×

3 சுவாமி விக்ரகங்கள் திருவனந்தபுரத்துக்கு புறப்பாடு பத்மநாபபுரம் அரண்மனையில் உடைவாள் ஒப்படைக்கும் நிகழ்ச்சி: திரளான பக்தர்கள் பரவசம்

குமாரபுரம்: திருவனந்தபுரத்தில் வரும் 15ம் தேதி நவராத்திரி விழா நடக்கிறது. இதில் பங்கேற்க கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் இருந்து முன்னுதித்த நங்கையம்மன் விக்ரகம் நேற்று காலை பல்லக்கில் புறப்பட்டு பத்மநாபபுரம் நீலகண்டசுவாமி கோயிலுக்கு சென்றது. தொடர்ந்து இன்று காலை முன்னுதித்த நங்கையம்மன் விக்ரகம் மீண்டும் புறப்பட்டு பத்மநாபபுரம் தேவாரக்கட்டு சரஸ்வதி கோயிலை வந்தடைந்தது. அதேபோல் வேளிமலை முருகன் விக்ரகமும் வாகன பவனியாக அங்கு வந்து சேர்ந்தது. இதையடுத்து முன்னுதித்த நங்கையம்மன், வேளிமலை முருகன், தேவாரக்கட்டு சரஸ்வதி ஆகிய 3 விக்ரகங்களும் ஊர்வலமாக பத்மநாபபுரம் அரண்மனையை வந்தடைந்தன. காலை 7 மணியளவில் பாரம்பரிய முறைப்படி பத்மநாபபுரம் அரண்மனையில் உள்ள உப்பரிகை மாளிகை மேல்மாடியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மன்னர் மார்த்தாண்ட வர்மாவின் உடைவாளை ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் பத்மநாபபுரம் அரண்மனை அதிகாரி சது, கேரள தொல்லியல் துறை இயக்குனர் தினேசனிடம் உடைவாளை ஒப்படைத்தார். அவர், கேரள தேவசம்போர்டு அமைச்சர் ராதா கிருஷ்ணனிடம் ஒப்படைத்தார். இதையடுத்து உடைவாளை குமரி மாவட்ட திருக்கோயில்களின் இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியனிடம் கொடுத்தார். பின்னர் குமாரகோவில் மேலாளர் மோகனகுமாரிடம் உடைவாள் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், விஜய் வசந்த் எம்பி, முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன், கலெக்டர் தர், கேரள தேவசம்போர்டு தலைவர் அனந்த கோபன் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். அதன் பிறகு கேரள போலீசார் அணிவகுப்பு மரியாதை செய்தனர்.

இதையடுத்து குமாரகோவில் மேலாளர் மோகனகுமார் உடைவாளை கையில் ஏந்தியவாறு சாமி சிலைகள் ஊர்வலத்தின் முன்பாக புறப்பட்டு சென்றார். அவரது பின்னால் நெற்றிப்பட்டம் சூட்டிய யானையின் மீது ஒய்யாரமாக சரஸ்வதி தேவி முன் செல்ல, வேளிமலை குமாரசுவாமி, முன்னுதித்த நங்கையம்மன் விக்ரகம் பின் தொடர்ந்து 9.15 மணியளவில் திருவனந்தபுரத்துக்கு ஊர்வலமாக புறப்பட்டன. இந்த பவனியானது கேரளபுரம், ராஜபாதை, பழைய பள்ளி வழியாக திருவிதாங்கோடு, அழகியமண்டபம் சென்று இரவு குழித்துறையில் தங்குகிறது. பின்னர் 13ம் தேதி அங்கிருந்து புறப்பட்டு நெய்யாற்றின்கரை சென்றடையும். 14ம் தேதி திருவனந்தபுரம் சென்றடைகிறது. அங்கு தொடங்கும் நவராத்திரி பூஜையில் சரஸ்வதி தேவி கோட்டைக்ககம் நவராத்திரி மண்டபத்திலும், வேளிமலை முருகன் ஆரியசாலை கோயிலிலும், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை செந்திட்டை பகவதி கோயிலிலும் பங்கேற்கின்றனர். பின்னர் விஜயதசமி முடிந்து, 28ம் தேதி பத்மநாபபுரம் வந்தடைகின்றன.

 

The post 3 சுவாமி விக்ரகங்கள் திருவனந்தபுரத்துக்கு புறப்பாடு பத்மநாபபுரம் அரண்மனையில் உடைவாள் ஒப்படைக்கும் நிகழ்ச்சி: திரளான பக்தர்கள் பரவசம் appeared first on Dinakaran.

Tags : Swami ,Thiruvananthapuram Handover ,Padmanabhapuram Palace ,Kumarapuram ,Navaratri festival ,Thiruvananthapuram ,Kanyakumari district ,Suchindra ,
× RELATED ராமகிருஷ்ண மிஷனின் புதிய தலைவராக சுவாமி கவுதமானந்தாஜி மகாராஜ் தேர்வு