×

டெங்கு காய்ச்சலுக்கு பயப்பட வேண்டாம்: மாநகராட்சி ஆணையர் பேட்டி

தண்டையார்பேட்டை: சென்னை மாநகராட்சி 5வது மண்டலம் 53வது வார்டுக்கு உட்பட்ட தங்கசாலை மேம்பாலம் கீழ் பகுதியில் நவீன பூங்கா 4 கோடியே 25 லட்சத்தில் கடந்த 2021ம் ஆண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கிவைத்தார். தற்போது பூங்காவின் பணிகள் முடிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் இன்று காலை ஆய்வு செய்தார். பூங்காவை மேலும் பொலிவு பெற சிறுவர் விளையாட்டு திடல், பார்க்கிங் வசதி, திறந்தவெளி உடற்பயிற்சி கூடம், பூங்காவின் நுழைவாயில் உள்ளிட்டவை 60 லட்ச ரூபாய் செலவில் அமைக்க உத்தரவிட்டார்.

இதன்பிறகு நிருபர்களிடம் ராதாகிருஷ்ணன் கூறியதாவது;
சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. சிஎம்டிஏ நிதி மூலம் வடசென்னை பகுதிக்கு ஆயிரம் கோடி ஒதுக்கி பல்வேறு பணிகளை செய்து முடிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். யானைகவுனி ரயில்வே மேம்பால பணிகளையும் பார்வையிட்டோம். ரயில்வே துறையால் அந்த பணிகள் மந்தக் கதியில் நடைபெறுவதால் காலதாமதம் ஏற்படுகிறது. அதனையும் விரைந்து முடிக்க கூறியுள்ளோம்.

தங்க சாலை மேம்பாலம் கீழ் அமைக்கப்பட்டுள்ள இந்த பூங்கா பணிகள் பெருமளவில் முடிக்கப்பட்டுள்ளது. மேலும் 60 லட்சம் செலவில் பூங்கா நுழைவுவாயில், சிறுவர்கள் விளையாட்டு திடல், திறந்த வெளி உடற்பயிற்சி கூடம், நீர்வீழ்ச்சி, கார் பார்க்கிங் வசதி உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளது. இந்த பணிகள் 45 நாட்களில் முடிக்கப்பட்டு தமிழக முதல்வரால் விரைவில் திறக்கப்படும்.
டெங்கு காய்ச்சலுக்கு தமிழகத்தில் 369 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சலுக்கு யாரும் பயப்பட தேவையில்லை. அதுவும் ஒரு வைரஸ் காய்ச்சல்தான். முறையாக சிகிச்சை பெற்றால் குணமாகும். தண்ணீர் தேக்கி வைப்பது, தண்ணீரை திறந்து வைப்பது இதன் மூலம் கொசு உற்பத்தியாகி பாதிப்புகள் ஏற்படுகிறது.

இதற்காக 40 இடங்களில் காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. மக்கள் பயப்படாமல் மாநகராட்சி மருத்துவமனை சுகாதார மையங்களில் சென்று சிகிச்சை பெற்றால் சரியாகும். மருந்து கடைகளுக்கு சென்று வலி மாத்திரை, சத்து மாத்திரை என பொதுமக்களே மருத்துவர் பரிந்துரை இல்லாமல் வாங்கி உண்ணக்கூடாது. இதனால் பாதிப்புகள் ஏற்படும். நிலவேம்பு கசாயம் அருந்தலாம். முறையாக சிகிச்சை பெற்றால் டெங்கு காய்ச்சல் ஏற்படாமல் தடுக்க முடியும். இவ்வாறு கூறினார். ஆய்வின்போது மாநகராட்சி மண்டல அதிகாரி தமிழ்ச்செல்வன், பகுதி செயற்பொறியாளர் லாரன்ஸ் உள்பட பலர் இருந்தனர்.

The post டெங்கு காய்ச்சலுக்கு பயப்பட வேண்டாம்: மாநகராட்சி ஆணையர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Thandaiyarpet ,Modern Park 4 ,Thangasala ,53rd Ward ,Chennai Corporation 5th Zone ,Dinakaran ,
× RELATED சவுகார்பேட்டையில் ஐபிஎல்...