×

வாழப்பாடி அருகே மாணவி காதலனின் தந்தை அடித்துக்கொலை

*அதிமுக நிர்வாகி உள்பட 2 பேர் கைது

வாழப்பாடி : வாழப்பாடி அருகே கல்லூரி மாணவி காதல் விவகாரத்தில், காதலனின் தந்தை அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அதிமுக நிர்வாகி உள்பட 2 பேரை கைது செய்த போலீசார், முன்னாள் பஞ்சாயத்து தலைவி உள்பட 2 பெண்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகேயுள்ள தென்னம்பிள்ளையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன் (50). இவரது மகன் பிரசாந்த்(26). பிஇ., பட்டதாரியான இவர், வேலை தேடிக்கொண்டு இருக்கிறார்.

அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவரது 18 வயது மகள், தனியார் கல்லூரியில் பிஏ 2ம் ஆண்டு படித்து வருகிறார். குணசேகரனும், முருகேசனும் உறவினர்கள் என்பதால், முருகேசன் மகளை பிரசாந்த் காதலித்து வந்துள்ளார். இந்த விவரம் இருவரது பெற்றோருக்கும் தெரிய வரவே, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் வாழப்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வந்தது. இதனை தொடர்ந்து, போலீசார் இருதரப்பினரையும் நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், கடந்த 8ம் தேதி இரவு, காதல் விவகாரம் தொடர்பாக, அவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்ேபாது முருகேசன், அவரது உறவினர்களான அதிமுக கிளை செயலாளர் சிவக்குமார், அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசி மற்றும் முத்தம்மாள் ஆகியோர் சேர்ந்து, குணசேகரன் மற்றும் பிரசாந்த்தை கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த இருவரையும், அக்கம் பக்கத்தினர் மீட்டு பெத்தநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவிக்கு பின்னர், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதனிடையே, நேற்று காலை சிகிச்சை பலனின்றி, குணசேகரன் உயிரிழந்தார். இதையடுத்து, ஏத்தாப்பூர் போலீசார், கொலை வழக்குப்பதிவு செய்து, முருகேசன் மற்றும் சிவக்குமார் ஆகியோரை கைது செய்தனர். மேலும், முத்தம்மாள், தமிழரசி ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளம்பெண் காதல் விவகாரத்தில், காதலனின் தந்தை அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post வாழப்பாடி அருகே மாணவி காதலனின் தந்தை அடித்துக்கொலை appeared first on Dinakaran.

Tags : Vazhapadi ,ADMK ,Vazhappadi ,
× RELATED தகாத உறவு காதலியின் கணவர் கொலை அதிமுக பஞ்சாயத்து தலைவர் கைது