×

வீராக்கண் கிராமத்தில் மூலிகைப்பயிர் சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி

 

திருவிடைமருதூர், அக்.12: திருப்பனந்தாள் வட்டார வேளாண்மைத் துறை சார்பில் விவசாய தொழில்நுட்ப மேலாண்மை முகமை மாநில விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின் கீழ் வீராக்கண் கிராமத்தில் விவசாயிகளுக்கு மூலிகைப்பயிர்கள் சாகுபடி தொழில்நுட்ப பண்ணைப்பள்ளி பயிற்சி முகாம் நடந்தது. இப்பயிற்சியில் அட்மா வட்டார தொழில்நுட்ப மேலாளர் ராஜாத்தி வரவேற்றார். வேளாண்மை உதவி இயக்குனர் சிவவீரபாண்டியன் தலைமை வகித்து, மூலிகைப்பயிர்கள் சாகுபடியின் முக்கித்துவம் மற்றும் மூலிகை பயிர்கள் சாகுபடி செய்வதால் ஏற்படும் பொருளாதார வளர்ச்சி, மூலிகை சாகுபடி பயிற்சியின் செயல் திட்டங்கள் மறறும் வட்டார அளவில் சாகுபடி செய்யப்படும் மூலிகை பயிர்கள் குறித்து விளக்கினார்.

திருவாரூர் மத்திய பல்கலைக்கழக தோட்டக்கலை உதவிப் பேராசிரியர் செந்தில்குமார் தொழில்நுட்ப கருத்துகளை கூறினார். இதில் மூலிகை பயிர்கள் சாகுபடி செய்வதற்கு ஏற்ற மண் வகைகள், தட்பவெப்ப சூழ்நிலைகள், மருத்துவ குணங்கள், மற்றும் திருப்பனந்தாள் வட்டாரத்திற்கு ஏற்ற நித்தியகல்யாணி, வல்லாரை, சோற்றுக் கற்றாழை, சித்தரத்தை, வசம்பு, வெட்டிவேர் மற்றும் இஞ்சி பயிர்களின் மருத்துவ பண்புகளையும், அதற்கான வணிக வாய்ப்புகளையும் கூறினார்.

மூலிகை பயிர்கள் சாகுபடி செய்வதால் இயற்கையிலேயே பூச்சி மற்றும் நோய் எதிர்ப்பு திறன் உள்ளதால் சாகுபடி செலவு குறைவதுடன் லாபம் அதிகரிக்கும் என்றும், சித்தா மற்றும் அலோபதி மருத்துவ முறைகள் மூலிகை பயிர்களையே ஆதாரமாக கொண்டு மருந்துகள் தயாரிக்கப்படுகிறது என்றும் விளக்கினார். வேளாண்மை அலுவலர் கார்த்திகேயன் நன்றி கூறினார். பண்ணைப் பள்ளி பயிற்சிக்கான கூட்ட ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் ரமேஷ், அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் வெங்கடேசன், மனிஷியா ஆகியோர் செய்திருந்தனர்.

The post வீராக்கண் கிராமத்தில் மூலிகைப்பயிர் சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Veerakan Village ,Thiruvidaimarudur ,Agriculture Technology Management Agency ,Tiruppanandal District Agriculture Department State Extension Renovation ,
× RELATED கும்பகோணம் அருகே பரபரப்பு: கிராமத்திற்குள் வந்த முதலை