×

பெண்ணை ஆற்றின் கரையை பலப்படுத்தும் பணி கொமந்தான்மேடு தரைப்பாலம் தற்காலிகமாக மூடல்

*10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிப்பு

கடலூர் : கடலூர்-புதுச்சேரி கொமந்தான்மேடு பகுதியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணையுடன் கூடிய தரைப்பாலம் உள்ளது. இந்த பாலம் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. பாலத்தின் ஒரு பகுதி கடலூர் மாவட்ட பராமரிப்பிலும், மற்றொரு கரை புதுச்சேரி அரசு பராமரிப்பிலும் உள்ளது.

இந்த பாலத்தின் வழியாக கடலூர்-புதுச்சேரி போக்குவரத்துக்காக பாகூர், கரிக்கலாம்பாக்கம், பரிக்கல்பட்டு, ஆராய்ச்சிகுப்பம், குருவிநத்தம், கரைமேடு, திருப்பணாம்பாக்கம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள், விவசாயிகள், தினக்கூலி, ஊழியர்கள், உள்ளிட்ட பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். ஆண்டுதோறும் ஏற்படும் பருவ மழையால் தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கம்.

இந்த தரைப்பாலம் கடந்த காலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் சேதம் அடைந்திருந்தது. பொதுப்பணித்துறை நீர்ப்பாசன பிரிவு அதிகாரிகள் தற்காலிக நடவடிக்கை எடுத்து பாலத்தின் சேதத்தை சரிசெய்தனர். ஆனால் தரமற்ற நிலையில் பாலம் கட்டப்பட்டதால் இதுவரை 3 முறை சேதமடைந்துள்ளது. ஆற்றில் அதிகப்படியான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலே தடுப்பணை உடைந்து விடுவது வழக்கமாகிவிட்டது.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே பாலத்தின் கரை சேதமான நிலையில் கரையை பலப்படுத்துவதற்காக கடந்த சில மாதங்களாக பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் கொமந்தான்மேட்டில், புதுச்சேரி பொதுப்பணித்துறை சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. கடலூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள படுகை அணையின் தெற்கு கரை பகுதியில் தமிழக அரசின் மூலம் பாதுகாப்பு சுவர் கட்டும் பணி நடப்பதால் படுகை அணை வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் மாற்று பாதையில் செல்லுமாறு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

தற்போது கடலூர் மாவட்ட ஆட்சியர் எதிரே இப்பணிகள் நடைபெறுவதால் கொமதான்மேடு தரைபாலம் தற்காலிகமாக மூடப்பட்டதால் இந்த வழியை பயன்படுத்தி வந்த பள்ளி மாணவர்கள், விவசாயிகள், நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் சுமார் 10 கி.மீ தூரம் சுற்றிச் செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இப்பணிகளை விரைந்து முடித்து போக்குவரத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post பெண்ணை ஆற்றின் கரையை பலப்படுத்தும் பணி கொமந்தான்மேடு தரைப்பாலம் தற்காலிகமாக மூடல் appeared first on Dinakaran.

Tags : Komanthanmedu footbridge ,river Panna ,Cuddalore ,Cuddalore-Puducherry ,Komanthanmedu ,Tenpenna river ,river ,Tenpenna ,Dinakaran ,
× RELATED கள்ளத்தொடர்பை கைவிடாததால் மனைவியை வெட்டி கொன்ற கணவன்