×

சென்னையில் டிசம்பர் 9,10ம் தேதி நடைபெற உள்ள பார்முலா ரேஸிங் சர்க்யூட் போட்டி நடத்த ரூ.15 கோடி வழங்கினார் அமைச்சர் உதயநிதி

சென்னை: வரும் டிசம்பர் 9, 10 ஆகிய 2 நாட்கள் சென்னையில் நடைபெற உள்ள பார்முலா ரேஸிங் சர்க்யூட்-2023 போட்டி நடத்த முதற்கட்டமாக ரூ.15 கோடி உரிமைத்தொகையை அமைச்சர் உதயநிதி வழங்கினார். இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் வராலாற்றில் சிறப்பு நிகழ்வாக, சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ரேஸிங் புரோமோஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றின் சார்பில் இந்தியாவின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் தலைநகரான சென்னையில் “சென்னை பார்முலா ரேஸிங் சர்க்யூட்” நடத்தப்பட உள்ளது.

சென்னை பார்முலா ரேஸிங் சர்க்யூட் – எப்4 போட்டி, இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் ஆகியவை சென்னை மாநகரில் தீவுத்திடல் மைதானத்தில் இருந்து 3.5 கி.மீ சுற்றளவில் இரவு போட்டியாக நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆண்கள் மற்றும் பெண்கள் ஓட்டுநர்கள் பங்கேற்க உள்ளனர். தமிழ்நாடு அரசு சார்பில் இந்த போட்டியை தமிழ்நாட்டில் நடத்துவதற்காக ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் டிசம்பர் 9 மற்றும் 10 ஆகிய 2 நாட்கள் நடைபெற உள்ள பார்முலா ரேஸிங் சர்க்யூட்-2023 போட்டியை நடத்த முதற்கட்டமாக ரூ.15 கோடி உரிமைத்தொகை மற்றும் செயல்பாட்டு தொகையை நேற்று முன்தினம் சென்னை, முகாம் அலுவலகத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு அமைப்பாளர்களிடம் வழங்கினார்.

இதை தொடர்ந்து மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களான கே.ராஜேஷ் மற்றும் கே.கலைச்செல்வன் ஆகிய இருவருக்கும் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் தலா ரூ.7.20 லட்சம் மதிப்பில் செயற்கை கால்களுக்கான உபகரணங்களை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இதன் தொடர்ச்சியாக, துருக்கி நாட்டின் இஸ்தான்புல்லில் 18.5.2023 முதல் 21.5.2023 வரை நடந்த 2023ம் ஆண்டிற்கான கீகிரிளி உலக கோப்பை கிக்பாக்ஸிங் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தமிழ்நாட்டை சார்ந்த எஸ்.பரத் விஷ்ணு மற்றும் 5ம் இடம்பெற்ற எம்.கோகுலகிருஷ்ணன் மற்றும் எஸ்.அஷ்வின் ஆகியோர் அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, கிக்பாக்சிங் சங்க நிர்வாகிகள் மற்றும் பார்முலா ரேஸிங் சர்க்யூட் விளையாட்டு அமைப்பாளர்கள் உடனிருந்தனர்.

The post சென்னையில் டிசம்பர் 9,10ம் தேதி நடைபெற உள்ள பார்முலா ரேஸிங் சர்க்யூட் போட்டி நடத்த ரூ.15 கோடி வழங்கினார் அமைச்சர் உதயநிதி appeared first on Dinakaran.

Tags : Minister ,Udayanidhi ,Formula Racing circuit ,Chennai ,Formula Racing Circuit-2023 ,Dinakaran ,
× RELATED கோடைக் காலங்களில் ஏற்படும் உடல்...