×

நமக்கு நாமே திட்டத்தில் ₹1.69 கோடியில் சாலை, சாக்கடை கால்வாய் பணிகள்

*90 சதவீதம் நிறைவு

தர்மபுரி : தர்மபுரி நகராட்சி பகுதியில், நடப்பாண்டு நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ₹1.69 கோடி மதிப்பீட்டில் சாலை, சாக்கடை கால்வாய், தரைபாலம் அமைக்கம் பணிகள் நடந்து வருகிறது. இதில் 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழக அரசின் சார்பில், நமக்கு நாமே திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மக்களின் சுய சார்பு தன்மையை ஊக்குவிக்கவும், பலப்படுத்தவும், மக்களுக்கு தேவையான திட்டங்களை அவர்களது பங்களிப்புடன் செயல்படுத்தி, பொது சொத்துக்களை உருவாக்கி பராமரிப்பதே நமக்கு நாமே திட்டத்தின் நோக்கமாகும். மேலும், இத்திட்டம். வளர்ச்சி பணிகளுக்கான திட்டமிடுதல் தொடங்கி, வள ஆதராங்களை திரட்டுதல், பணிகளை மேற்கொள்ளுதல் மற்றும் மேற்பார்வை செய்தல் என அனைத்திலும் மக்களை நேரடியாக ஈடுபடுத்துகிறது. கடந்த திமுக ஆட்சியில் 2011ம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டம், அதிமுக ஆட்சியில் தொடர்ந்து செயல்படுத்தவில்லை.

இதையடுத்து, திமுக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், கடந்த 2021ம் ஆண்டில் ‘நமக்கு நாமே திட்டம்’ மற்றும் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் ஆகியவற்றை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.தற்போது தமிழகத்தில் மீண்டும் இந்த திட்டம் புத்துணர்வு பெற்று வருகிறது. நமக்கு நாமே திட்டத்தின் கீழ் எந்தெந்த பணிகள், எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பது தொடர்பாக, விரிவான வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டுள்ளது.

இந்த திட்டம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்படுகிறது. நீர்நிலைகளை புதுப்பித்தல், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், தெரு விளக்குகள், சிசிடிவி கேமரா, மரக்கன்றுகள் நடுதல், பள்ளி, கல்லூரி மருத்துவமனைகள், நகர்ப்புற முதன்மை கட்டிடங்கள் கட்டுதல், புதுப்பித்தல், சுகாதார மையங்கள், வணிக வளாகம் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் கட்டிடங்கள் நவீன நூலகங்கள், அறிவு மையங்கள், பாலம், மதகுகள், புதிய மயானம், மழைநீர் வடிகால், சாலைகள், சமூக கழிப்பறை, சந்தைகள் ஆகியவை இத்திட்டத்தின் கீழ் எடுத்து செயல்படுத்தலாம்.

நீர்நிலைகளை சீரமைப்பதை தவிர, அடையாளம் காணப்பட்ட எந்தவொரு பணிக்கும் குறைந்தபட்சம் பொதுமக்களின் பங்களிப்பு, மதிப்பீட்டின் மூன்றில் ஒரு பங்காக இருக்க வேண்டும். நீர்நிலைகளை சீரமைப்பது தொடர்பான பணிகளுக்கு, பொதுமக்களின் குறைந்த பட்ச பங்களிப்பு 50 சதவீதம் இருக்க வேண்டும். பொது பங்களிப்புக்கு உச்ச வரம்பு எதுவும் இல்லை. அதன்படி, தர்மபுரி நகராட்சி பகுதிகளில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சாலைகள், தரைப்பாலம், சாக்கடை கால்வாய்கள் உள்ளிட்ட பணிகள் பொதுமக்களின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த 2021 -2022ம் ஆண்டில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பழைய பஸ்நிலையம் புனரமைக்கும் பணி ₹1.34 கோடியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2022-2023ம் ஆண்டில், நமக்கு நாமே திட்டத்தில் ₹1.69 கோடி மதிப்பீட்டில் சாலை, தரைபாலம், சாக்கடை கால்வாய் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தர்மபுரி நகராட்சி ஆணையர் புவனேஸ்வரன் கூறுகையில், ‘மக்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், ‘நமக்கு நாமே’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஒரு திட்டத்தை செயல்படுத்த ஆகும் செலவில் ஒரு பங்கு தொகையை, மக்கள் பங்களிப்பாக அளித்தால், மீதமுள்ள இரண்டு பங்கு தொகையை அரசு வழங்கும். அவ்வகையில், 2022-2023ம் ஆண்டில் நமக்கு நாமே திட்டத்தில் ₹1.69 கோடி மதிப்பீட்டில் சாலை, சாக்கடை கால்வாய், தரைப்பாலம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் 90 சதவீத பணிகள் முடிந்து விட்டது. எஞ்சிய பணிகளும் விரைந்து முடிக்கப்படும்,’ என்றார்.

The post நமக்கு நாமே திட்டத்தில் ₹1.69 கோடியில் சாலை, சாக்கடை கால்வாய் பணிகள் appeared first on Dinakaran.

Tags : Namane ,Dharmapuri ,Udhu ,Dinakaran ,
× RELATED செல்போன் திருடிய வாலிபர் கைது