×

விஸ்வநத்தம் ஊராட்சியில் கழிவுநீர் ஓடையை உடனே தூர்வார வேண்டும்

*பார்வையிட்டு 2 மாதமாகியும் பணிகள் தொடங்கவில்லை

சிவகாசி : அதிகாரிகள் பார்வையிட்டு 2 மாதம் ஆன நிலையில் விஸ்வநத்தம் ஊராட்சியில் 2 கிலோ மீட்டர் தூரம் கழிவுநீர் ஓடை தூர்வாரும் பணிகள் தொடங்கப்படாததால் கிராம மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.சிவகாசி மணி நகர்- விஸ்வநத்தம் கிராமத்திற்கு செல்லும் சாலையில் கழிவுநீர் ஓடை செல்கின்றது. மாநகராட்சி எல்லை முடிவில் தெய்வானை நகரில் தொடங்கி ஜெய்ரத்தினம் நகர், பாரதிநகர், விஸ்வநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மாரியம்மன் கோவில் தெரு வழியாக பேராபட்டி கண்மாய்க்கு இந்த ஓடை சென்றடைகிறது. சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்த கழிவுநீர் ஓடையில் தொழிற்சாலை கழிவுநீர், வீடுகளின் கழிவுகள், பிளாஸ்டிக் குப்பைகள், மாமிச கழிவுகள் குவிந்து கிடக்கின்றன.

இந்த கழிவுநீர் ஓடை பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் ஓடையில் ஆளுயரத்திற்கு கோரைப்புற்கள் வளர்ந்துள்ளன. ஓடையின் உட்புறம் புதர்மண்டி கிடக்கிறது. ஓடையில் கழிவுநீர் வெளியேற முடியாமல் குளம் போல் தேங்கி நிற்கின்றது. சிவகாசி மாநகராட்சியில் 5 வார்டுகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் வர்த்தக நிறுவங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர்தான் இந்த ஓடைக்கு செல்கின்றது.

சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டிடங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் இந்த ஓடையில் கலப்பதால் குடியிருப்பு பகுதிகளில் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. ஓடையில் குப்பைகள் மண் மேவி கிடப்பதால் மழை காலங்களில் கழிவுநீர் சாலையில் ஓடுகின்றது. விஸ்வநத்தம் ஊராட்சியில் இந்த கழிவுநீர் ஓடை இருந்த போதிலும் மாநகராட்சி கழிவுநீர்தான் அதிகமாக கலக்கின்றது. இதனால் ஓடையை தூர்வாருவதில் நிர்வாக ரீதியான சிக்கல் இருந்தது.

இந்த ஓடையை போர்க்கால அடிப்படையில் உடனடியாக தூர்வார வேண்டும் என ஊராட்சி ஒன்றிய தலைவர் முத்துலட்சுமி விவேகன்ராஜ், மாநகராட்சி மேயர் சங்கீதாஇன்பம், ஆணையாளர் சங்கரன் ஆகியோரிடம் விஸ்வநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல்நாகராஜ் கோரிக்கை வைத்தார். ஊராட்சி மன்ற தலைவர் கோரிக்கையை ஏற்று சம்பந்தப்பட்ட கழிவுநீர் ஓடையை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மாநகராட்சி ஆணையாளர் சங்கரன், சுகாதார ஆய்வாளர் அபுபக்கர் சித்திக் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், விஸ்வநத்தம் ஊராட்சியினர் நேரில் ஆய்வு செய்தனர். அதனை தொடர்ந்து சிவகாசி மாநகராட்சி நிர்வாகமும் விஸ்வநத்தம் ஊராட்சியும் இணைந்து உடனடியாக ஓடையை தூர்வார முடிவு செய்தனர்.

மாநகராட்சி நிர்வாகம், விஸ்வநத்தம் ஊராட்சி நிர்வாகம் இணைந்து இந்த கழிவுநீர் ஓடையை தூர்வாரி விடுவார்கள் என அந்த பகுதி மக்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால் அதிகாரிகள் பார்வையிட்டு 2 மாதங்கள் ஆன நிலையிலும் கூட ஓடை தூர்வாரும் பணிகள் தொடங்கப்படாததால் கிராம மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பருவ மழை தொடங்கும் இந்த நேரத்தில் ஓடையை உடனடியாக தொடங்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

The post விஸ்வநத்தம் ஊராட்சியில் கழிவுநீர் ஓடையை உடனே தூர்வார வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Viswanantham panchayat ,Sivakasi ,
× RELATED சாதனை மாணவிகளுக்கு திமுக சார்பாக கல்வி நிதி உதவி