×

9.24 லட்சம் பேர் மேல் முறையீட்டு மனு விடுபட்ட மகளிர் விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்

சென்னை: மகளிர் உரிமை தொகை திட்டத்தில், விடுபட்ட மகளிர் விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். தமிழ்நாடு சட்டப் பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டுள்ள தகுதி வாய்ந்தவர்களுக்கும் உரிமைத் தொகையை வழங்கக் கோரி உறுப்பினர்கள் நாகை மாலி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), பிரின்ஸ் (காங்கிரஸ்), ஆர்.பி.உதயகுமார் (அதிமுக) ஆகியோர் பேசினர்.

திருமங்கலம் ஆர்.பி.உதயகுமார்(அதிமுக): மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் 2 கோடியே 50 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அதில், 59 லட்சம் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. திமுக தேர்தல் அறிக்கையில், மகளிர் உரிமைத் தொகை அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் வழங்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், தகுதிவாய்ந்த பலர் விடுபட்டுள்ளனர். வசதிபடைத்தவர்கள் அதில் இடம் பெற்றுள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின்: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ஒரு கோடி மகளிருக்கு கொடுப்போம் என்று கூறினோம். ஆனால், ஒரு கோடியே 6 லட்சத்துக்கு மேல் வழங்கியுள்ளோம். 9 லட்சத்துக்கும் அதிகமாக மேல்முறையீட்டு மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அவை பரிசீலனை செய்யப்படும். தகுதி வாய்ந்தவர்களை கண்டறிந்து, ரூ.1,000 கண்டிப்பாக வழங்கப்படும். உறுப்பினரிடம் கோரிக்கை வந்தால் அதை தாருங்கள். அதிமுக, திமுக என்றில்லை எந்த கட்சியாக இருந்தாலும் கட்சி பாகுபாடு இல்லாமல் உறுதியாக வழங்கப்படும்.

ஆர்.பி.உதயகுமார்: முதலில், அனைத்து மகளிருக்கும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின்: யார் யாருக்கு வழங்க வழங்க வேண்டும் என்பது குறித்து கள ஆய்வு செய்து, தகுதி வாய்ந்த மகளிரை தேர்வு செய்து அதன் பின்னரே வழங்கப்பட்டுள்ளது. ஆர்.பி.உதயகுமார்: மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு விண்ணப்பித்த 60 லட்சம் பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. எனவே, விதிமுறைகளை தளர்த்தி உதவித் தொகை வழங்க வேண்டும். முதல்வர் மு.க.ஸ்டாலின்: தகுதிவாய்ந்த யாராவது விடுபட்டிருந்தால், என்னிடம் கூட வேண்டாம், மாவட்ட கலெக்டரிடம் விவரத்தை தெரிவியுங்கள். உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நிறைவாக, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விவாதங்களுக்கு பதில் அளித்து பேசியதாவது: 2 லட்சத்து 6 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களும், 4 லட்சத்து 72 ஆயிரம் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெற்றுள்ளன. இன்றைக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழும் திருநங்கைகள் பயனடையலாம் என்று முதல்வர் அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் இதுவரை 9 லட்சத்து 24 ஆயிரம் மேல்முறையீட்டு மனுக்கள் வந்துள்ளன. இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட வருவாய் கோட்ட அலுவலர் ஆய்வு செய்து நவம்பர் 30ம் தேதிக்குள் உரிய தீர்வினை அளிப்பார்கள். இந்த மேல்முறையீட்டு பணிகளை மேற்கொள்ள வருவாய் கோட்ட அலுவலர்களுக்கு வரும் 12ம்தேதி (நாளை) சிறப்பு பயிற்சி முகாம் நடத்தப்படவுள்ளது. அதுமட்டுமல்ல, ஏற்கனவே விண்ணப்பிக்காத பயனாளிகளும் இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், விண்ணப்ப தகுதியை பெறுகிற அனைத்து மகளிரும் பயனடையும் வண்ணம் இந்த அரசு செயல்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post 9.24 லட்சம் பேர் மேல் முறையீட்டு மனு விடுபட்ட மகளிர் விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,Udayanidhi Stalin ,Chennai ,Udhayanidhi Stalin ,
× RELATED கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம்...