×

இளம் வேளாண் அறிவியல் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் விருது தஞ்சை வேளாண் கல்லூரிக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயர்: பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சங்கோட்டையில் உள்ள வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இனி டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி என்று வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின்பேரவையில் அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று 110வது விதியின் கீழ் வெளியிட்டுள்ள அறிவிப்பு:தமிழ்நாட்டில் கலைஞர் ஆட்சியில் வேளாண் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டு, வேளாண் ஆராய்ச்சி மையங்கள் அதிகளவில் உருவாக்கப்பட்டு, உணவு உற்பத்தியில் புரட்சியும், அதனை அனைவருக்கும் பகிர்ந்தளிப்பதற்கான செயல்முறை திட்டமும் மேற்கொள்ளப்பட்டது.

இன்றளவிலும் இந்தியாவின் வெற்றிகரமான மாடலாக இருப்பது கலைஞர் ஆட்சி காலத்து மாடல்தான். இந்த பங்களிப்பில் டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆலோசனைகளும் இணைந்திருக்கின்றன. பசுமை புரட்சியின் தந்தை என போற்றப்படும் எம்.எஸ்.சுவாமிநாதன், 28-9-2023 அன்று மறைவெய்தியபோது அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியதுடன், அரசின் சார்பில் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. தமிழ்நாட்டை சேர்ந்த வேளாண் விஞ்ஞானியான எம்.எஸ்.சுவாமிநாதன், இந்திய அளவில் முத்திரை பதித்து, உலகளவில் புகழ் பெற்றவர்.

பத்மவிபூஷன், ரமோன் மகசசே உள்ளிட்ட உயரிய விருதுகளை பெற்றுள்ள அவரது நினைவை போற்றுகிற வண்ணம் தமிழ்நாடு அரசின் சார்பில் அறிவிப்பை வெளியிடுகிறேன். தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சங்கோட்டையில் உள்ள வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இனி டாக்டர். எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் என்று அழைக்கப்படும். அதேபோல், இளம் வேளாண் அறிவியலில் பயிர்ப்பெருக்கம் மற்றும் மரபியல் பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்று முன்னிலை பெறும் மாணவருக்கு டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரில் ஆண்டுதோறும் விருது வழங்கப்படும்.

* 13 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றம் தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைப்பு
2023ம் ஆண்டிற்கான மழைக்கால கூட்டத்தொடரில் 13 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2023-24ம் ஆண்டிற்கான மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 9ம் தேதி தொடங்கியது. அதன்படி, அன்றைய தினம் கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கையை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இதில் காவிரி விவகாரம் தொடர்பாக தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே விவாதம் நடைபெற்றது.

இதனையடுத்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் 2 நாட்கள் கூட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, கடந்த 10ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறுவணிகர்களுக்கான வணிகவரி சமாதான திட்டத்தினை அறிமுகம் செய்து ரூ.50 ஆயிரம் வரை வரி பாக்கியை தள்ளுபடி செய்தார். அதேபோல், அதிமுக ஆட்சி காலத்தில் மயிலாடுதுறை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் இருந்து விடுப்பட்டிருந்த நிலையில், அதனையும் இணைத்து மசோதா தாக்கல், போக்குவரத்துத்துறை சார்பில் கட்டணங்கள் உயர்த்துவதற்கான மசோதா உள்ளிட்ட 13 சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

The post இளம் வேளாண் அறிவியல் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் விருது தஞ்சை வேளாண் கல்லூரிக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயர்: பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : MS Swaminathan Tanjore College of Agriculture ,Principal ,M.K.Stal ,Chennai ,Agricultural College ,Research Institute ,Eichangottai, Thanjavur District ,Dr. ,MS Swaminathan Agricultural College ,Dinakaran ,
× RELATED பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் கைதான கோயில் பூசாரி ஜாமீன் மனு தள்ளுபடி