×

கெயிலின் சாதனை புத்தகத்தில் நடுவுல ஒரு பக்கத்த எடுத்துட்டேன்: சிக்சர் சர்மா உற்சாகம்

டெல்லி: உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. ஆனாலும் கேப்டன் ரோகித் சர்மா உட்பட 3 வீரர்கள் அடுத்தடுத்து பரிதாபமாக டக் அவுட்டானார்கள். அது இந்தியா ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது. ஆனால் அதை ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2வது ஆட்டத்தில் ரோகித் சர்மா ஈடு செய்து விட்டார். அது மட்டுமல்ல அந்த ஆட்டத்தில் உலகச் சாதனைகளையும் படைத்தார். ஆப்கான் பந்து வீச்சை நொறுக்கி 84பந்துகளில் 131ரன் குவித்தார். அதன் மூலம் உலக கோப்பை தொடர்களில் அதிக சதம்(7) விளாசியவர்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்தார்.

அடுத்து டி20, ஒருநாள், டெஸ்ட் என எல்லா வகையான சர்வதேச ஆட்டங்களிலும் அதிக சிக்சர்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் ‘யுனிவர்சல் பாஸ்’ கிறிஸ் கெயிலை(483ஆட்டங்கள், 553 சிக்சர்,) பின்னுக்கு தள்ளி அதிலும் ‘ஹிட் மேன்’ ரோகித் சர்மா(453ஆட்டங்கள், 556சிக்சர்) முதல் இடத்தை பிடித்தார்.
இது குறித்து ரோகித் சர்மா, ‘ யுனிவர்சல் பாஸ்(கிறிஸ் கெயில்) தான் எப்போது யுனிவர்சல் பாஸ். நான் அவருடைய சாதனைப் புத்தகத்தில் இருந்து ஒரு பக்கத்தை மட்டும் எடுத்துள்ளேன். எங்கு விளையாடினாலும் அவர் ஒரு சிக்சர் அடிக்கும் இயந்திரம் என்பதை பார்த்து உள்ளோம்.

நாங்கள் இருவரும் ஒரே மாதிரியான சீருடையைதான் அணிகிறோம். அதில் அவருடைய எண்ணும் 45, என்னைடைய எண்ணும் 45. அதனால் நான் செய்திருப்பது அவருக்கும் மகிழ்ச்சியை தரும் என்று நம்புகிறேன். கிரிக்கெட் விளையாடிய தொடங்கிய போது இவ்வளவு சிக்சர்களை அடிக்க முடியும் என்று நான் நினைக்கவே இல்லை. அதற்கான பல வகைகளில் நான் உழைத்து இருக்கிறேன். அதனால் கிடைத்த பலனுக்காக நான் இன்று மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் நான் திருப்தி அடையாதவன். எனவே தொடர்ந்து இது போல் சிறப்பாக விளையாடவே விரும்புகிறேன். அதில்தான் என் கவனம் இருக்கிறது. கூடவே ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதுதான் முக்கிய இலக்கு’ என்று கூறினார்.

*கெயில் பாராட்டு
ரோகித் சர்மாவின் சாதனையை பாராட்டி வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் சமூக ஊடகத்தில் பாராட்டி பதிவிட்டுள்ளார். கூடவே ‘எண்:45 சிறப்பானது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

The post கெயிலின் சாதனை புத்தகத்தில் நடுவுல ஒரு பக்கத்த எடுத்துட்டேன்: சிக்சர் சர்மா உற்சாகம் appeared first on Dinakaran.

Tags : Gayle ,sixer ,Sharma ,Delhi ,India ,Australia ,World Cup cricket ,Rohit Sharma ,Dinakaran ,
× RELATED ஷகிரா மாதிரி யோசி… பியான்சே போல பாடு!