×

திமுக, அதிமுக நிர்வாகிகள் கொலையில் தொடர்புடைய 2 ரவுடிகள் சுட்டுக்கொலை: சென்னை அருகே போலீசை துப்பாக்கியால் சுட்டு தப்ப முயன்ற போது தனிப்படை என்கவுன்டர் செய்தது; செங்கல்பட்டில் போலீஸ் சுட்டதில் ரவுடி காயம்

சென்னை: திமுக பிரமுகர், அதிமுக மாஜி பஞ்சாயத்து தலைவர் கொலை வழக்கில் தொடர்புடைய கூலிப்படை தலைவன் உள்பட 2 பேர் போலீசாரின் என்கவுன்டரில் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டனர். ரவுடிகளுடன் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் காயம் அடைந்த 2 போலீசார் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் ரவுடிகளின் அராஜகத்தை கட்டுப்படுத்த போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி, டிஜிபி சங்கர் ஜிவால், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண், சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர், தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ், ஆவடி கமிஷனர் சங்கர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையில் ரவுடிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டது.

இந்தப் பட்டியலின்படி, தமிழகத்தில் கொலை, கட்டப்பஞ்சாயத்து, ஆள் கடத்தல் உட்பட பல குற்றச்செயல்களில் ஈடுபட்ட ரவுடிகளை கட்டுப்படுத்த தனி திட்டம் வகுக்கப்பட்டது. அதன்படி 24 மணி நேரமும் ரோந்து வந்து கண்காணித்து, ரவுடிகளையும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுவரும் கும்பலையும் கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னை அருகே சோழவரத்தில் நேற்று காலை போலீசார் நடத்திய என்கவுன்டரில் பிரபல ரவுடிகள் 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

சென்னை அருகே செங்குன்றம் அடுத்த சோலையம்மன் நகரை சேர்ந்தவர் பிரபல கூலிப்படை தலைவனாக செயல்பட்டு போலீசுக்கு சவாலாக விளங்கியவன் முத்து சரவணன் (40). இவர் மீது கொலை, கொலை முயற்சி மற்றும் கொள்ளை உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் கூலிப்படை தலைவனாக செயல்பட்டு வந்துள்ளார். இவருக்கு பின்னால் ஒரு ரவுடி கும்பலே வலம் வந்துள்ளது. முத்துசரவணன் மூலம் ஆள் கடத்தல், கொலை உள்ளிட்ட சம்பவங்களை அரங்கேற்றி வந்து உள்ளனர். இவரது கூட்டாளி சண்டே சதீஷ்(34). செங்குன்றம் அருகே பாடியநல்லூர் பகுதியை சேர்ந்த ஒரு தொழிலதிபரிடம் முத்துசரவணன் ஒரு கோடி ரூபாய் கேட்டு மிரட்டி வந்துள்ளார். அவர் பணம் தராமல், பாடியநல்லூர் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பார்த்திபனிடம் புகார் செய்தார். அப்போது அவர், நான் பார்த்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

பணம் கிடைக்காத ஆத்திரத்தில் இருந்த ரவுடி முத்துசரவணன் செங்குன்றம் அருகே பாடியநல்லூர் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பார்த்திபனை கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி வெட்டி படுகொலை செய்தார். இதுசம்பந்தமாக போலீசார் வழக்குபதிவு செய்து முத்துசரவணனை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து தீவிரமாக தேடி வந்தனர். மேலும் அவரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தனர். ஏற்கனவே சென்னை மடிப்பாக்கத்தில் திமுக வட்டச் செயலாளர் செல்வத்தை, ஒரு கோடி ரூபாய்க்காக படுகொலை செய்துள்ளார். இதுபோல 7 கொலை வழக்குகள் முத்துசரவணன் மீது உள்ளன.

இந்நிலையில், செங்குன்றம் அருகே அருமந்தை, புதூர் செல்லும் சாலையில் உள்ள மாரம்பேடு கண்டிகை பைபாஸ் சாலையில் உள்ள பாழடைந்த பங்களாவில் ரவுடி முத்துசரவணன், தனது கூட்டாளி சண்டே சதீஷுடன் பதுங்கியிருப்பதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இணை கமிஷனர் விஜயகுமர், துணை கமிஷனர் பாலகிருஷ்ணன், பூந்தமல்லி உதவி ஆணையர் ஜவகர் பீட்டர் பாபு தலைமையில் தனிப்படை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து பங்களாவை சுற்றிவளைத்தனர். இதனால், பங்களாவில் இருந்து வெளியேறிய ரவுடிகள் இரண்டு பேரும் போலீசாரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு தாக்கிவிட்டு தப்பியோடினர். இதனால் போலீசார் பதிலுக்கு தங்களை காத்துக் கொள்வதற்காக ரவுடிகள் முத்துசரவணன், சண்டே சதீஷ் ஆகியோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

அதில் கூலிப்படை தலைவன் முத்துசரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த சண்டே சதீஷை மீட்டு, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே சண்டே சதீஷ் உயிரிழந்தார். இதன்பிறகு, இரண்டுபேரின் சடலங்களை அதே மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, போலீசார் நடத்திய என்கவுன்டரின்போது, ரவுடிகள் தாக்கியதில் படுகாயம் அடைந்த போலீஸ்காரர்கள் கிருஷ்ணமூர்த்தி, ராஜேஷ் மற்றும் லிபி பிரபு ஆகியோர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை சென்னை டிஜிபி சங்கர் ஜிவால், ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் ஆகியோர் நேற்று நேரில் சந்தித்து, நலம் விசாரித்து ஆறுதல் கூறினர்.

இந்தச் சம்பவம் குறித்து நிருபர்களிடம் ஆவடி கமிஷனர் சங்கர் கூறும்போது, ‘‘பாடியநல்லூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பார்த்திபன் என்பவரின் கொலை வழக்கில் முத்துசரவணன், சண்டே சதீஷ் ஆகியோரை பிடிக்க தனிப்படைகள் அமைத்து தேடி வந்தோம். இங்குள்ள பாழடைந்த பங்களாவில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலின்பேரில், அவர்களை பிடிக்க முயன்றபோது, அவர்கள் துப்பாக்கியால் காவலர்களை நோக்கி சுட்டனர். இதனால், போலீசார் தற்காப்புக்காக சுட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், காயம் அடைந்த மூன்று போலீசார், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களின் கைகளில் குண்டு காயம் ஏற்பட்டுள்ளது,’’ இவ்வாறு அவர் கூறினார்.

செங்கல்பட்டில் ரவுடி படுகாயம்: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் மாரியம்மன்கோயில் தெருவை சேர்ந்தவர் தணிகா என்ற தணிகாசலம் (35). சரித்திரபதிவேடு குற்றவாளியான இவர் மீது திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவாரூர், விருதுநகர் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வெடிபொருட்கள் பயன்படுத்தி கொலை உட்பட 8 கொலை வழக்குகளும், ஒரு கொலை முயற்சி வழக்கு, ஆயுதம் மற்றும் வெடிபொருட்களை பயன்படுத்தி கலவரத்தில் ஈடுபட்ட வழக்கு, இரண்டு கொள்ளை வழக்கு, 4 இதர வழக்குகள் என 17க்கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு காவல்நிலையங்களில் நிலுவையில் உள்ளன. மேலும், 2014ம் ஆண்டு சித்தாமூர் காவல்நிலையத்தில் கொள்ளை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சித்தாமூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட தணிகா நீதிமன்றத்தில் ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, செங்கல்பட்டு தாலுகா காவல்நிலைய ஆய்வாளர் புகழ் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் ராஜா, பிரதாப் சந்திரன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளி தணிகாவை தேடிவந்தனர். இதையடுத்து, சென்னையில் பதுங்கி இருந்த தணிகாவை நேற்று முன்தினம் இரவு கைது செய்து போலீஸ் வாகனத்தில் எஸ்ஆர்எம்சி காவல்நிலையம் அழைத்து சென்று முதல்கட்ட விசாரணை நடத்தப்பட்டது. அதன்பிறகு, தணிகாவை சித்தாமூர் காவல்நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

அப்போது, மாமண்டூர் பகுதியில் வந்தபோது தணிகா, போலீசாரை தாக்கிவிட்டு போலீஸ் வாகனத்தில் இருந்து குதித்து தப்பி ஓடினார். போலீசார் எச்சரிகைவிடுத்தும் மீண்டும் போலீசாரை ரவுடி தணிகா தாக்கியுள்ளார். இதனால் போலீசார் இரண்டு ரவுண்ட் துப்பாக்கியால் அவரை சுட்டுள்ளனர். இதில், அவரது வலது முழங்கால், வலது கையில் மேல் பகுதிகளில் குண்டுகள் பாய்ந்து, படுகாயம் அடைந்தார். இதனால் ரத்தவெள்ளத்தில் வலிதாங்க முடியாமல் துடித்த தணிகாவை போலீசார் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட தனிப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சென்னை அருகே இரு தனிப்படை போலீசார் 2 இடங்களில் துப்பாக்கியால் சுட்டதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இது ரவுடிகள் மத்தியில் பெரும் பீதியை உருவாக்கியுள்ளது.

* ரவுடி மீது 30 வழக்குகள்
செங்குன்றம், சோழவரம் மற்றும் புழல் ஆகிய காவல்நிலையங்களில் என்கவுன்டர் செய்யப்பட்ட பிரபல ரவுடி முத்துசரவணன் மீது 9 கொலை வழக்குகள், 30 கொலை முயற்சி வழக்குகள் உள்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த 2015ல் செங்குன்றம் அருகே உள்ள நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் (பொறுப்பு) கோட்டைசாமியை கொலை செய்த வழக்கும் இவர் மீது உள்ளது. இந்த வழக்குதான் முத்துசரவணன் மீது பதியப்பட்ட முதல் கொலை வழக்கு. இதன்பிறகு, கூட்டாளிகளை சேர்த்துக்கொண்டு கூலிப்படை தலைவனாக செயல்பட்டுள்ளார்.

The post திமுக, அதிமுக நிர்வாகிகள் கொலையில் தொடர்புடைய 2 ரவுடிகள் சுட்டுக்கொலை: சென்னை அருகே போலீசை துப்பாக்கியால் சுட்டு தப்ப முயன்ற போது தனிப்படை என்கவுன்டர் செய்தது; செங்கல்பட்டில் போலீஸ் சுட்டதில் ரவுடி காயம் appeared first on Dinakaran.

Tags : 2 ,Rawudi ,Dhimuka ,Chennai ,Chengaltt ,Dhimuka Pramukh ,Aimuga Maji Panchayat ,Dimuga ,
× RELATED பணியில் அலட்சியமாக இருந்த புகாரில் 2 ரோந்து காவலர்கள் பணியிடைநீக்கம்!