×

சுகாதாரத்துறைக்கு இதுநாள்வரை வழங்கப்பட்ட விருதுகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து வாழ்த்து!

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (12.10.2023) தலைமைச் செயலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சந்தித்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சிறப்பான செயல்பாடுகளுக்காக மே 2021 முதல் இதுநாள்வரை வழங்கப்பட்ட விருதுகளை காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.

மே 2021 முதல் இதுநாள்வரை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையால் பெறப்பட்ட விருதுகளின் விவரங்கள்; 13.12.2021 அன்று உலகளாவிய சுகாதார பாதுகாப்பு தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற தேசிய அளவிலான நிகழ்ச்சியில், நாட்டிலேயே அதிகபட்சமாக 22 தொற்றா நோய்களுக்கான 29,88,110 பரிசோதனைகள் மேற்கொண்டதற்காகவும், பிரச்சாரத்தின் போது அதிக எண்ணிக்கையிலான 85,514 ஆரோக்கிய அமர்வுகளை நடத்தியதில் மூன்றாவது இடத்தை பெற்றதற்காவும் தமிழ்நாடு இரண்டு விருதுகளை வென்றுள்ளது.

24.3.2022 அன்று புதுதில்லியில் நடைபெற்ற உலக காசநோய் தினத்தில், காசநோயின் பாதிப்பை 40 விழுக்காடு குறைத்ததற்காக நீலகிரி மாவட்டத்திற்கு வெள்ளிப் பதக்கமும், காசநோயின் பாதிப்பை 20 விழுக்காடு குறைத்ததற்காக விழுப்புரம், சிவகங்கை, கன்னியாகுமரி, நாமக்கல், நாகப்பட்டினம் மற்றும் கரூர் ஆகிய 6 மாவட்டங்களுக்கு வெண்கல பதக்கமும் ஒன்றிய அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் வழங்கப்பட்டது.

7.6.2022 அன்று புதுதில்லியில் நடைபெற்ற உலக உணவு பாதுகாப்பு தினத்தையொட்டி நிகழ்ச்சியில், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம், மனித வளம் மற்றும் நிறுவனங்களைப் பற்றிய தரவுகள், தர நிர்ணய விதிமுறைகளைப் பின்பற்றுதல், உணவு பொருட்களைப் பரிசோதிப்பதற்கான கட்டமைப்பு மற்றும் கண்காணிப்பு, பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு, நுகர்வோருக்கு அதிகாரமளித்தல் ஆகிய ஐந்து குறியீடுகளின் அடிப்படையில் தர மதிப்பீடு செய்ததில், 2021-22-ஆம் ஆண்டிற்கான செயல்பாட்டில் இந்திய அளவில் தமிழ்நாடு முதல் மாநிலமாக தேர்வு செய்யப்பட்டு அதற்கான விருதினை பெற்றுள்ளது.

7.6.2022 அன்று புதுதில்லியில் நடைபெற்ற உலக உணவு பாதுகாப்பு தினத்தையொட்டி நிகழ்ச்சியில், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையத்தால் நடத்தப்பட்ட உணவு வணிகங்களுக்கான உரிமம் / பதிவுச் சான்று வழங்குதல் மற்றும் உணவு மாதிரிகள் எடுத்து கண்காணித்தல், பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான உணவு வழங்குவது குறித்து தர மதிப்பீடு செய்தல் மற்றும் சான்று வழங்குதல், தரமான, பாதுகாப்பான, செறிவூட்டப்பட்ட, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு பழக்கத்தை ஏற்படுத்துதல், உணவு உட்கொள்ளும் முறையில் மாற்றத்தை ஏற்படுத்துதல் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் போன்ற ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் தொடர்பாக உண்ணத் தகுந்த உணவு குறித்த போட்டியில் (Eat Right Challenge) இந்தியா முழுவதும் 150 மாவட்டங்கள் பங்கேற்றதில், 75 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் திருவள்ளூர், காஞ்சீபுரம், சேலம், கோயம்புத்தூர், சென்னை, திருநெல்வேலி, ஈரோடு, மதுரை, தூத்துக்குடி, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய 11 மாவட்டங்கள் சிறந்த செயல்பாட்டிற்கான விருதினை பெற்றுள்ளது.

27.7.2022 அன்று ஒன்றிய அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நல அமைச்சகம் புதுடெல்லியில் நடத்திய தேசிய குடும்ப கட்டுப்பாடு உச்சிமாநாட்டில், தமிழ்நாட்டில் பெண்களுக்கான பேறுகாலத்திற்கு பின் பொருத்தப்படும் தற்காலிக நவீன கருத்தடை சாதனம் தொடர்பான சாதனையில் அகில இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடம் பெற்றதற்காக விருது வழங்கப்பட்டது.

28.7.2022 அன்று கர்ப்பிணி பெண்களுக்கான ஹெப்படைடிஸ்-பி பரிசோதனைகளுக்கான ஒருங்கிணைந்த சுகாதார சேவைகளுக்காக 2021-22-ஆம் ஆண்டிற்கான விருது தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டது.

9.9.2022 அன்று அரசு சமுதாய சுகாதார மையங்கள் பிரிவின் தேசிய தர உறுதி நிர்ணய திட்டத்தை (NQAS) தமிழ்நாட்டில் 250 அரசு சமுதாய சுகாதார மையங்களில் செயல்படுத்தியதற்காக தேசிய அளவில் முதல் நிலை விருதினை ஒன்றிய அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நல அமைச்சகம் தமிழ்நாட்டிற்கு வழங்கியுள்ளது.

9.9.2022 அன்று அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும் அரசு துணை மாவட்ட மருத்துவமனை பிரிவின் கீழ், தமிழ்நாட்டில் 100 அரசு மருத்துவமனைகளுக்கு மேல் தேசிய தர உறுதி நிர்ணய திட்டம் (NQAS) செயல்படுத்தியதற்காக தேசிய அளவிலான இரண்டாம் நிலை விருதினை ஒன்றிய அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நல அமைச்சகம் தமிழ்நாட்டிற்கு வழங்கியுள்ளது.

10.12.2022 அன்று உத்திரபிரதேசம் மாநிலம், வாரணாசியில் நடைபெற்ற “அனைவருக்கும் நலவாழ்வு திட்டம்“ தின நிகழ்ச்சியில், அனைவருக்கும் நலவாழ்வு மையங்கள் மூலம் 12.10.2022 முதல் 8.12.2022 வரை 22,58,739, தொலை தொடர்பு மருத்துவ ஆலோசனைகள் வழங்கி இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடமும், கிராமப்புறங்களில் நலவாழ்வு மையங்கள் மூலம் தொலைதூர மருத்துவ சேவையை (Tele Consultation) செயல்படுத்தியதில் பெரிய மாநிலங்களில் இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடமும் பெற்றதற்காக பாராட்டுச் சான்றிதழும், கேடயமும் தமிழ்நாடு பெற்றுள்ளது.

16.12.2022 அன்று பிரதான் மந்திரி சுரஷத் மாத்ரித்வா அபியான் திட்டம் சிறப்பாக செயல்படுத்தி மகப்பேறு சிக்கல்கள் உள்ள கர்ப்பிணி தாய்மார்களை கண்டறிந்து சிகிச்சை வழங்குவதில் தேசிய அளவில் தமிழ்நாடு முதலிடம் பெற்றதற்காக ஒன்றிய அரசின் விருது வழங்கப்பட்டது.

16.12.2022 அன்று சுரஷத் மாத்ரித்வா ஆஷ்வாசன் திட்டம் (சுமன்) செயல்படுத்தப்பட்டதற்காக தமிழ்நாட்டிற்கு இரண்டாம் இடமும், தடுக்கக்கூடிய மகப்பேறு இறப்புகளை தவிர்த்தலில் பெரிய மாநிலங்களுக்கான குறியீட்டில் இரண்டாம் இடமும் தமிழ்நாடு பெற்றுள்ளது.

2022-ஆம் ஆண்டிற்கான ஸ்கோச் விருதினை (SKOCH Award) 128 அரசு மருத்துவ நிலையங்களில் டயாலிசிஸ் சேவையை வழங்கி வருவதற்காக தமிழ்நாடு பெற்றுள்ளது. 16.1.2023 அன்று ஊரக மற்றும் நகரப் பகுதிகளில் மாதவிடாய் கால தன் சுத்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருவதற்காக, மிகச் சிறந்த மாதவிடாய் கால தன் சுத்த இயக்க விருதினை தமிழ்நாடு பெற்றுள்ளது.

16.01.2023 அன்று ஒன்றிய அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நல அமைச்சகம், 16.1.2023 மற்றும் 17.1.2023 ஆகிய நாட்களில் நடத்திய பள்ளிகள் சுகாதாரம் மற்றும் நலவாழ்வு தூதுவர்கள் திட்டத்திற்கான கருத்தரங்கில் தேசிய இளம் சிறார் நலத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருவதற்காக தமிழ்நாட்டிற்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

24.03.2023 அன்று உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காசநோய் இல்லாத நிலையை நோக்கி முன்னேறி வருவதற்காக 2022-ஆம் ஆண்டிற்கான தங்கப் பதக்கங்கள் திருச்சிராப்பள்ளி மற்றும் திருவாரூர் மாவட்டங்களுக்கும், வெள்ளிப் பதக்கங்கள் மதுரை, தூத்துக்குடி, கரூர், கன்னியாகுமரி, திருவண்ணாமலை மாவட்டங்களுக்கும், வெண்கலப் பதக்கம் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கும் ஒன்றிய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் வழங்கப்பட்டன. மேலும், நிலையான வளர்ச்சி இலக்கு கட்டமைப்பின்படி 2015 முதல் காசநோய் பாதிப்பு 80% குறைப்பு முயற்சியின் கீழ், 2022-ஆம் ஆண்டிற்கான காசநோய் இல்லாத மாவட்டமாக நீலகிரி மாவட்டம் அறிவிக்கப்பட்டு, தேசிய அளவில் விருது வழங்கப்பட்டது.

7.6.2023 அன்று புதுதில்லியில் நடைபெற்ற உலக உணவு பாதுகாப்பு தினத்தையொட்டி நிகழ்ச்சியில், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம், மனித வளம் மற்றும் நிறுவனங்களைப் பற்றிய தரவுகள், தர நிர்ணய விதிமுறைகளைப் பின்பற்றுதல், உணவு பொருட்களைப் பரிசோதிப்பதற்கான கட்டமைப்பு மற்றும் கண்காணிப்பு, பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு, நுகர்வோருக்கு அதிகாரமளித்தல் ஆகிய ஐந்து குறியீடுகளின் அடிப்படையில் தர மதிப்பீடு செய்ததில், 2022-23-ஆம் ஆண்டிற்கான செயல்பாட்டில் இந்திய அளவில் தமிழ்நாடு மூன்றாவது மாநிலமாக தேர்வு செய்யப்பட்டு அதற்கான விருதினை பெற்றுள்ளது.

7.6.2023 அன்று புதுதில்லியில் நடைபெற்ற உலக உணவு பாதுகாப்பு தினத்தையொட்டி நிகழ்ச்சியில், உணவு வணிகங்களுக்கான உரிமம், பதிவுச் சான்று வழங்குதல் மற்றும் உணவு மாதிரிகள் எடுத்து கண்காணித்தல், பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான உணவு வழங்குவது குறித்து தர மதிப்பீடு செய்தல் மற்றும் சான்று வழங்குதல், தரமான, பாதுகாப்பான, செறிவூட்டப்பட்ட, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு பழக்கத்தை ஏற்படுத்துதல், உணவு உட்கொள்ளும் முறையில் மாற்றத்தை ஏற்படுத்துதல் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் போன்ற ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் தொடர்பாக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையத்தால்நடத்தப்பட்ட 2022-2023ஆம் ஆண்டிற்கான Eat Right Challenge போட்டியில் இந்திய அளவில் 260 மாவட்டங்கள் கலந்து கொண்டதில், வெற்றி பெற்றது என தேர்வு செய்யப்பட்ட 31 மாவட்டங்களில் தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூர், திண்டுக்கல், மதுரை, பெரம்பலூர், சென்னை, காஞ்சிபுரம், சேலம், திருவள்ளூர், திருப்பூர், சிவகங்கை, நாமக்கல், திருச்சிராப்பள்ளி, வேலூர் ஆகிய 13 மாவட்டங்கள் சிறந்த செயல்பாட்டிற்கான விருதுகளை பெற்றது. இப்போட்டியில், கோயம்புத்தூர் மாவட்டம் இந்திய அளவில் முதலிடம் பிடித்தது.

3.08.2023 அன்று புதுடெல்லியில் நடைபெற்ற 13-வது தேசிய உறுப்பு கொடை தினத்தில், தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று சிசிக்சை நிறுவனத்தால், உறுப்பு மாற்று சிகிச்சையில் சிறந்த செயல்பாட்டிற்கான இந்திய அளவில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விருதினை பெற்றது.

தேசிய சுகாதார ஆணையம் ஆயுஷ்மான் பாரத் – பிரதம மந்திரி மக்கள் ஆரோக்ய திட்டம் மற்றும் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் திட்டத்தின் பயணத்தில் இவ்வாண்டு செப்டம்பர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. ஆயுஷ்மான் பாரத் – பிரதம மந்திரி மக்கள் ஆரோக்ய திட்டத்தில் சிறந்த சேவை புரிந்தமைக்காக 24 மாநிலங்களிலிருந்து 70 கருத்துருக்கள் பெறப்பட்டதில், 5 கருத்துருக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துடன் ஒருங்கிணைந்த பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்தில் 2022ஆம் ஆண்டில் தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக அரசு மருத்துவமனைகள் மொத்த காப்பீட்டு சிகிச்சை தொகையில் 50 விழுக்காடு ஈட்டியுள்ளன. இந்த தொகையை முழுமையாக அரசு மருத்துவமனைகளை வலுப்படுத்துவதற்காகவும், உயர் சிறப்பு அறுவை சிகிச்சைகளை தொகுப்பு நிதியின் மூலம் செய்வதற்காகவும் பயன்படுத்தப்பட்டுவருகிறது. இவ்வாறு அரசு நிதியை திறம்பட பயன்படுத்தியதற்காக தமிழ்நாட்டிற்கு விருது வழங்கி பெருமைபடுத்தியுள்ளது.

10.10.2023 அன்று புதுதில்லியில் ஒன்றிய அரசின் மருத்துவம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சார்பில் உலக மனநல நாளையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், நட்புடன் உங்களோடு மனநல சேவை – தொலைபேசி வழி மனநல சேவை வழங்குவதில் தமிழ்நாடு முதலிடம் பெற்றமைக்காக விருது வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை ஆணையர் ஆர். லால்வேனா, இ.ஆ.ப., தமிழ்நாடு சுகாதார திட்டத்தின் திட்ட இயக்குநர் எம். கோவிந்த ராவ், இ.ஆ.ப., மருத்துவக் கல்வி இயக்குநர் மரு.ஆர். சாந்திமலர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் மரு.ஏ. சண்முககனி, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் மரு.டி.எஸ். செல்வவிநாயகம், குடும்ப நலத்துறை இயக்குநர் மரு. ஹரி சுந்தரி, மாநில காசநோய் அலுவலர் கூடுதல் இயக்குநர் மருத்துவம் (காசநோய்) மரு. ஆஷா பிரடெரிக் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

The post சுகாதாரத்துறைக்கு இதுநாள்வரை வழங்கப்பட்ட விருதுகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து வாழ்த்து! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chief Minister ,M.K.Stalin ,Chennai ,M.K. Stalin ,Minister of Medicine and Public Welfare ,
× RELATED “சென்னை உலா” என்ற (HOP ON HOP OFF – VINTAGE BUS Services)...