×

கருணையின்றி தாக்குதல்.. காசாவுக்குள் குடிநீர், உணவு தடை.. மனித உரிமைகளுக்கு என்ன ஆனது..? : துருக்கி அதிபர் காட்டம்!!

ஜெருசலேம் : கருணையின்றி காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், மனித உரிமைகளுக்கு என்ன ஆனது என்று துருக்கி அதிபர் காட்டமாக தெரிவித்துள்ளார். கடந்த 7ம் தேதி இஸ்ரேல் மீது காசாவில் இருந்து ஹமாஸ் படையினர் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். சில நிமிடங்களில் 5,000த்திற்கும் ஏவுகணைகளை வீசி ஹமாஸ் நடத்திய தாக்குதலால் கொதிப்படைந்த இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் அமைப்பினர் கட்டுப்பாட்டில் உள்ள காசா மீது குண்டு மழை பொழிந்து வருகிறது. 5வது நாளாக போர் நீடித்து வரும் நிலையில், இஸ்ரேல் நடத்தி வரும் ஏவுகணை தாக்குதலால் கட்டிடங்கள் தரைமட்டம் ஆகி வருகின்றன.

காசா பகுதியில் குடிநீர், மின்சாரம், எரிபொருள் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை முடக்கிய இஸ்ரேல் ராணுவம் தற்போது தரை வழிதாக்குதலுக்கு தயாராகி வருவதாக அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. காசாவில் உள்ள குடியிருப்புகள், பள்ளிகள், அகதிகள் முகாம் உள்ளிட்ட இடங்களில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனிய குழந்தைகள் 91 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதனிடையே காசா பகுதிக்குள் உணவு, மருத்துவப் பொருட்களை கொண்டு வருவதற்கான கோரிக்கையை இஸ்ரேல் மறுத்தாததாக தகவல் வெளியாகி உள்ளது.

மறுபுறம், மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்க படைகளை குவிக்கத் தயாராக உள்ள அமெரிக்க அதிபர் பிடன், இஸ்ரேல் அதிபர் நெதன்யாகுவிடம் தொலைபேசியில் பேசி உள்ளார். மேலும் போருக்கு உதவும் வகையில் அமெரிக்காவின் ஆயுதங்களுடன் முதல் விமானம் இஸ்ரேலில் வந்து இறங்கி உள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவின் தலையீடு குறித்து கருத்து தெரிவித்துள்ள துருக்கி அதிபர் எர்டோகன், “அமெரிக்கா இஸ்ரேலுக்கு விமானம் தாங்கி போர்க்கப்பலை அனுப்பியிருக்கிறது. அமெரிக்காவுக்கு இஸ்ரேலில் என்ன வேலை. காஸாவிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் குண்டுமழை வீசுவதற்கே அமெரிக்கா இந்த வேலையில் இறங்கியிருக்கிறது.

காஸாவுக்குள் தண்ணீர் செல்லும் பாதைகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. மின்சாரமும் துண்டிக்கப்பட்டிருக்கிறது. அங்கிருக்கும் மருத்துவமனைகள் செயல்படும் நிலையில் இருக்கின்றனவா என தெரியவில்லை. துரதிர்ஷ்டவசமாக, வழிபாட்டுத்தளங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் என கருணையின்றி குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கிறது. உலகம் இதை அமைதியாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. யாரும் எதுவும் சொல்வதில்லை. மனித உரிமைகளுக்கு என்ன ஆனது..?,”எனத் தெரிவித்துள்ளார்.

The post கருணையின்றி தாக்குதல்.. காசாவுக்குள் குடிநீர், உணவு தடை.. மனித உரிமைகளுக்கு என்ன ஆனது..? : துருக்கி அதிபர் காட்டம்!! appeared first on Dinakaran.

Tags : Merciless ,Gaza ,President of ,Turkey ,Kattam ,Jerusalem ,Israel ,Dinakaran ,
× RELATED காசாவின் தெற்கு பகுதியான ரஃபா மீது...