×

தமிழ்நாட்டின் நிதிவளத்தை அதிகரிக்க மோட்டார் வாகனங்களுக்கான வரி உயர்வு: பேட்டரி வாகனங்களுக்கு வரி கிடையாது; பேரவையில் மசோதா நிறைவேற்றம்

சென்னை: தமிழ்நாடு சட்டபேரையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் சட்ட மசோதா ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது: போக்குவரத்துத்துறையில் கடந்த 2012ம் ஆண்டுக்கு பிறகு வரிகள் மாநில அரசால் உயர்த்தப்படவில்லை. எனவே, மாநிலத்தின் நிதிவளத்தை உயர்த்துவதற்காக தமிழ்நாடு இயக்கூர்திகள் வரி விதிப்பு சட்டத்தில், நடைமுறையில் உள்ள வரிவிதிப்பு முறைகளை திருத்தம் செய்வதென அரசு முடிவு செய்துள்ளது. அந்த திருத்தங்களை மேற்கொள்ள இந்த மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.

அதன்படி, சரக்கு வாகனங்கள், வாடகைக்கு இயக்கப்படும் வாகனங்கள், பயணிகள் போக்குவரத்து வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள், ஒப்பந்த வாகனங்கள், ஆம்னி பஸ்கள், அனைத்து வகை புதிய மற்றும் பழைய 2 சக்கர வாகனங்கள், ஆட்டோ உள்ளிட்ட 3 சக்கர வாகனங்கள், கல்வி நிறுவனங்களுக்குச் சொந்தமான பஸ்கள் மற்றும் வாகனங்கள், கட்டுமானத்திற்கு பயன்படும் வாகனங்கள், கார்கள், டாக்சிகள், ‘கேப்’கள் என அனைத்து வகை மோட்டார் வாகனங்களுக்கு புதிய வரியை நிர்ணயிக்கப்படுகிறது. சரக்கு வாகனங்களில், சரக்கு ஏற்றிய பிறகு 3 ஆயிரம் கிலோ எடை கொண்ட வாகனங்களுக்கு ஆண்டு வரியாக ரூ.3,600 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதுபோல 3 ஆயிரம் கிலோ, 5,500 கிலோ எடையுள்ள வாகனங்களுக்கு காலாண்டு வரியாக ரூ.1,425 – ரூ.3,100 தொகை எடைக்கு ஏற்ப வரி உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், வாடகைக்கு இயக்கப்படும் மற்றும் பயணிகள் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களில், சுற்றுலா வாகனங்கள் மற்றும் ஒப்பந்த வாகனங்களுக்கான காலாண்டு வரி ரூ.4,900; 35 பேர்களுக்கும் அதிகமானோர் பயணிக்கும் வாகனங்களுக்கு ரூ.3 ஆயிரம்; படுக்கையுடன் கூடிய ஆம்னி பஸ்களுக்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை வரி உயர்த்தப்படுகிறது.

மேலும், டிரெய்லர் போன்ற வாகனங்களில் ஏற்றப்படும் எடையின் கொள்ளளவுக்கு ஏற்ப ரூ.500 முதல் ரூ.1,800 வரை வரி உயர்த்தப்படுகிறது. சென்னை மற்றும் மதுரை, கோவை நகர சுற்றுப் பகுதிகளில் பிரத்யேகமாக இயக்க அனுமதிக்கப்பட்ட பேருந்துகளுக்கு மேல்வரி விதிக்கப்படுகிறது. இதில் எடையேற்றப்பட்ட நிலையில் 600 கிலோவுக்கு மிகாத, 50 சி.சி உள்ள வாகனங்களுக்கு ஆண்டு வரி ரூ.135 முதல் ரூ.240 வரை அவற்றின் சி.சி.க்கு ஏற்ப ஆண்டு வரி விதிக்கப்படுகிறது.

பயணிகள் போக்குவரத்து மற்றும் வாடகைக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு (ஓட்டுனர் உட்பட 4 பேர் பயணிக்கும் வாகனங்கள்) 5 ஆண்டு வரியாக ரூ.1,400 முதல் ரூ.6 ஆயிரம் வரை பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப வரி உயர்த்தப்படுகிறது. அதேபோல், கட்டுமான தளவாட வாகனங்களுக்கு ஆண்டு வரியாக ரூ. 15 ஆயிரம், மாணவர்கள் மற்றும் பணியாளர்களின் போக்குவரத்திற்கான கல்வி நிறுவன பஸ்களுக்கு 7 நாட்களுக்கு ஒரு இருக்கைக்கு ரூ.45, பணியாளர்களின் போக்குவரத்திற்கான பிற நிறுவனங்களின் வாகனங்களுக்கு 7 நாட்களுக்கு ஒரு இருக்கைக்கு ரூ.100 என்ற வீதத்தில் வரி நிர்ணயம் செய்யப்படுகிறது.

அந்தவகையில், புதிய மோட்டார் சைக்கிள்களுக்கான வாழ்நாள் வரி, ரூ.1 லட்சத்திற்கு மிகாத நிலையில் அதன் விலையில் 10 சதவீதம், ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் என்றால் 12% என நிர்ணயிக்கப்படுகிறது. மேலும், பழைய மோட்டார் சைக்கிள்களில் ஒரு ஆண்டு பழையதாக உள்ளவற்றுக்கு 8.25 சதவீதம் மற்றும் ரூ.1 லட்சத்திற்கு மேற்பட்டவற்றுக்கு 10.25 சதவீதம், 1 ஆண்டு முதல் 2 ஆண்டுகள் பழையதாக உள்ளதற்கு (ரூ.1 லட்சம் உட்பட்டவை) 8 சதவீதம், ரூ.1 லட்சத்திற்கும் மேற்பட்டவற்றுக்கு 10 சதவீதம் என வாழ்நாள் வரி நிர்ணயம் செய்யப்படுகிறது.

அதேபோல், 2 முதல் 11 ஆண்டுகளுக்கும் மேலாக ஓடிக் கொண்டிருக்கும் மோட்டார் சைக்கிள்களுக்கான வாழ்நாள் வரி, 6 சதவீதத்தில் இருந்து 9.75 சதவீதம் வரை (அதன் விலைக்கு ஏற்ப) நிர்ணயிக்கப்படுகிறது. புதிய மோட்டார் சைக்கிள்களுக்கான வாழ்நாள் வரி, ரூ.5 லட்சத்திற்கு மிகாத நிலையில் அதன் விலையில் 12 சதவீதம், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை என்றால் 13 சதவீதம், ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை என்றால் 18 சதவீதம், ரூ.20 லட்சத்திற்கு மேற்பட்டவற்றுக்கு 20 சதவீதம் என நிர்ணயிக்கப்படுகிறது.

இந்த 4 வகையிலான விலைகளிலுள்ள வாகனங்களில் ஒரு ஆண்டு முதல் 11 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிக் கொண்டிருக்கும் மோட்டார் சைக்கிள்களுக்கான வாழ்நாள் வரி, அதன் விலையில் 8 சதவீதம் முதல் 18.75% வரை நிர்ணயிக்கப்படுறது. இதேபோல், 15 ஆண்டுகள் நிறைவடையாத மோட்டார் சைக்கிள்களுக்கு 5 ஆண்டுகளுக்கான பசுமை வரி ரூ.750, மற்ற மோட்டார் வாகனங்களுக்கு ரூ.1,500 என நிர்ணயிக்கப்படுகிறது. புதிய வாகனங்களுக்கான சாலை பாதுகாப்பு வரி, மோட்டார் சைக்கிள்களுக்கு ரூ.375, இலகுரக வாகனங்களுக்கு ரூ.2,250, மற்ற வாகனங்களுக்கு ரூ.3 ஆயிரம் என நிர்ணயிக்கப்படுகிறது.

இதில், ஓட்டுநர் சேர்த்து 7 முதல் 13 பேர்வரை ஏற்றக் கூடிய புதிய சுற்றுலா வாடகை சீருந்துகளுக்கான வாழ்நாள் வரி, அதன் விலையில் 12 சதவீதம் (ரூ.5 லட்சத்துக்கு உட்பட்டவை) 13 சதவீதம் (ரூ.5 லட்சம் – ரூ.10 லட்சத்துக்கு உட்பட்டவை) 18 சதவீதம் (ரூ.10 லட்சம் – ரூ.20 லட்சத்துக்கு உட்பட்டவை), 20 சதவீதம் (ரூ.20 லட்சத்துக்கும் மேற்பட்டவை) என நிர்ணயிக்கப்படுகிறது. மேலும், அரசின் கொள்கைப்படி பேட்டரி வாகனங்களுக்கு வரி கிடையாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

The post தமிழ்நாட்டின் நிதிவளத்தை அதிகரிக்க மோட்டார் வாகனங்களுக்கான வரி உயர்வு: பேட்டரி வாகனங்களுக்கு வரி கிடையாது; பேரவையில் மசோதா நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Transport Minister ,Sivashankar ,Tamil Nadu Legislative Assembly ,Dinakaran ,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...