×

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் 169 நிவாரண மையங்கள் தயார்: மேயர் பிரியா தகவல்

சென்னை, அக்.12: சென்னை மாநகராட்சியுடன் ஒருங்கிணைந்த நகர்ப்புற வெள்ள மேலாண்மை திட்டம், சென்னை கொசஸ்தலையாறு வடிநில திட்டம், நிறுவன வலுப்படுத்துதல் மற்றும் சீர்திருத்த ஆலோசகர் குழுவின் சார்பில் நடத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான வெள்ள முன்னெச்சரிக்கை பயிற்சி பட்டறையை மேயர் பிரியா தொடங்கி வைத்தார். பிறகு வெள்ளத்தின் போது மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களை பராமரிக்கும் நபர்களுக்கான வழிகாட்டுதல் விழிப்புணர்வு துண்டுபிரசுரத்தை வெளியிட்டு, மாற்றுத்திறனாளிகளுடன் கலந்துரையாடினார்.

கூட்டத்தில் மேயர் பிரியா கூறியதாவது: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, மாநகராட்சியின் சார்பில் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மழை, வெள்ளம் மற்றும் புயல் போன்ற பேரிடர் காலங்களில் எடுக்க வேண்டிய பல்வேறு பணிகள் குறித்து அனைத்து துறை சார்ந்த அலுவலர்களுடன் கூட்டம் நடத்தப்பட்டு ஆலோசனை மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. மாநகராட்சியில் வளர்ச்சிப் பணிகளுடன், பொதுமக்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு அதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

பேரிடர் காலங்களில் மாற்றுத்திறனாளிகள் தங்களை எவ்வாறு தற்காத்துக்கொள்வது என்பது குறித்து அறிந்துகொண்டு பின்பற்றுகின்ற வகையில் முன்னெச்சரிக்கை பயிற்சி வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் பேரிடர் காலங்களில் வதந்திகளை நம்பாமல் அரசின் அறிவிப்புகளை பின்பற்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும். மாநகராட்சியின் சார்பில் 169 நிவாரண மையங்கள் தயார்நிலையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில், துணை மேயர் மகேஷ்குமார், ஆணையர் ராதாகிருஷ்ணன், இணை ஆணையர் சமீரன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் 169 நிவாரண மையங்கள் தயார்: மேயர் பிரியா தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Mayor ,Priya ,Chennai Corporation ,Project ,
× RELATED சென்னையில் பயங்கரம்!: கள்ளக்காதலுக்கு...