×

பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் 50 மைக்ரானுக்கும் குறைவான பிளாஸ்டிக் பயன்பாடுகள்; கால்நடைகளுக்கு ஆபத்து

*கண்காணித்து தடுக்க பொதுமக்கள் கோரிக்கை

பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகரம், சுற்றுவட்டார கிராமப்புற பகுதியில் 50 மைக்ரானுக்கும் குறைவான பிளாஸ்டிக் பயன்பாடு மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் கால்நடைகள் நுகர்வதால் ஆபத்து அபாயம் நிலவுகிறது. இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மளிகைக்கடை, பேக்கரி, ஓட்டல் உள்ளிட்டவைகளில் 50 மைக்ரானுக்கும் குறைவான பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க கடந்த சில மாதமாக தடுப்பு நடவடிக்கை அதிகமானது. இருப்பினும், குறிப்பிட்ட மைக்ரானுக்கும் குறைவான பிளாஸ்டிக் பயன்பாடு என்பது அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் சுற்றுவட்டார கிராமபுறங்களிலும், 50 மைக்ரானுக்கும் குறைவான பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. அதிலும், கிராமப்புறங்களில் ரோட்டோரம் ஆங்காங்கே கிடக்கும் பிளாஸ்டிக் பொருட்களை கால்நடைகள் நுகரும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு குறிப்பிட்ட மைக்ரானுக்கும் குறைவான பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. மீறி விற்பனை செய்வோருக்கு ரூ.1000 அபராதமும், அதனை பயன்படுத்துவோருக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்று சுகாதாரப்பிரிவு அதிகாரிகள் எச்சரித்தனர்.

மேலும் அவ்வப்போது பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தடுக்கும் விதமாக, கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, 50 மைக்ரானுக்கும் குறைவான பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஆனால் இந்த செயல்பாடு காலப்போக்கில் இல்லாமல் போய்விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த சில மாதங்களாக கிராமப்புற பகுதியில் உள்ள வர்த்தக நிறுவனங்களில் 50 மைக்ரானுக்கும் குறைவான பிளாஸ்டிக் பயன்பாடு என்பது மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனை சுகாதாரப்பிரிவு அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை எனவும் கடும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, நகரம் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் குறிப்பிட்ட மைக்ரானுக்கும் குறைவான பிளாஸ்டிக் விற்பனையை தடை செய்ய வேண்டும்.

பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் கால்நடைகள் நுகர்ந்து உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் நிலவுகிறது. இதனை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் 50 மைக்ரானுக்கும் குறைவான பிளாஸ்டிக் பயன்பாடுகள்; கால்நடைகளுக்கு ஆபத்து appeared first on Dinakaran.

Tags : Pollachi ,Dinakaran ,
× RELATED கோடை மழையையடுத்து தக்காளி சாகுபடி...