×

மாவட்டத்தில் சாலையில் சுற்றித்திரிந்த 50 மாடுகள் பிடிக்கப்பட்டு கோசாலையில் ஒப்படைப்பு

திருவள்ளூர், அக். 12: திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு நகரங்களில் உள்ள மாநில சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் பஞ்சாயத்து யூனியன் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகள் முறையாக கட்டி பராமரிக்கப்படாமல் உள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் கால்நடைகளை அவைகளின் உரிமையாளர்கள் உரிய பாதுகாப்போடு அவர்களது இடத்தில் பராமரிப்பது அவரவரின் கடமையாகும். கால்நடைகள் அவ்வாறு முறையாக பராமரிக்கப்படாமல் அவைகள் சாலைகளில் இரவும் பகலும் சுற்றித்திரிவதுடன் சாலைகளிலேயே படுத்துக்கொள்கின்றன. இதனால் போக்குவரத்து வாகனங்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதுடன் அடிக்கடி சாலை விபத்துகளும் ஏற்பட்டு அதிகமான மனித உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. மேலும் கால்நடைகளும் விபத்துகளில் கடுமையாக பாதிப்படைகின்றன.

இதுபோன்ற சம்பவங்கள் நிகழாவண்ணம் நடவடிக்கை எடுக்க ஒவ்வொரு வட்டத்திலும் வட்டாட்சியர் தலைமையிலான சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு அலுவலர்கள் கால்நடை பராமரிப்பு அலுவலர் மற்றும் காவல் ஆய்வாளர் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு வட்ட அளவிலான குழுக்களின் மூலம் கூட்டம் நடத்தப்பட்டு சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை கைப்பற்றி கோசாலையில் ஒப்படைக்கவும் அபராதம் விதிக்கவும் உத்தரவிடப்பட்டது.
இதுவரை திருவள்ளூர் மாவட்டத்தில் 50 கால்நடைகள் கைப்பற்றப்பட்டு கோசாலையில் ஒப்படைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுவரை கால்நடை உரிமையாளர்களிடமிருந்து ₹20,000 அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும் பராமரிக்கப்படும் மாடுகளின் உரிமையாளர்களிடமிருந்து நாள் ஒன்றுக்கு பராமரிப்புத்தொகையாக ₹500 வசூல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே இது போன்று தொடர்ந்து விதி மீறலில் ஈடுபடும் கால்நடை உரிமையாளர்களின் மீது சட்டபூர்வமான தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

The post மாவட்டத்தில் சாலையில் சுற்றித்திரிந்த 50 மாடுகள் பிடிக்கப்பட்டு கோசாலையில் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Tags : Gosala ,Tiruvallur ,Dinakaran ,
× RELATED ஜாலியாக இருந்துவிட்டு திருமணம் செய்ய...