×

காசநாடு புதூர் பகுதியில் குறுவை அறுவடை பணி தீவிரம்

 

தஞ்சாவூர், அக்.12: தஞ்சாவூர் அருகே காசநாடு புதூர் பகுதியில் குருவை அறுவடை பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சாவூர் மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல்சாகுபடி நடை பெறுவது வழக்கம். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12ம்தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும். குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும்.

தாமதமாக திறந்தால் குறுவை பரப்பளவு குறைந்து சம்பா, தாளடி சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். அதன்படி இந்த ஆண்டு ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் திறக்கப்பட்டது. மின் மோட்டார் வைத்துள்ள விவசாயிகள் தண்ணீர் திறந்து விடுவதற்கு முன்பே முன் குறுவை நடவு பணிகளை மேற்கொண்டனர். இந்நிலையில் இந்த ஆண்டு மேட்டூர் அணையில் நீர்வரத்து குறைவு காரணமாக அவ்வபோது விவசாயிகளுக்கு நீர் தட்டுபாடு ஏற்பட்டது. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஆற்று நீர் குறைந்த அளவே வரத்து வந்தது.

இதனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மகசூல் குறைய வாய்ப்புள்ளதாக விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர். அதேபோல் அறுவடை செய்யப்பட்ட நூல்களை விவசாயிகள் சாலையில் போட்டு உலர்த்தும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அறுவடை செய்யப்பட்ட வயல்களில் உள்ள வைக்கோல்களை கட்டு கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது. அறுவடை செய்யப்பட்ட நெல்களை கொள்முதல் செய்வதற்காக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. விவசாயிகள் நெல்களை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து வருகின்றனர்.

The post காசநாடு புதூர் பகுதியில் குறுவை அறுவடை பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Budur ,Kasanadu ,Thanjavur ,Guru ,Tamil Nadu ,Pudur ,Dinakaran ,
× RELATED நிலப்பிரச்னை விவகாரம்: விவசாயி மீது துப்பாக்கி சூடு