×

அனைவரும் பயன்பெறும் வகையில் சாதாரண பெட்டிகளுடன் வந்தே பாரத் ரயில் சேவை: இம்மாத இறுதியில் அறிமுகப்படுத்த திட்டம்

சென்னை: அனைவரும் பயன்பெறும் வகையில் சாதாரண பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரயிலை இம்மாத இறுதியில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சமீப காலமாக ரயில்வே துறையில் வந்தே பாரத் ரயில் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதே சமயம் கட்டணம் அதிகமாக இருப்பதால் விமர்சனங்களும் எழுந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு ரயில்வே துறை, நாடு முழுவதும் ஏ.சி. வசதி இல்லாத சாதாரண பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரயில்களை இயக்க முடிவு செய்தது. இதற்கான தயாரிப்பு பணிகள் சென்னை ஐ.சி.எப். ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

வந்தே பாரத் ரயிலில் சில மாற்றங்களை செய்து சாதாரண ரயில் பெட்டிகள் உருவாக்கப்படுகின்றன. பெரம்பூரில் உள்ள கேரேஜ் மற்றும் லோகோ ஒர்க்சில் ஏரோடைனமிக் முகப்பு தோற்றம் கொண்ட 2 இன்ஜின்கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. இந்த மாத இறுதியில் சாதாரண வந்தே பாரத் ரயில்கள் ஓடும் வகையில் தயாரிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. இந்த ரயிலில் சுமார் 1800 பயணிகள் பயணிக்க முடியும். இந்த ரயில் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் செல்லும். ஏ.சி. இல்லாத மற்றும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணிக்க விரும்பும் பயணிகளுக்கு வந்தே பாரத் ரயிலின் அதே பயண அனுபவத்தை வழங்கும் வகையில் ரயில்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

அழகான இருக்கைகள், படுக்கை வசதிகளுடன் நவீன விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. இதன் உட்புறம் தற்போதைய ரயில்களின் பொதுப்பெட்டிகள் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. மின் விசிறிகள், சுவிட்ச்சுகள் நவீன வடிவமைப்பை கொண்டவை. ஒவ்வொரு இருக்கையிலும் மொபைல் போன் சார்ஜர் வசதிகள் உள்ளன. மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் ஒரு கழிப்பறையும் உள்ளது. இந்த ரயில் வந்தே பாரத் ரயிலுக்கு இணையான வேகத்தில் செல்லக்கூடியது. 2 முனைகளிலும் இன்ஜின்கள் உள்ளன.

இது பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் உள்ளது. இந்த ரயிலில் மொத்தம் 8 முன்பதிவு இல்லாத பெட்டிகள் உள்பட 22 பெட்டிகள் கொண்ட ரயிலாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ஐசிஎப் தொழிற்சாலையில் அதிகாரிகள் ரயில் பெட்டிகளின் தரத்தை நேற்று ஆய்வு செய்தனர். சாதாரண வந்தே பாரத் ரயில் இம்மாத இறுதியில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post அனைவரும் பயன்பெறும் வகையில் சாதாரண பெட்டிகளுடன் வந்தே பாரத் ரயில் சேவை: இம்மாத இறுதியில் அறிமுகப்படுத்த திட்டம் appeared first on Dinakaran.

Tags : Vande Bharat ,CHENNAI ,Dinakaran ,
× RELATED சென்னை-திருப்பதி இடையே வந்தே மெட்ரோ ரயில்: 2 மாதங்களில் சோதனை