×

மோடி நிகழ்ச்சியின் போது இடையூறு 6 மாநிலங்களில் என்ஐஏ அதிரடி சோதனை

புதுடெல்லி: பீகாரில் பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பிஎப்ஐ அமைப்பினர் இடையூறு ஏற்படுத்த முயற்சித்தது தொடர்பாக 6 மாநிலங்களில் என்ஐஏ நேற்று அதிரடி சோதனை நடத்தியது. கடந்த ஆண்டு ஜூலையில், பீகார் மாநிலம் புல்வாரிஷெரீப்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டபோது தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா(பிஎப்ஐ) அமைப்பினர் இடையூறு ஏற்படுத்த முயற்சித்தனர். பிரதமரின் நிகழ்ச்சியின் போது இடையூறு ஏற்படுத்த கிரிமினல் சதி திட்டம் தீட்டியதாக பிஎப்ஐ மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தற்போது இந்த வழக்கை ஏற்றுள்ள என்ஐஏ அதிகாரிகள் மகாராஷ்டிரா,ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தமிழ்நாடு, டெல்லி உள்பட 6 மாநிலங்களில் நேற்று சோதனை மேற்கொண்டனர். மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள அப்துல் வாஹித் ஷேக் என்பவர் வீட்டில் சோதனை நடத்தினர்.

2006ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் ரயில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 180 பேர் பலியாயினர். இந்த வழக்கில் அப்துல் கைது செய்யப்பட்டார். குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டார். ராஜஸ்தானின் டோங்க்,கோட்டா, கங்காப்பூர்,டெல்லியில் உள்ள ஹவுஸ் காஜி,பல்லிமரான் ஆகிய இடங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

* கதவை திறக்க மறுத்ததால் 6 மணி நேரம் காத்திருந்த அதிகாரிகள்

மும்பை,விக்ரோலி, பார்க்சைட்டில் உள்ள அப்துல் வாஹித் ஷேக் வீட்டிற்கு என்ஐஏ அதிகாரிகள் நேற்று அதிகாலை 5 மணிக்கு சென்ற போது அவர் கதவை திறக்க மறுத்து விட்டார். காலை 11.15 மணிக்கு தான் அப்துல் கதவை திறந்தார். அதுவரை அவர்கள் வெளியே காத்து நின்றனர். அதிகாரிகள் கூறும்போது,‘‘ சோதனை நடத்துவதற்கான வாரன்ட் இருக்கிறதா என கேட்டு அதிகாரிகளுடன் அவர் வாக்குவாதம் செய்தார். 11 மணிக்கு அவரது வக்கீல் மற்றும் சமூகநல ஆர்வலர்கள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகுதான் அதிகாரிகள் உள்ளே சென்றனர்’’ என்றனர்.

The post மோடி நிகழ்ச்சியின் போது இடையூறு 6 மாநிலங்களில் என்ஐஏ அதிரடி சோதனை appeared first on Dinakaran.

Tags : Modi ,NIA ,New Delhi ,BFI ,Bihar ,
× RELATED பாஜவின் கோட்டைகளிலும் மோடிக்கு ஏன் பயம்?