×

தொடர் கோரிக்கையின் பலனாக பழநி-கொடைக்கானல் ரோப்கார் திட்டத்திற்கு அனுமதி

*1 மணி நேரத்தில் சுமார் 8 ஆயிரம் பேர் பயணிக்கலாம்

*கோயில் நகரம் சுற்றுலா நகராவதால் மக்கள் மகிழ்ச்சி

பழநி : தொடர் கோரிக்கையின் பலனாக பழநி-கொடைக்கானல் ரோப்கார் திட்டத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கி உள்ளதால் கோயில் நகரான பழநி சுற்றுலா நகரமாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.அறுபடை வீடுகளுள் 3ம் படை வீடாக விளங்குவது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். தென்னிந்தியாவில் அதிக பக்தர்கள் வரும் முதன்மை கோயில்களில் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலும் ஒன்று. இந்நகருக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வருடத்திற்கு சராசரியாக சுமார் 1.30 கோடி பக்தர்கள் பழநிக்கு வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் முதன்முறையாக பழநி கோயிலில் கடந்த 2004ம் ஆண்டு ரூ.4 கோடி மதிப்பீட்டில் ரோப்கார் சேவை துவங்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் ரோப்காரில் பயணம் செய்ய அதிக ஆர்வம் காட்டினர். இதன் காரணமாக ரோப்கார் இயக்கம் துவங்கப்பட்ட 1 வருடத்திலேயே அதன் முதலீட்டு தொகையான ரூ.4 கோடியை ஈட்டி சாதனை படைத்தது. இதனால் தற்போது பழநி நகரில் 2வது ரோப்கார் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

பழநி நகரம், மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இம்மேற்கு தொடர்ச்சி மலையில் முக்கிய சுற்றுலா நகரமான கொடைக்கானல் அமைந்துள்ளது. பழநியில் இருந்து 14 கொண்டை ஊசி வளைவுகளுடன் 67 கிமீ தொலைவில் கொடைக்கானல் அமைந்துள்ளது.கொடைக்கானல் செல்லும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் பழநி வழியாகவே செல்வது வழக்கம். மேலும், பழநி கோயிலுக்கு வரும் ஏராளமான பக்தர்களும் கொடைக்கானல் செல்கின்றனர்.

இந்நிலையில் கடந்த சில வருடங்களாக பழநியில் இருந்து கொடைக்கானலுக்கு ரோப் கார் அமைக்கப்பட வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். திமுக தனது தேர்தல் அறிக்கையில் பழநி-கொடைக்கானல் ரோப் கார் திட்டம் நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென அறிவித்திருந்தது. இதுதொடர்பாக பழநி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார் கடந்த ஆட்சி காலத்திலேயே 2 முறை சட்டமன்றத்தில் வலியுறுத்தி பேசினார். திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென கடிதம் மூலமாக பலமுறை ஒன்றிய அரசிடம் வலியுறுத்தினார். இதுதொடர்பாக திண்டுக்கல் எம்பி வேலுச்சாமி 2 முறை பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

தொடர் கோரிக்கைகளின் பயனாக தற்போது ஒன்றிய அரசு பழநி-கொடைக்கானல் இடையே ரோப் கார் அமைக்க ஒப்புதல் வழங்கி உள்ளது. 12 கிலோ மீட்டர் பயணத்தில் பழநியில் இருந்து கொடைக்கானலை அடையும் வகையில் பயண வழித்தடம் அமைக்கப்பட உள்ளது. 1 மணி நேரத்தில் சுமார் 8 ஆயிரம் பேர் பயணிக்கும் வகையில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் பயணிக்க வாய்ப்பு உண்டாகிறது. இதனால் கோயில் நகராக விளங்கி வந்த பழநி சுற்றுலா நகராக மாறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பழநி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார் கூறியதாவது, ஒன்றிய அரசிடம் பழநி-கொடைக்கானல் ரோப் கார் திட்டம் குறித்து பலமுறை வலியுறுத்தப்பட்டிருந்தது. திட்டத்தின் அவசியம் மற்றும் நன்மைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டிருந்தது.

ஆனால், வனவிலங்குகள் பாதுகாப்பு, சரணாலயம், வனப்பகுதி எனக்கூறி திட்டத்திற்கு ஒப்புதல் வழங்காமல் இருந்து வந்தது.
தொடர் வலியுறுத்தல்கள் மற்றும் கோரிக்கைகளின் பலனாக தற்போது இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. திட்டம் நிறைறினால், கோயில் நகரான பழநி சுற்றுலா நகராக மாறும். திட்டத்தை நிறைவேற்றுவதற்கான அனைத்து ஒத்துழைப்புகளையும் தமிழக அரசு நிச்சயம் செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

The post தொடர் கோரிக்கையின் பலனாக பழநி-கொடைக்கானல் ரோப்கார் திட்டத்திற்கு அனுமதி appeared first on Dinakaran.

Tags : Palani-Kodaikanal Ropecar ,Palani ,Palani-Kodaikanal ,Dinakaran ,
× RELATED பழநி மலைக் கோயிலில் தடையை மீறி செல்போனில் பேசிய அண்ணாமலை