திருவாடானை, அக்.11: திருவாடானை அருகே பயணி இறங்குவதற்கு முன்பு பஸ்சை எடுத்து விபத்தை ஏற்படுத்திய அரசு பஸ் டிரைவருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. திருவாடானை அருகே என்.மங்கலத்தை சேர்ந்தவர் பூசத்துரை(60). இவர் கடந்த 2018ம் ஆண்டு ஜூலை மாதம் கோயமுத்தூருக்கு சென்று விட்டு தேவகோட்டையில் இருந்து வெள்ளையபுரம் செல்லும் அரசு டவுன் பஸ்சில் ஊருக்கு திரும்பிச் சென்றுள்ளார்.
அப்போது என்.மங்கலம் பூவாயி அம்மன் கோயில் அருகே பேருந்து நிறுத்தத்தில் நின்றபோது பூசத்துரை கீழே இறங்கியுள்ளார். ஆனால் அவர் இறங்குவதற்குள் டிரைவர் பேருந்தை எடுத்து விட்டார். இதில் பூசத்துரை கீழே விழுந்ததில் பின்பக்க தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தார். இதுகுறித்து பூசத்துரையின் மனைவி சவுந்தரவல்லி எஸ்பி.பட்டினம் போலீசில் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் அரசு பேருந்து டிரைவர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த முருகன்(50) மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு திருவாடானை மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரணை செய்த மாஜிஸ்திரேட் பிரசாந்த் டிரைவர் முருகனுக்கு 6 மாதம் சிறை தண்டனையும். ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
The post விபத்தில் முதியவர் சாவு; பஸ் டிரைவருக்கு சிறை appeared first on Dinakaran.
