×

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதிய டிசைன்களுடன் பேன்ஸி ரக காட்டன் சேலைகள்

*ஆண்டிபட்டி பகுதிகளில் உற்பத்தி பணி தீவிரம்

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி பகுதிகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சக்கம்பட்டி மற்றும் டி.சுப்புலாபுரம் பகுதிகளில் புதிய டிசைன்களுடன் காட்டன் சேலைகள் உற்பத்தி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.தேனி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக சக்கம்பட்டி டி.சுப்புலாபுரம் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் காட்டன் சேலைகள் விளங்கி வருகிறது. சக்கம்பட்டி சேலை கட்டி பூத்திருக்கு பூஞ்சோலை என்ற வரிகள் அந்த காலத்து சிவாஜி படத்தில் இடம் பெற்றுள்ளது.

அந்த வகையில் காட்டன் சேலைகள் பல்வேறு ரகங்களில் உற்பத்தி செய்யும் வகையில் ஆண்டிபட்டி அருகே உள்ள சக்கம்பட்டி மற்றும் டி.சுப்புலாபுரம் பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட விசைத்தறிகளும், ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட நெசவாளர்களும் நெசவு தொழில் செய்து வருகின்றனர். இந்த பகுதியில் சுங்குடி காட்டன், செட்டிநாடு காட்டன், பேப்பர் காட்டன், காரைக்குடி காட்டன், கோடம்பாக்கம் காட்டன், 60க்கு80, 80க்கு60 நம்பர், நைஸ் ரகங்களின் பிளைன், புட்டா, கோர்வை, ஸ்கிரீன் பிரின்டிங், பேடு ரகங்கள், கட்டம் உள்ளிட்ட பல டிசைன்களின் காட்டன் சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்த பகுதிகளில் ஒரு நாளைக்கு 20 முதல் 25 லட்சம் மதிப்பிலான சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஒரு விசைத்தறி இயந்திரத்தில் 2 நெசவாளர்கள் வேலை செய்து வருகின்றனர். ஒரு நாளைக்கு 6 ஆயிரம் சேலைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு நாளைக்கு 35 லட்சம் மதிப்பில் சேலைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

மேலும் இந்தப் பகுதியில் அவரது வீடுகளில் விசைத்தறிகள் அமைத்தும் வருவாய் ஈட்டி வருகின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் சேலைகள் விருதுநகர், ஈரோடு, போன்ற மாவட்டங்களுக்கும், கர்நாடகா, ஆந்திரா, குஜராத், கேரளா போன்ற வெளிமாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. சேலைகள் ஒவ்வொரு வாரமும் ஈரோட்டில் நடைபெறும் ஜவுளி சந்தைக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து நேரடியாக வரும் ஆர்டர் மூலம் காட்டன் சேலைகள் உற்பத்தி செய்து அனுப்பி வைக்கப்படுகிறது.

பொதுவாக இந்த பகுதிகளில் வருடந்தோறும் தீபாவளி, பொங்கல் பண்டிகைகளில் காட்டன் சேலைகள் புதிய ரகம் உற்பத்தி செய்யப்படும். அந்த வகையில் இந்த வருடம் தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதை முன்னிட்டு புதிய ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றனர். தீபாவளி தொடங்குவதற்கு 2 மாதங்களுக்கு முன்பாக சேலைகள் உற்பத்தி தொடங்கும். இதேபோல் கோடை காலத்திலும், பொங்கல் பண்டிகை நெருங்கும் போதும் உற்பத்தி அதிகளவில் தொடங்குவார்கள்.

இங்கு உற்பத்தி செய்யப்படும் காட்டன் சேலைகளுக்கு அதிகளவு மவுசு இருக்கிறது. இதனால் நெசவாளர்கள் மற்றும் வியாபாரிகள் ஆன்லைன் மூலம் சேலை விற்பனையை செய்து வருகின்றனர். இந்த ஆன்லைன் விற்பனை வடிக்கையாளர் மத்தியில் பெறும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வாடிக்கையாளர் விஷேச நிகழ்ச்சிகளுக்கு ஆன்லைன் முறையில் சேலைகள் வாங்கி வருகின்றனர். உள்ளுர் வியாபாரிகள் சேலையை படம் பிடித்து பேஸ்புக், வாட்ஸ் அப், இ-மெயில், இன்ஸ்டாகிராம் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றனர். தேவைப்படும் நபரின் தொடர்புக்கு பின் விலை நிர்ணயம் செய்து வியாபார ஆர்டர் பெற்று பார்சலில் அனுப்பி வைக்கப்படுகின்றனர். குறிப்பாக ஆன்லைனில் சேலைகள் விற்பனை வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் மத்தியிலும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சக்கம்பட்டி பகுதியை சேர்ந்த சேலை உற்பத்தியாளர் கூறுகையில், ‘‘நாங்கள் பல வருடங்களாக காட்டன் சேலைகள் உற்பத்தி மற்றும் வியாபாரம் செய்து வருகிறோம். தற்போது தீபாவளி பண்டிகைக்கு புதிய ரக காட்டன் சேலைகள் உற்பத்தி செய்து விற்பனை செய்கிறோம். சக்கம்பட்டி மற்றும் டி‌.சுப்புலாபுரம் பகுதிகளில் ஆண்டுதோறும் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதிய ரக காட்டன் சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த தீபாவளி பண்டிகைக்கு காட்டன் சேலைகள் விற்பனை தொடங்கி அமோகமாக நடைபெற்று வருகிறது.’’ என்றார்.

வாடிக்கையாளர் ஒருவரிடம் கேட்டபோது, ‘‘ஆண்டுதோறும் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையின் போது இந்த பகுதியில் தான் காட்டன் சேலைகள் வாங்குவோம். இங்குள்ள காட்டன் சேலைகள் தரமானதாகவும் விலை குறைவாகவும் உள்ளது.

இந்த பகுதியில் உள்ள காட்டன் சேலைகள் ரூ.500 முதல் தொடங்கி 1300 வரை அதிகபட்சமாக உள்ளது. இந்த தரத்தில் காட்டன் சேலைகளை மற்ற கடைகளில் வாங்கினால் ரூ.3000க்கு மேல் வாங்க வேண்டிய நிலை வரும். அதேபோல் இந்த வருட தீபாவளி பண்டிகைக்கு அதிகப்படியான காட்டன் சேலைகளும், ஏராளமான டிசைன்களும் உள்ளன’’ என்றனர்.

The post தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதிய டிசைன்களுடன் பேன்ஸி ரக காட்டன் சேலைகள் appeared first on Dinakaran.

Tags : Pansy ,Diwali ,Andipatti ,Antipatti ,Chakkampati ,T.Suppulapuram ,
× RELATED ஆண்டிபட்டி அருகே மண் திருடிய மர்ம...