×

தேவர் தங்க கவசத்தை ஓபிஎஸ்சிடம் வழங்க மறுப்பு: அதிமுக பொருளாளரிடம் ஒப்படைக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு

மதுரை: தேவரின் தங்கக்கவசத்தை ஓபிஎஸ்சிடம் வழங்க மறுத்து, அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனிடம் ஒப்படைக்க ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு 13 கிலோ தங்கக்கவசத்தை ஜெயலலிதா வழங்கினார். இந்த தங்கக்கவசம் மதுரை அண்ணாநகர் வங்கி லாக்கரில் அதிமுக பொருளாளர் பெயரில் உள்ளது. இதைதங்களிடம் ஒப்படைக்கக் கோரி திண்டுக்கல் சீனிவாசன் தரப்பில் கடந்தாண்டு ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்யப்பட்டது. இந்த மனுவை கடந்தாண்டு விசாரித்த நீதிபதி, ‘‘மதுரை டிஆர்ஓ கையெழுத்திட்டு தங்கக்கவசத்தை பெறவும், அவரிடம் இருந்து ராமநாதபுரம் டிஆர்ஓ கவசத்தை பெற்று விழா முடிந்ததும் திரும்ப கொண்டு வர வேண்டும்’’ என இடைக்கால உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் திண்டுக்கல் சீனிவாசன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட துணை மனுவில், ‘‘கட்சியின் பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டது செல்லும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். எனவே, தங்கக்கவசத்தை என்னிடம் ஒப்படைக்குமாறு வங்கிக்கு உத்தரவிட வேண்டும்’’ என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. பின்னர் ஓபிஎஸ் தரப்பில் வாதிடும் போது, ‘‘2014 முதல் 2021 வரை வங்கியிலுள்ள தேவர் தங்கக்கவசத்தை ஓபிஎஸ் தான் பெற்றார். எனவே, எங்களிடம் தான் தங்க கவசத்தை ஒப்படைக்க வேண்டும்’’ என கூறப்பட்டது. இபிஎஸ் தரப்பில், ‘‘ அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை வங்கியில் அதிமுக பொருளாளர் தான் ஒப்பந்தம் செய்துள்ளார். எனவே, அவரிடம் தான் ஒப்படைக்க வேண்டும்’’ என வாதிட்டனர். இதையடுத்து நீதிபதி, ‘‘ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஒருங்கிணைப்பாளர் பதவி ரத்து செய்யப்பட்டு புதிய ெபாதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் ஓபிஎஸ் தரப்புக்கு சாதகமாக எந்த உத்தரவும் இல்லை. தேவர் தங்கக்கவசம் குறித்து வங்கிக்கும், அதிமுக பொருளாளருக்கும் இடையே தான் ஒப்பந்தம் உள்ளது. எனவே, தேவர் தங்க கவசத்தை அதிமுக பொருளாளரான திண்டுக்கல் சீனிவாசனிடம் ஒப்படைக்க வேண்டும்’’ என உத்தரவிட்டார்.

The post தேவர் தங்க கவசத்தை ஓபிஎஸ்சிடம் வழங்க மறுப்பு: அதிமுக பொருளாளரிடம் ஒப்படைக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Dewar ,OPSC ,Madurai ,ICourt ,AIADMK ,Devar ,Treasurer ,Dindigul Srinivasan ,
× RELATED பெரியார் பஸ் ஸ்டாண்ட் வணிக வளாக...