×

வட கிழக்கு பருவமழையை சமாளிக்க உஷார் நிலையில் நெடுஞ்சாலைத்துறை

*7 ஜேசிபி, 5 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார்

ஊட்டி : வடகிழக்கு பருவமழை நெருங்கிய நிலையில் நீலகிரி மாவட்டத்தில் மழை சேதங்களை உடனுக்குடன் சீரமைக்க 7 பொக்லைன் (ஜேசிபி) வாகனங்கள் மற்றும் 5 ஆயிரம் மணல் மூட்டைகளுடன் நெடுஞ்சாலைத்துறை தயாராக உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.கடந்த 2009ம் ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது நீலகிரியில் ஒரே இரவில் கொட்டி தீர்த்த மழையினால், ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு மற்றும் மரங்கள் விழுந்து பாதிப்பு ஏற்பட்டது. சுமார் 100 இடங்களில் பெரிய அளவிலான நிலச்சரிவு ஏற்பட்டு 44 பேர் உயிரிழந்தனர். பல குடும்பங்கள் வீடுகள் மற்றும் உடமைகளை இழந்து தவித்தனர். 2009ம் ஆண்டிற்கு பின் கன மழை பெய்யவில்லை. எனினும், வடகிழக்கு பருவமழையின் ேபாது மாவட்ட நிர்வாகம் அனைத்து துறைகளையும் உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தி வருகிறது.

கடந்த வாரம் இதற்கான கூட்டம் மாவட்ட கலெக்டர் அருணா தலைமையில் நடந்தது. இதில், அனைத்து துறைகளையும் உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், நீலகிரியில் தற்போது ஊட்டி, குன்னூர் மற்றும் குந்தா போன்ற பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. ஓரிரு நாட்களில் பருவமழை தீவிரமடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், மழை பெய்தால் பாதிப்புகள் ஏற்பட்டால் உடனுக்குடன் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள நெடுஞ்சாலைத்துறை தயார் நிலையில் உள்ளது. மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் பொக்லைன், மரம் அறுக்கும் இயந்திரங்கள், மணல் மூட்டைகள், சவுக்கு மரங்கள் மற்றும் அதற்கு தேவையான பணியாட்களும் தயார் நிலையில் வைத்துள்ளது.
இது குறித்து நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் குழந்தைராஜ் கூறுகையில், ‘‘நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின்போது, ஊட்டி, குந்தா, குன்னூர் மற்றும் கோத்தகிரி போன்ற பகுதிகளில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இப்பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டால் உடனுக்குடன் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, மாவட்டத்தில் ஊட்டி, குந்தா ஆகிய பகுதிகளில் 7 பொக்லைன் (ஜேசிபி) வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தவிர, நிலச்சரிவு ஏற்படும் இடங்களில் உடனுக்குடன் மணல் மூட்டைகளை அடுக்கி போக்குவரத்தை சீரமைக்க 5 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
அதே போல், மணல் மூட்டைகளை அடுக்குவதற்காக ஆயிரம் சவுக்கு மரங்களும் வைக்கப்பட்டுள்ளது. மரங்களை அறுக்கும் இயந்திரங்கள் ஒவ்வொரு தாலுகாவிலும் இரண்டு வைக்கப்பட்டுள்ளது. இது தவிர சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள அனைத்து பகுதிகளிலும் சாலை பணியாளர்கள் மற்றும் தற்காலிக பணியாளர்கள் என 100 பேர் தயார் நிலையில் உள்ளனர்.

மேலும், ஊட்டி-கோத்தகிரி, ஊட்டி-குந்தா, குன்னூர்-குந்தா உட்பட அனைத்து முக்கிய சாலைகளிலும் உள்ள மோரிகள், கால்வாய்களில் தூர் வாரப்பட்டு மழை நீர் தடையின்றி செல்ல ஏற்றவாறு கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. வட கிழக்கு பருவமழையின் போது சாலைகளில் நிலச்சரிவு மற்றும் மண் சரிவு ஏற்பட்டால், உடனடியாக சீரமைக்கப்பட்டு சில மணி நேரங்களில் போக்குவரத்தை துவக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

The post வட கிழக்கு பருவமழையை சமாளிக்க உஷார் நிலையில் நெடுஞ்சாலைத்துறை appeared first on Dinakaran.

Tags : Highways Department ,North East Monsoon ,Ooty ,Northeast Monsoon ,Nilgiris district ,Highway Department ,Dinakaran ,
× RELATED துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலை...