×

மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 218 பயனாளிகளுக்கு ₹3.37 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் கலைசெல்வி வழங்கினார்

காஞ்சிபுரம், அக்.12: திம்மசமுத்திரம் கிராமத்தில் நடந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 218 பயனாளிகளுக்கு, ₹3.37 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் வட்டம் திம்மசமுத்திரம் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம், கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நேற்று நடந்தது. முகாமில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மாற்றுத்திறனாளி நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தொழில்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கூட்டுறவுத்துறை, சமூக நலன் மற்றும் பாதுகாப்புத்துறை உள்ளிட்ட துறைகளின் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் விவரங்கள் குறித்து, துறைசார்ந்த உயர் அலுவலர்கள் பொதுமக்களிடம் எடுத்துரைத்தனர்.

இத்திட்டங்கள் குறித்த விவரங்கள் அனைத்தும் இங்கு அமைக்கப்பட்டு உள்ள துறை சார்ந்த அரங்குகளில் பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், திட்டங்களின் விவரங்கள் பற்றிய சந்தேகம் ஏதேனும் இருப்பின் துறைசார்ந்த அலுவலர்களிடம் கேட்டறிந்து, தங்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி கொள்ளலாம். இன்று மக்கள் தொடர்பு திட்டம் முகாம் நடைபெறுவதை முன்னிட்டு 3.10.2023 முதல் 9.10.2023 வரை பொதுமக்களிடமிருந்து, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாற்றம், உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இயற்கை மரணம் ஈமச்சடங்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 147 மனுக்கள் பெறப்பட்டு, மனுக்கள் மீது உரிய முறையில் தீர்வு காணப்பட்டு, தகுதிவாய்ந்த பயனாளிகளுக்கு, ₹3 கோடியே 37 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

அதன்படி பெறப்பட்ட மனுக்களில், வருவாய் துறை மூலம் அடிப்படை தேவைகளான இலவச வீட்டுமனைப் பட்டா 144 நபர்களுக்கும், உட்பிரிவு பட்டா மாற்றம் 7 நபர்களுக்கும், முழுபுலம் பட்டா மாற்றம் 2 நபர்களுக்கும், சமூக பாதுகாப்பு திட்டம் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், இயற்கை மரணம் ஈமச்சடங்கு உதவித்தொகை 2 நபர்களுக்கும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் 2 நபர்களுக்கும் வழங்கப்பட்டன. மேலும், முதுகு தண்டு வடத்தால் பாதிக்கப்பட்டோருக்கான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் 2 நபர்களுக்கும், ஊரக வளர்ச்சி துறை சார்பில், மகளிர் சுயஉதவி குழுவின் கீழ் நிதியுதவி 8 நபர்களுக்கும், தொழில் துறை மூலம் தொழில் கடன் மானியம் 5 நபர்களுக்கும் வழங்கப்பட்டது.

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் விவசாய இடுப்பொருட்கள் 8 நபர்களுக்கும், தோட்டக்கலைத்துறை மூலம் நாற்றுகள் மற்றும் விதைகள் 3 நபர்களுக்கும், விவசாயப் பொருட்கள் 2 நபர்களுக்கும் வழங்கப்பட்டது இதனை தொடர்ந்து, கூட்டுறவுத்துறை மூலம் மகளிர் சுயஉதவி வங்கி கடன் 3 நபர்களுக்கும், மீனவர் நலத்துறை சார்பில், கிசான் அட்டை 12 மீனவர்களுக்கு, கால்நடை பராமரிப்பு துறை சார்பில், கிசான் அட்டை 18 நபர்களுக்கும் வழங்கப்பட்டன. இந்த நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கினார். அப்போது, இந்த மக்கள் தொடர்பு திட்ட முகாம் தொடர்ந்து நடைபெறவுள்ளது. பொதுமக்கள் அனைவரும் தங்களுக்கு தேவையான திட்டங்களை சம்பந்தப்பட்ட துறை வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரங்கிற்கு சென்று பார்வையிட்டு திட்டங்களை தெரிந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டார்.

இம்முகாமில் காஞ்சிபுரம் எம்பி க.செல்வம், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் ரம்யா, கூட்டுறவு துறை மண்டல இணை பதிவாளர் ஜெய, காஞ்சிபுரம் ஒன்றிய குழுத்தலைவர் மலர்க்கொடி குமார், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் நித்தியா சுகுமார், காஞ்சிபுரம் ஒன்றிய குழு துணை தலைவர் திவ்வியப்பிரியா இளமது, திம்மசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் தேவேந்திரன், காஞ்சிபுரம் வட்டாட்சியர் புவனேஷ்வரன், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் கலக்டர் கலைச்செல்வி மோகன், காஞ்சிபுரம் வட்டம், திம்மசமுத்திரம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தினை பார்வையிட்டு, குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி, குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தினை ஆய்வு செய்தார். பின்னர் கிராமத்தில் செயல்பட்டு வரும் ேரஷன் கடையை பார்வையிட்டு, பொருட்களின் இருப்பு நிலை குறித்து கேட்டறிந்தார். மேலும் திம்மசமுத்திரம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியை பார்வையிட்டு, பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் கற்றல் திறனை ஆய்வு செய்தார். ஆய்வின்போது கூட்டுறவு துறை மண்டல இணை பதிவாளர் ஜெய மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 218 பயனாளிகளுக்கு ₹3.37 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் கலைசெல்வி வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Public Relations Project ,Collector ,Kalaiselva ,Kanchipuram ,Thimmasamuthram ,Project ,Public Relations Project Camp ,Dinakaran ,
× RELATED மதுரை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள்...