ஆண்டிபட்டி, அக். 13: ஆண்டிபட்டி அருகே, சேதமடைந்த நிலையில் மேல்நிலை குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆண்டிபட்டி ஒன்றியத்துக்குட்பட்டது ஒக்கரைப்பட்டி கிராமம். இங்கு சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதியில் பொதுமக்கள் குடிநீர் தேவைக்காக கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது.
இந்த தொட்டியில் குடிநீர் சேகரிக்கப்பட்டு குடியிருப்பு பகுதிகளுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது. ஆனால் முறையாக பராமரிக்காததால் குடிநீர் தொட்டியின் சிமெண்ட் பூச்சு உதிர்ந்து, கம்பிகள் வெளியே தெரியும் வகையில் சிதிலமடைந்து காணப்படுகிறது. மேலும் தொட்டியை தாங்கி நிற்கும் தூண்களும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த தொட்டி எந்நேரமும் கீழே விழும் அபாயம் உள்ளது.
தொட்டிக்கு அருகில் மக்கள் நடமாட்டமும், குழந்தைகள் விளையாடும் இடமாகவும் இருப்பதால் விபத்து அபாயம் நிலவுகிறது. இது தொடர்பாக ஊராட்சி மன்ற நிர்வாகம் மற்றும் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் இப்பகுதிமக்கள் பலமுறை தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே குடிநீர் தொட்டியை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை எழுந்துள்ளது.
The post ஆண்டிபட்டி அருகே மேல்நிலை குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும்: ஒக்கரைப்பட்டி கிராமமக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.
