×

நெல்லிக்குப்பம் ஆலை ரோடு மும்முனை சந்திப்பில் பேவர் பிளாக் சாலை சரியாக போடாததால் அடிக்கடி விபத்து

*வாகன ஓட்டிகள் கடும் அவதி

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் ஆலை ரோடு மும்முனை சந்திப்பில் பேவர் பிளாக் சாலை சரியாக போடாததால் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.சென்னை – கன்னியாகுமரி வரை சாலை விரிவாக்கம் செய்ய தொழில் தட திட்டத்தின் கீழ் கடலூர் கோண்டூரிலிருந்து மடப்பட்டு வரை 37 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.230 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது.

இதில் நெல்லிக்குப்பம் கீழ்பட்டாம்பாக்கம் போஸ்ட் ஆபீஸ் பேருந்து நிறுத்தத்தில் இருந்து, நெல்லிக்குப்பம் மெயின் ரோடு வரசித்தி விநாயகர் கோயில் பேருந்து நிறுத்தம் வரை 1 கிலோ மீட்டர் தூரம் சாலை குறுகலாக உள்ளதால் சரியான முறையில் அளவீடுகள் செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றிய பின்னர் சாலை அமைக்க வேண்டும் என அனைத்து கட்சியினர் மற்றும் பொதுநல கூட்டமைப்பினர், சமூக ஆர்வலர்கள் பலமுறை வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் விதமாக விநாயகர் கோயிலில் இருந்து கீழ்பட்டாம்பாக்கம் வரை ஒருபுறம் வடிகால் வாய்க்கால் அமைக்காமல் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வடிகால் வாய்க்கால் அமைக்கப்பட்ட பகுதிகளில் சாலை ஓரம் உள்ள நடைபாதையில் பேவர் பிளாக் கல் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில் கடலூர்- பண்ருட்டி சாலையில் ஆலை ரோடு மும்முனை சந்திப்பில் ஆலை ரோடு செல்லும் சாலையின் குறுக்கே மழைநீர் வடிகால் வாய்க்கால் அருகில் நடைபாதையில் பேவர் பிளாக் கல் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இப்பணியை பணியாளர்கள் சரியான முறையில் செய்யாததால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். வாகனங்கள் அவ்வழியே செல்லும்போது பேவர் பிளாக் கற்கள் பெயர்ந்து விடுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் செல்லும் போது விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளது.

ஆகையால் பெருமளவில் விபத்துக்கள் ஏற்படுவதற்கு முன்னதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு சாலை ஓரம் அமைக்கப்படும் கற்களை சரியான முறையில் பொருத்தி தரமாக பணி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

The post நெல்லிக்குப்பம் ஆலை ரோடு மும்முனை சந்திப்பில் பேவர் பிளாக் சாலை சரியாக போடாததால் அடிக்கடி விபத்து appeared first on Dinakaran.

Tags : Nellikuppam ,Dinakaran ,
× RELATED ஏடிஎம் அறை கதவு உடைக்கப்பட்டதாக காவல்துறைக்கு வந்த மர்ம போன்