×
Saravana Stores

தமிழகத்திற்கு விநாடிக்கு 3,000 கனஅடி நீர் திறக்க முடியாது: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் திட்டவட்டம்

பெங்களூரு: தமிழகத்திற்கு விநாடிக்கு 3,000 கனஅடி நீர் திறக்க முடியாது என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டுக்கு மேலும் 16 நாட்கள் வினாடிக்கு 3000 கன அடி தண்ணீரை கர்நாடகா திறந்து விட வேண்டும் என்று ஒழுங்காற்று குழு நேற்று பரிந்துரைத்திருந்த நிலையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் டெல்லியில் நாளை நடைபெற உள்ளது. நாளை பிற்பகல் 2 மணிக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 26வது அவசர கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் டெல்லியில் நடைபெற உள்ளது.

இதில் தமிழ்நாடு சார்பாக நீர்வளத்துறை கூடுதல் செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப தலைவர் சுப்ரமணியன் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். அப்போது தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 16000 கன அடி தண்ணீரை காவிரியில் இருந்து திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு அதிகாரிகள் வலியுறுத்த உள்ளனர். இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார்; கர்நாடக அணைகளில் எங்களுக்கே இங்கு குடிநீருக்கு தேவையான அளவு கூட தண்ணீர் இல்லை. தமிழகத்திற்கு விநாடிக்கு 3,000 கனஅடி நீர் திறக்க முடியாது.

காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரையை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம். தமிழகத்திற்கு அக்.16 முதல் 16 நாட்களுக்கு தினமும் 3,000 கனஅடி நீர் திறக்க குழு பரிந்துரைத்திருந்தது. தமிழகத்திற்கு 3,000 கனஅடி காவிரி நீரை திறக்க குழு பரிந்துரைத்ததற்கு கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது என்று கூறினார். நாளை காவிரி மேலாண்மை ஆணையம் கூட உள்ள நிலையில் மீண்டும் கர்நாடகா திட்டவட்டமாக கூறியுள்ளது.

The post தமிழகத்திற்கு விநாடிக்கு 3,000 கனஅடி நீர் திறக்க முடியாது: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் திட்டவட்டம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Karnataka ,T.D. K. Shivakumar ,Bengaluru ,Deputy Chief ,T.D. K. ,
× RELATED தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட...