×

தஞ்சை ஈச்சங்கோட்டையில் உள்ள வேளாண் கல்லூரிக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயர் வைக்கப்படும்: பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தஞ்சை ஈச்சங்கோட்டையில் உள்ள வேளாண் கல்லூரிக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயர் வைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 3வது நாள் கூட்டம் சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்று வருகிறது.

சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். இந்நிலையில், சட்டப்பேரவையில் 110-விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், காலநிலை மாற்றம் இன்றைய உலகின் முக்கிய பிரச்சனையாக உள்ளது. காலநிலை மாற்றம் குறித்து 1969ம் ஆண்டிலேயே இந்திய அறிவியல் மாநாட்டில் எம்.எஸ்.சுவாமிநாதன் பேசியுள்ளார் என புகழாரம் சூட்டினார்.

வேளாண் கல்லூரிக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயர்:

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் குறித்து பேரவையில் அறிவிப்பு வெளியிடுவதில் பெருமையாக உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கருணாநிதி ஆட்சி காலத்தில் வேளாண் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டு உணவு உற்பத்தியில் புரட்சி செய்யப்பட்டது. வேளாண் ஆராய்ச்சி மையங்கள் உருவாக்கப்பட்டு, உணவு உற்பத்தியில் புரட்சி செய்த வெற்றிகரமான மாடலாக கலைஞர் மாடல் உள்ளது.

தஞ்சை ஈச்சங்கோட்டையில் உள்ள வேளாண் கல்லூரிக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயர் வைக்கப்படும். அதிக மதிப்பெண் பெறும் வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரில் விருது வழங்கப்படும். வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இனி டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண் கல்லூரி, ஆராய்ச்சி நிலையம் என அழைக்கப்படும் என தெரிவித்தார்.

 

The post தஞ்சை ஈச்சங்கோட்டையில் உள்ள வேளாண் கல்லூரிக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயர் வைக்கப்படும்: பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Agriculture College ,Eichangottai, Tanjore ,MS Swaminathan ,Chief Minister ,M K Stalin ,Chennai ,M. K. Stalin ,MS ,Swaminathan ,Agricultural College ,Thanjavur Echangottai ,Tanjore ,Eichangottai ,M.K.Stal ,
× RELATED வேளாண் மாணவர்கள் கிராமப்புற மதிப்பீடு