×

கோபி அருகே சோகம் 3 மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தபோது தாய் உயிரிழப்பு

கோபி : கோபி அருகே கவுந்தப்பாடி 3 மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தபோது, மயங்கி விழுந்து தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
ஈரோடு மாவட்டம், கோபி அருகே பூமடை கவுண்டனூரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (55). விவசாயியான இவரது மகள் பூரணி பிஇ படித்து விட்டு பெங்களூரில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். பூரணி கல்லூரியில் படித்துபோது, கவுந்தப்பாடி அருகில் உள்ள சின்னியம்பாளையத்தை சேர்ந்த யுவராஜ் என்பவரின் மகன் மதன்குமார் (29) என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலை பூரணியின் பெற்றோர் ஏற்க மறுத்தனர்.

இதைத்தொடர்ந்து பூரணி கடந்த ஆண்டு பெற்றோர் எதிர்ப்பை மீறி மதன்குமாரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இருவரும் பெங்களூரில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை செய்து வந்தனர். இந்நிலையில் பூரணிக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்தது முதல் சின்னியம்பாளையத்தில் உள்ள கணவர் வீட்டில் குழந்தையுடன் வசித்து வந்தார்.

நேற்று பூரணி, குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக்கொண்டு இருந்துள்ளார். அப்போது, திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அவரது கணவர் மதன்குமார் வந்து பார்த்தபோது, பூரணி மயங்கி கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதைத்தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் உதவியுடன் பூரணியை சிகிச்சைக்காக கவுந்தப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், பூரணி ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதையடுத்து உயிரிழந்த பூரணியின் சடலத்தை பார்த்து உறவினர்கள் கதறி அழுததும், தாய்ப்பால் கொடுத்தபோது தாய் உயிரிழந்த சம்பவமும் நெஞ்சை உருக்குவதாக அமைந்தது.

The post கோபி அருகே சோகம் 3 மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தபோது தாய் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Gobi ,Kaunthappadi ,
× RELATED கோபி அருகே கோயில் திருவிழாவில்...