர். டிரென்ட் போல்ட் வீசிய முதல் பந்திலேயே லிட்டன் தாஸ் கோல்டன் டக் அவுட்டாகி வெளியேற, வங்கதேசம் அதிர்ச்சியில் உறைந்தது.

டன்ஸிட் 16, மெஹிதி ஹசன் மிராஸ் 30 ரன் எடுத்து பெர்குசன் பந்துவீச்சில் பெவிலியன் திரும்ப, நஜ்முல் ஷான்டோ 7 ரன் எடுத்து பிலிப்ஸ் பந்துவீச்சில் கான்வே வசம் பிடிபட்டார். வங்கதேசம் 12.1 ஓவரில் 56 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திணறிய நிலையில், கேப்டன் ஷாகிப் ஹசன் – முஷ்பிகுர் ரகிம் ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்கப் போராடியது. பொறுப்புடன் விளையாடிய இருவரும் 5வது விக்கெட்டுக்கு 96 ரன் சேர்த்தனர். ஷாகிப் 40 ரன் (51 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), முஷ்பிகுர் 66 ரன் (75 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி விக்கெட்டை பறிகொடுத்தனர். தவ்ஹித் 13, டஸ்கின் 17, முஸ்டாபிசுர் 4 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர்.

வங்கதேசம் 30 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 245 ரன் எடுத்தது. மகமதுல்லா 41 ரன் (49 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), ஷோரிபுல் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நியூசிலாந்து பந்துவீச்சில் பெர்குசன் 3, போல்ட், ஹென்றி தலா 2, சான்ட்னர், பிலிப்ஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 50 ஓவரில் 246 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. கான்வே, ரச்சின் இணைந்து துரத்தலை தொடங்கினர். ரச்சின் 9 ரன் எடுத்து முஸ்டாபிசுர் வேகத்தில் ரகிம் வசம் பிடிபட்டார். கான்வே – வில்லியம்சன் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 80 ரன் சேர்த்தது. கான்வே 45 ரன் (59 பந்து, 3 பவுண்டரி) எடுத்து ஷாகிப் சுழலில் அவுட்டானார்.

இதையடுத்து வில்லியம்சன் – டேரில் மிட்செல் இணைந்து வங்கதேச பந்துவீச்சை பதம் பார்த்தனர். இருவரும் அரை சதம் அடிக்க, நியூசிலாந்து வெற்றியை நெருங்கியது. வில்லியம்சன் 78 ரன் எடுத்து (107 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்) காயம் காரணமாக ஓய்வு பெற்றார். நியூசிலாந்து 42.5 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 248 ரன் எடுத்து வென்றது. டேரில் மிட்செல் 89 ரன் (67 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர்), கிளென் பிலிப்ஸ் 16 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். வங்கதேச பந்துவீச்சில் முஸ்டாபிசுர், ஷாகிப் தலா 1 விகெட் வீழ்த்தினர். நியூசிலாந்து ஹாட்ரிக் வெற்றியுடன் புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியது (6 புள்ளி).

The post நியூசிலாந்து ஹாட்ரிக் வெற்றி வில்லியம்சன், மிட்செல் அபார ஆட்டம்: வங்கதேசத்தை வீழ்த்தி அசத்தல் appeared first on Dinakaran.

Tags : New Zealand ,Williamson ,Mitchell ,Bangladesh ,Chennai ,ICC World Cup ODI ,
× RELATED 2-2 என தொடரை சமன் செய்தது பாக்.