×

பாலஸ்தீனத்தை விழுங்கிய இஸ்ரேல்… ஹமாஸ் இயக்கத்தினர் நடத்தி வரும் போரின் பின்னணி!!

மேற்கு ஆசியாவில் உதுமானிய பேரரசின் ஆளுகையில் இருந்த பகுதிதான் பாலஸ்தீனம். முதல் உலக போர் முடிவுக்கு வரும் காலகட்டத்தில் உதுமானிய பேரரசை வீழ்த்தியது பிரிட்டன். இதனால், பாலஸ்தீனமும் பிரிட்டனின் ஆளுகையின்கீழ் வந்தது. அதுவரை தனிநாடு இல்லாமல் இருந்த யூதர்களுக்கு பாலஸ்தீனத்தில் புதிய நாடு ஒன்றை உருவாக்க பிரிட்டன் முடிவு செய்தது. இந்த திட்டத்தின்படி 1920களில் ஐரோப்பாவில் பல நாடுகளில் தங்கியிருந்த யூதர்கள் 90 ஆயிரம் பேர் பாலஸ்தீனத்தில் குடியமர்த்தப்பட்டனர்.

1941 முதல் 1945 வரை இரண்டாம் உலகப்போரின்போது, ஹிட்லரின் ஆளுகையில் இருந்த ஜெர்மனியின் நாஜி படையினர் யூதர் இனஅழிப்பை முன்னெடுத்தனர். சுமார் 60 லட்சம் யூதர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இந்த காலக்கட்டத்தில் உயிர் பிழைக்க ஏராளமான யூதர்கள் பாலஸ்தீனம் நோக்கி படையெடுத்தனர். இதைதொடர்ந்து யூதர்களுக்கு தனி நாடு என்ற தனது திட்டத்தை முழுமைபடுத்த பிரிட்டன் தீவிர முயற்சி எடுத்தது. விளைவு, ஐக்கிய நாடுகள் சபை பாலஸ்தீனத்தை பிரித்து அரபு நாடு, யூத நாடு என 1947ல் அறிவித்தது.

பாலஸ்தீனத்தில் 70 சதவீதம் உள்ள முஸ்லிம்களுக்கு 43 சதவிகித இடமும், 30 சதவீதம் உள்ள யூதர்களுக்கு மீதமுள்ள இடமும் சொந்தம் என பிரிக்கப்பட்டது. பாலஸ்தீனத்தைவிட்டு 1948 மே 14ம் தேதி பிரிட்டன் வெளியேற, யூதர்கள் இஸ்ரேல் என்ற தங்கள் நாடு உருவானதாக அறிவித்தனர். இந்த நாளை இன்று வரை பாலஸ்தீனர்கள் கருப்பு நாளாக அனுசரிக்கின்றனர். பாலஸ்தீனர்களுக்கும், இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே பல போர்கள் வெடித்தன. கரையானை போல் கொஞ்சம் கொஞ்சமாக பாலஸ்தீனர்களின் ஆளுகையின் உள்ள பகுதிகளை விழுங்க துவங்கியது இஸ்ரேல், வலுகட்டாயமாக பாலஸ்தீனர்கள் வசிக்கும் பகுதிகளில் புகுந்து அங்கு யூதர்களை குடியமர்த்துவது இஸ்ரேலியர்களுக்கு வாடிக்கை.

இதில் ஏராளமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். பலர் அகதிகளாக அண்டை நாடுகளில் குடியேறினர். ஒரு கட்டத்தில் இஸ்ரேலின் நிலப்பரப்பு பெரிதாகி, பாலஸ்தீன் நிலப்பரப்பு வரைபடத்திலேயே காணாமல்போகும் அளவுக்கு நிலைமை சென்றது. இன்று இஸ்ரேலின் பரப்பளவு சுமார் 21 ஆயிரம் சதுர கிலோ மீட்டர். ஆனால் பாலஸ்தீனர்களின் பகுதி வெறும் 6 ஆயிரம் சதுர கிலோ மீட்டர்தான். இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிராக முதலில் போர்க்கொடி தூக்கியவர் யாசர் அராபத். இவரது பாலஸ்தீன விடுதலை இயக்கத்துக்கு உலக நாடுகளின் அங்கீகாரம் கிடைத்தது. ஒரு கட்டத்தில் இஸ்ரேலுடன் சமரசமாக சென்றார்.

இதற்கிடையே, 1987ல் அஷ்ஷைகு அஹமது யாசீன் என்பவர் பாலஸ்தீனத்தில் ஹமாஸ் என்ற இயக்கத்தை தொடங்கி இஸ்ரேலுக்கு எதிராக அமைதியாக செயல்பட்டு வந்தார். ஆனால், யாசர் அராபத் இஸ்ரேலுடன் சமரசம் செய்து கொண்டதால், ஹமாஸ் இயக்கத்தினர் ஆயுதம் ஏந்தினர். இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீனர்கள் வசிக்கும் காசா பகுதி மீது தாக்குதல் நடத்துவது வழக்கம். காசாவை தங்கள் ஆளுகையின்கீழ் கொண்டு வந்த ஹமாஸ் இயக்கத்தினர் இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்தி வந்தனர். அதில் ஒரு கட்டமாக கடந்த சனிக்கிழமை வான்வழி, தரைவழி, கடல் வழியாக ஒரே நேரத்தில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர்.

The post பாலஸ்தீனத்தை விழுங்கிய இஸ்ரேல்… ஹமாஸ் இயக்கத்தினர் நடத்தி வரும் போரின் பின்னணி!! appeared first on Dinakaran.

Tags : Israel ,Palestine ,Hamas ,Western Asia ,Ottoman Empire ,First World War ,Ottomans ,Dinakaran ,
× RELATED அமெரிக்க டிரோனை ஹவுதி படையினர் சுட்டு வீழ்த்தினர்