×

ஐகோர்ட் உத்தரவு எதிரொலி!: புதுச்சேரியில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் அபகரித்த கோயிலுக்கு சொந்தமான 64,035 சதுர அடி நிலம் மீட்பு..வருவாய்த்துறை நடவடிக்கை..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமார், அவரது மகன் ரிச்சர்ட்ஸ் அபகரித்த கோயில் நிலம் மீட்கப்பட்டது. புதுச்சேரி காமாட்சியம்மன் கோயிலுக்கு சொந்தமான 64,035 சதுர அடி நிலம் ரெயின்போ நகர் 7வது குறுக்கு தெருவில் உள்ளது. இதன் மதிப்பு ரூ.50 கோடியாகும். இதனை போலி ஆவணம் தயாரித்து அபகரித்துவிட்டதாக புதுச்சேரி சிபிசிஐடி போலீசாருக்கு புகார் வந்தது. டிஜிபி உத்தரவின்பேரில் எஸ்.பி.மோகன்குமார் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

இதில் 31,204 சதுர அடி நிலத்தை சென்னையை சேர்ந்த ரத்தினவேல், அவரது மனைவி மோகனசுந்தரி, மனோகரன், புதுவையை சேர்ந்த சின்னராசு மற்றும் சிலர் போலி ஆவணம் தயாரித்து பத்திரப்பதிவு செய்து மனையாக விற்பனை செய்தது தெரியவந்தது. சென்னை கும்பலால் விற்கப்பட்ட இந்த மனையில் சிலவற்றை பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார், அவரது மகன் ரிச்சர்ட் ஜான்குமார் பெயரிலும், அவரது குடும்ப உறுப்பினர் பெயரிலும் 8 ஆயிரம் சதுர அடி இடத்தை வாங்கியுள்ளார்.

இதுகுறித்து சிபிசிஐடி போலீசார் முழுமையாக விசாரணை நடத்தி, அப்போதைய சார்பதிவாளர் சிவசாமி, மாவட்ட பதிவாளர் ரமேஷ், பட்டா மாற்றம் செய்த தாசில்தார் பாலாஜி உட்பட 17 பேரை கைது செய்தனர். நில பத்திரம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியம், கோயில் நிலத்தை மனை பிரிவாக மாற்றி பதிவு செய்துள்ள பத்திரங்களை ரத்து செய்ய வேண்டும், மனை வாங்கியுள்ள அனைவரின் பத்திரத்தை ரத்து செய்து சொத்தை கோவிலுக்கு ஒப்படைக்க வேண்டும்.

மேலும் சிபிசிஐடி போலீசார் உரிய விசாரணை நடத்தி சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும். சொத்து மதிப்பு குறித்து வருமானவரித்துறை உயர் விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். இதனை 6 வார காலத்திற்குள் செய்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிட்டிருந்தார். இதற்கான பணியை அரசின் வருவாய்த்துறை நேற்று தொடங்கியது. இந்நிலையில், புதுச்சேரியில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமார், அவரது மகன் ரிச்சர்ட்ஸ் அபகரித்த கோயில் நிலம் மீட்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஜான்குமார் அபகரித்த நிலம் உள்பட 64,035 சதுரஅடி நிலத்தை வருவாய்த்துறையினர் மீட்டனர்.

The post ஐகோர்ட் உத்தரவு எதிரொலி!: புதுச்சேரியில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் அபகரித்த கோயிலுக்கு சொந்தமான 64,035 சதுர அடி நிலம் மீட்பு..வருவாய்த்துறை நடவடிக்கை..!! appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Puducherry, Pa. J. ,M. L. A. Zhankumar ,Richards ,KAMATSHIAMMAN ,
× RELATED புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை