×

எந்த பணியிடங்களையும் உருவாக்காமல் அதிமுக ஆட்சியில் 130 மருத்துவமனைகளின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரபரப்பு குற்றச்சாட்டு

* அதிமுக எம்எல்ஏ விஜயபாஸ்கர் எதிர்ப்பால் சட்டப்பேரவையில் கூச்சல்-குழப்பம்

சட்டப்பேரவையில் ேகள்வி நேரத்தின் போது கந்தர்வகோட்டை எம்எல்ஏ மா.சின்னத்துரை (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) பேசுகையில், “கந்தர்வகோட்டை தொகுதி கறம்பக்குடியில் தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு, 8 ஆண்டுகள் கடந்த பின்பும் கூட, மருத்துவர் கூடுதலாக நியமிக்கவில்லை. செவிலியர் நியமிக்கவில்லை” என்றார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில்,‘‘ ஓர் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டதற்கு பிறகு, தரம் உயர்த்தப்படுகிறபோதே கட்டமைப்பை மேம்படுத்துவதும் அங்கே எந்தளவுக்கு பணியாளர் வேண்டும் என்பதை ஒரு அரசாணை வெளியிட வேண்டும். ஆனால், கடந்த காலத்தில் 130 மருத்துவமனை தமிழ்நாடு முழுவதும் இதுபோல் தரம் உயர்த்த அரசாணையை வெளியிட்டனர். முதல்வரின் ஆலோசனைகளைப் பெற்று, அந்த பணியிடங்களை நிரப்புவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார்.

அமைச்சரின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கோஷம் எழுப்பினர். இதனால், அவையில் சிறிது நேரம் கூச்சல்- குழப்பம் ஏற்பட்டது. சி.விஜயபாஸ்கர்: எந்த மருத்துவமனையில் பெயரளவிற்கு, பெயர் பலகையை மட்டும் மாற்றி இவர் சொன்ன கறம்பக்குடியில் ரூ. 2 கோடி அளவிற்கு கட்டிடம் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. 25 நாட்களாக, அங்கே மருத்துவர் இல்லையென்று பொதுமக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அமைச்சர் அங்கு மருத்துவர்களை நியமித்தால், நான் பாராட்ட தயாராக இருக்கிறேன்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன்: ஒரு மருத்துவமனையை தரம் உயர்த்துவது என்பது கட்டிடங்களை கட்ட வேண்டும். மருத்துவர்கள் புதிதாக நியமிக்க வேண்டும். ஒரு ஆரம்ப சுகாதார நிலையமாக இருக்கும் போது ஒரு மருத்துவர், 2 மருத்துவர் இருப்பார்.

வட்டார மருத்துவமனையாக தரம் உயர்த்தும் போது 7, 8 மருத்துவர் தேவைக்கேற்ப நியமிக்கப்படுவார்கள். அந்த மருத்துவப் பணியிடங்களை உருவாக்க வேண்டும். இந்த மாதிரி, எந்த மருத்துவப் பணியிடத்தையும் உருவாக்காமல், 130 மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்பட்டது. 130 மருத்துவமனைக்கான பட்டியலை தங்களிடத்தில் தருகிறேன். உறுப்பினரிடத்தில் தந்து, இதையெல்லாம் அவரே ஆராய்ந்து, இத்தனை மருத்துவமனைகளை தரம் உயர்த்தியிருக்கிறோமே இவைகளுக்கு மருத்துவர், செவிலியர், மருத்துவம் சார்ந்த களப் பணியாளரை நியமித்திருக்கிறோமா என்பதை அடுத்த கூட்டத்திலோ அல்லது நாளையதினமே (இன்று) கூட அவர் தாராளமாக பதில் சொல்லலாம்.

The post எந்த பணியிடங்களையும் உருவாக்காமல் அதிமுக ஆட்சியில் 130 மருத்துவமனைகளின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரபரப்பு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Minister ,M. Subramanian ,MLA ,Vijaya Bhaskar ,Legislative Assembly ,Gandharvakota ,M. Chinnathurai ,ADMK ,Dinakaran ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...